Thursday, December 31, 2015

புண் உமிழ் குருதி - சுகுமாரன்


          
புதிய நூற்றாண்டில் நவீன தமிழ்க் கவிதையுலகுக்கு அறிமுகமான குறிப்பிடத்தக்க கவிஞர்கள் சிலரில் இசையும் ஒருவர். ஒருவர் மட்டுமல்ல. முக்கியமான ஒருவர். இசையின் கவிதைகளைத் தவிர்த்து விட்டு தற்காலக் கவிதை பற்றிய சித்திரத்தைத் தீட்ட முடியாது என்ற அளவுக்கு முக்கியமானவர்.

நவீன கவிதை உச்சநிலையிலிருந்த சென்ற நூற்றாண்டின் எழுபது எண்பதுகளில் அரங்குக்கு வந்த கவிஞர்களுக்கு இலக்கிய அடிப்படையிலான சலுகையொன்று இருந்தது. அதுவரை எழுதப்பட்டு உருவான கவிதை மொழியைப் பின் பற்றி தொடக்க காலக் கவிதைகளை எழுதி விட முடிந்தது. முன்னோடிக் கவிஞர் ஒருவரின் சாயலில் எழுதிப் பார்த்து விட்டுத் தன்னுடையதான பிரத்தியேக கவிதைமொழியை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. ஆத்மாநாமையே எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். ஆரம்ப காலக் கவிதைகளில் அன்று எல்லாரின் கவனத்துக்கும் உரியவராக இருந்த ஞானக்கூத்தனின் சாயல் தெரிந்தது. அவரது தொடக்க காலக் கவிதைகளில் ஒன்றான 'இன்னும்' என்ற கவிதையில் இதைப் பார்க்கலாம்.
'புறாக்கள் பறந்து போகும்
 கழுத்திலே வைரத்தோடு
 கிளிகளும் விரட்டிச் செல்லும்
 காதலின் மோகத்தோடு' என்று தொடங்கும் கவிதை பாடுபொருளிலும் கூறுமுறையிலும் பின்பற்றும் சந்த ஒழுங்கிலும் ஞானக்கூத்தன் கவிதைகளின் சாயலைக் கொண்டது என்பதை எளிதாகக் காணமுடியும். அந்தப் பாதிப்பிலிருந்து மிக விரைவில் விடுபட்டு தனது மொழியை, தனது உலகை முன்வைக்கும் தனது கவிதையைக் கண்டடைந்தார் என்பது வெளிப்படை. பின்வந்த கவிஞர்களில் சிலர் முன்மாதிரியாகக் கொள்ளும் கவிதைகளை உருவாக்கினார் என்பது உண்மை.

தொண்ணூறுகளில் எழுத வந்தவர்களுக்கு இந்தச் சலுகை அல்லது தேவை இருக்கவில்லை. படைப்பு சார்ந்த உரையாடல்களை விடக் கோட்பாடுகளை முன்னிருத்திய விவாதங்களே பொருத்தபாடுடையவையாக இருந்த அந்தக் காலப் பகுதி அதற்கான வாய்ப்பை அளிக்கவில்லை. முன்னோடியான கவிஞர்களின் கவிதையாக்கம் பற்றிய ஆக்கபூர்வமான உரையாடல்கள் நிகழாதிருந்த தருணத்தில் புதிய கவிஞன் தனக்கான கவிதையைக் கண்டுபிடிக்க வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டான். இது ஒருவகையில் சுதந்திரம்; ஒருவகையில் சிக்கல். சுதந்திரமாக உணர்ந்த கவிஞர்கள் எந்த முன்மாதிரியுமில்லாத தமக்கான கவிதையை முன்வைத்தார்கள். சிக்கலாக உணர்ந்தவர்கள் வழித் தோன்றலான ( Derivative) கவிதைகளை உற்பத்தி செய்தார்கள். இன்றைய கவிதைப் பரப்பு பெரும்பாலும் வழித் தோன்றல் கவிதைகளின் கிடங்காக இருப்பது நடைமுறைச் சாபம்.

தொண்ணூறுகளின் பிற்பகுதியிலும் இரண்டாயிரத்தையொட்டிய முற் பகுதியிலும் அறிமுகமான கவிஞர்களிடம் ஒரு தொடர்ச்சியின்மை அல்லது புதிய ஆரம்பம் தென்படுகிறது. பெண்ணியக் கவிதைகள், தலித்தியக் கவிதைகள் இவற்றுக்கு முன் மாதிரிகள் இல்லை. இந்தச் செயல் அதுவரை ஆகி வந்த கவிதைப் போக்கையும் வலுவாகப் பாதித்தது. அந்தப் பாதிப்பை இந்தச் சுதந்திரமே அல்லது தொடர்ச்சியின்மையே சமன் செய்தது.  அதுவரை நிலுவையிலிருந்த கவிதையாக்க முறையுடன் கிஞ்சிற்றும் தொடர்பில்லாத புதிய கவிதைமொழியை முன்வைத்த முகுந்த் நாகராஜனை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். தொடர்ந்து எழுதி வந்த மூத்த கவிஞர்களின் கவிதைப் போக்கிலும் இது மாற்றத்தை ஏற்படுத்தியது. கலாப்ரியா, கல்யாண்ஜியின் அண்மைக் காலக் கவிதைகள் எடுத்துக் காட்டு.இந்தத் தொடர்ச்சியின்மை வழங்கிய சுதந்திரமான இடத்தில் செயல்படுகிறவர் களையே இன்றைய கவிஞர்களில் முக்கியமானவர்களாகக் கருதலாம். அவர்களில் இசையும் ஒருவர். 'யாரைப் போலவும் அவர் எழுதவில்லை. இசை இசையைப்போல எழுதுகிறார். அதனாலேயே தனித்துவம் மிக்க முக்கிய கவியாக நிலைபெறுகிறார்' என்ற பிரபஞ்சனின் நற்சான்று ( அந்தக் காலம் மலையேறிப் போனது - தொகுப்பின் முன்னுரை ) இந்த இடத்திலிருந்து ஆகி வந்த கூற்று என எண்ணலாம். இசையின் செயல்பாட்டுக் களம் இந்த இடம் என்று குறிப்பிடலாம்.

சை கவிதைகளின் முக்கியத்துவம் அவை எடுத்த எடுப்பிலேயே தற்காலக் கவிதைகளின் பொருத்தப்பாட்டுடன் வெளிப்பட்டன என்பது. அதிகம் யாருடைய கவனத்திற்கும் சென்றிராத அவரது முதல் தொகுப்பு ' காற்று கோதும் வண்ணத்துப் பூச்சி' ( 2002 ). அதில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் பெரும்பான்மையும் தற்காலக் கவிதையின் பொருத்தப்பாட்டில் அமைந்தவை. முற்காலக் கவிதைகளின் அலகுகளையோ அணிகளையோ ஏற்காதவை. நேரடியான மொழிதல் மூலம்  கவிதையானவை. 'நாளை என்பது...' என்ற கவிதையில் கவிதைக்குரிய எந்த அலகுகளும் இல்லை. உணர்வு சார்ந்த மொழிதல் மூலமே அந்த வரிகள் கவிதையின் முறுக்கைப் பெறுகின்றன.
நாளை என்பது
எவ்வளவு பெரிய நகைச்சுவை.
நாளை என்பது
எவ்வளவு பெரிய மடமை
நாளை என்பது
எவ்வளவு பெரிய பொய்.
இந்த வரிகளில் கவிதைச் செறிவூட்டப்பட்ட ஒரு சொல்லும் இல்லை. ஆனால் மொத்தத்தில் ஒரு கவிதையாக எழும்புகிறது.இது அவருடைய சிறந்த கவிதைகளில் ஒன்றல்ல; ஆனால் அவரது பிந்தையகவிதைகளின் இயல்பைச் சொல்லும் தடயங்கள் கொண்டது.

இசையின் இன்னொரு முக்கியத்துவம் அவரது கவிதைகள் நிகழ்காலத்தைச் சொல்லுபவை. கவிதை எப்போதும் நிகழ்காலம் சார்ந்ததுதான். எனினும் அது வெளிப்படும் விதத்தில் தற்காலம் சார்ந்ததாக மாறிவிடுகிறது. கவிஞன் தேர்வு செய்யும் சொற்கள், அவை உருவாக்கும் வரிகள். அவற்றில் ஆகத் தொகையான தொனி ஆகியவற்றின் மூலம் அது நிகழ் காலத்தைப் பற்றிப் பேசினாலும் அதை விட நீட்சி கொண்ட தற்காலத்தைப் பேசுவதாக  மாறுகிறது.
'கட்டிப் பிடித்து முத்தமிடவா முடியும்.
காப்பி குடிக்கலாம் வா'  என்ற தேவதேவன் கவிதை வரி ஒரு நிகழ்கால அனுபவம். ஆனால் அது கவிதையாக விரிந்த தற்காலத்துக்குரியதாகிறது. இது நிகழ்கால அனுபவம். ஆனால் அதைச் சொன்ன முறையில் தற்காலம் முழுவதற்கும் பொருந்தும் ஒன்றாக உருமாறுகிறது. நிகழ் காலத்தைக் கடக்கும் சொற்கள் மூலம் அந்தப் பொருத்தப்பாட்டைக் கைக்கொள்கிறது.

நிகழ்கால அனுபவங்கள்தாம் இசையின் கவிதைகளில்  இடம் பெறுகின்றன. அவை அந்த நிகழ்கால உணர்வுடனும் நிகழ்காலச் சொற்களுடனுமே அமைகின்றன. ஒரு நிகழ்காலத்தையே தற்காலமாக விரிக்கின்றன. 'டம்மி இசை' என்ற கவிதையின் முடிவு வரிகள் இப்படி. 'நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் பிரபஞ்சத்துக்கு வெளியே இருக்கிறார்'. இது நிகழ்காலத்தின் தாக்கம் பெற்ற உணர்விலிருந்து நிகழ்காலச் சொற்களிலேயே அமைகிறது. இந்த நிகழ்காலத்தை நிகழ்காலமாகவே நிலைநிறுத்துகிறார் இசை. அதை நிலைநிறுத்துவதற்காக நிகழும் மொழியையும் அதற்கான பொழுதையும் அவற்றுடன் உறவு கொண்ட சம்பவங்களையுமே கவிதைகளில் கையாளுகிறார். துலக்கமாகச் சொன்னால், தமிழ் வாழ்வில் ஒருவன் எதிர்கொள்ளும் அனுபவங்களை அதன் பிசுக்குடனும் மெருகுடனும் கவிதைகளுக்குள் கையாளுகிறார். கவிதைக்கென்று செப்பனிடப்பட்ட சொற்களை இந்தக் கவிதைகள் அநேகமாக ஏற்றுக் கொள்வதில்லை. 'நைஸ்' என்று ஒரு கவிதைக்கு கவிதைத்தன்மையில்லாத தலைப்பை வைப்பது மட்டுமல்ல கவிதை முழுவதுமே 'நைஸ்' என்ற பிறமொழிச் சொல்லைப் பயன்படுத்துகிறார். இந்தக் கவிதையின் வரிகளில் ஒன்று இப்படி.
இந்த நைஸிற்குத்தான்
மணிமுடிகள் சரிந்தனவா?
முனிகள் பிறழ்ந்தனரா?'. இதை செம்மையான கவிதை மொழியாக்கி 'இந்த மென்மைக்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவா? முனிகள் பிறழ்ந்தனரா?' என்று வாசிக்கும்போது அதில் குடியிருக்கும் கவிதை சொல்லாமல் விடை பெற்றுக் கொள்கிறது. இது மொழிசார்ந்த ஒன்றல்ல; கவிஞன் தனது நிகழ்காலத்தின் குரலுக்குச் செவிசாய்க்கும் செயல்.

சையின் கவிதைகள் நிகழும் இடங்களும் பிரத்தியேகமானவை அல்ல; பொதுவானவை. அங்கே நிகழ்பவற்றில் வெளித் தெரியாமலிருக்கும் பிரத்தியேகமான ஏதோ ஒன்றை வெளிக் கொணர்வதுதான் கவிதையின் செயலாகிறது. 'நல்லறம் வீற்றிருக்கும் டோக் நகர்' மதுரையின் ஒரு குடியிருப்பு. அங்கே மின் கம்பம் அறுபது டிகிரி சாய்ந்து வளைந்து வணக்கம் சொல்லும் விந்தைதான் கவிதையாகிறது. வாகனங்கள் விரையும் பெருஞ்சாலைக்கு எந்த கவிதை மகத்துவமும் இல்லை. டிரைவரின் கட்டளைக்குப் பணிந்து வழி வேண்டி நீளும் சாம்பற் கையின் அபிநயமே கவிதையின் கவனிப்புப் பொருளாகிறது. திரைப்படம் ஓடாத லட்சுமி டாக்கீஸ் , ஒரு புராதன கட்டடம்.இன்று தொழிற்கூடம். ஆனால் அதற்குள் பத்தினி ஒருத்தியின் இடைக்குரல் ஒலிப்பதனால் மட்டுமே அது கவிதைக்குரிய இடமாகிறது.இசையின் கவிதையுலகம் தனிமையானதல்ல. சமகாலக் கவிதையில் இந்த அளவு மனிதர்கள் திரண்டிருக்கும் உலகம் வேறில்லை. சமகாலப் பண்பாட்டு உலகின் எல்லாப் பிரமுகர்களும் பிரமுகரல்லாதவர்களும் முண்டியடிக்கும் அரங்கு இது. சிவாஜி கணேசன், டி. ஆர். மகாலிங்கம். ஸ்வர்ணலதா, இளையராஜா, வாணிஸ்ரீ. க்ரிஸ் கெய்ஸ், அனுராதா ஸ்ரீராம், ஷகீலாக்களுடன் நச்சினார்க்கினியர், எச்.ஜி. ரசூல், கலாப்ரியா, கல்யாண்ஜி, லீனா மணிமேகலை, ஜான் சுந்தர், இளங்கோ கிருஷ்ணன்களும் கேரி பேக்கில் தேநீர் கொண்டு செல்லும் பைத்தியம், நிச்சலனத்தில் மல்லாந்திருக்கும் பாரதியின் பராசக்தியும் நிரம்பியிருக்கும் உலகம். அங்கே பல்ஸர்களும்  விமானங்களும் பறக்கின்றன. ஸ்கூட்டிகளும் படகுகளும் மிதக்கின்றன. ஒரு சொட்டு மௌனத்தால் நிரம்பும் கிணறும் காதல் ஏறியிறங்கி விளையாடும் மலையும் இருக்கின்றன. இதோ இருக்கிறேன் என்று எம்பிக் கையுயர்த்தும் குள்ளமான காதலும் நூற்றாண்டுப் பசியும் இருக்கின்றன. சமகால நவீன கவிதையில் மனிதர்களும் பொருட்களும் பொழுதுகளும் இடங்களும் திணிந்த பேருலகம் இசையுடையது.

அங்கதம் அல்லது பகடியே இசை கவிதைகளின் மைய உணர்ச்சி என்று சிலாகிக்கப்படுகிறது. இது உண்மை; அதே சமயம் உண்மையல்லாதது. இந்த நோக்கில் இசையின் கவிதைகளுக்குத் தமிழ்ப் புதுக் கவிதை மரபில் ஒரு தொடர்ச்சியைக் கண்டுபிடிக்க முடியும். சி.மணி. ஞானக்கூத்தன் கவிதைகளின் வரிசையில் வைத்துப் பார்க்கும்போது விட்டகுறைச் சாயலைக் காணலாம். சி.மணியின் அங்கதம் வெறும் இடித்துரைப்பு. ஞானக்கூத்தனின் அங்கதம் சமகால வாழ்வின் மீதான கவி விமர்சனம். ஆத்மாநாமின் ஓரிரு கவிதைகளில் மிளிரும் கண்ணீரின் பளபளப்புள்ள பகடியின் தூரத்துச் சொந்தம் இசையின் பகடி.
உங்கள் காலைத் தொழுகை முடிந்ததா?
அவ்வளவுதான் உம் உணவு
ஊர் சுற்றாமல் 
ஒழுங்காய்ப் போய்த் தூங்குங்கள்  என்று கண்ணீர் பளபளக்கச் சொல்கிறது ஆத்மாநாமின் கவிதை.
உன் கண்ணில் நீர் வழிந்து
உன் நெஞ்சிலேயேதான் உதிரமும் கொட்ட வேண்டும் என்று தன் தலையை அரிந்து மடியில் போட்டுக் கொண்டு கோதி விடும் அபாயகரமான பகடிதான் இசையுடையது. எளிய வாழ்வின் சிக்கலான தருணங்களைத் தார்மீகச் சீற்றத்துடன் பார்க்கும் இன்றைய கவி மனதின் புண் உமிழ் குருதிதான் இசையின் கவிதை. அது வெறும் அங்கதமோ பகடியோ மட்டுமல்லவே?

                                          ( நன்றி : ஆத்மாநாம் விருது மலர்-2015)

Monday, December 28, 2015

ஊக்கமுடைமை


                  அ)

சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில்
வண்டியைப் போட்டு விட்டு
பேருந்தேறினேன்.
இமயம் தொட்டுவிடும் தூரம் தான் !

ஆ)

   உடல்முழுக்கச்  சிராய்த்துக்கொண்டு
  மரமேற கற்றுக்கொண்டு விட்டேன்.
  எவரேனும்
  இந்த “ ஜெயக்கனியை” கண்டீரா?

இ )

       தொறந்தடிச்சு
       விழுந்ததொரு மதகரி
       தொட்டதோர் காணாக்கடி.