Thursday, November 5, 2015

மொழி         
 “ feel good movies” என்கிற பதத்துடன் கூடவே நினைவில் எழும் படங்களில் பிரதானமானது “மொழி”. பிருத்விராஜின் முகத்திலும், கொஞ்சு தமிழிலும் இயல்பிலேயே ஒரு “feel good “ உண்டு. ஆனால் படத்துக்கு இந்த மென் உணர்வை வழங்கும் காரணி எதுவென்று அவ்வளவு தீர்க்கமாக சொல்ல முடியவில்லை. ஒரு வேளை அது ஒன்றாக இல்லாமல் பலவாக இருக்கலாம். ஒருவர், “ சாலையின் கறுப்பு-வெள்ளை கோடுகளை கீ- போர்டாக்கி ஆடும் நடனத்தில் மகிழ்ந்தாரெனில், இன்னொருவர் அந்த உயர்தர அப்பார்ட்மெண்ட் வீட்டின் கலையழகிலும், அந்த “ bean bag “ –ன் சொகுசிலும்” மயங்கி இருக்கலாம். ஓர் ஊமைப்பெண்... அவளைக் கண்டு காதலுற்று பிரிந்து வருந்தி கடைசியில் சுபமாக கைபிடிக்கும் ஒரு இசைக்கலைஞன்.. இவர்கள் இருவரைப்பற்றிய படம் என்று எளிமையாக சொல்லலாம். அவன் சாதாரண மொழியில் புழங்குபவன் கூட அல்ல, இசையின் மொழியில் புழங்குபவன்.. அவளோ பேசவே முடியாதவள் எனும் போது படத்தின் கனம் கூடுகிறது. அம்மாவையும் தன்னையும் நிராதரவாக விட்டுவிட்டு அப்பா வேரொருத்தியோடு போய்விடும் போது, ஸ்தம்பித்து போகிறாள் நாயகி. + 2 படிக்கும் தன் பையன் சாலை விபத்தில் பலியான 1984 –லேயே ஸ்தம்பித்து நின்று விடுகிறார் ஒரு “professor “. இருவரும் இந்த வாழ்க்கைக்கு எதிராக முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள். படம் முடியும் தறுவாயில் ”பெரிய அழுகைக்குப்” பின் இந்த இருவரும் ஸ்தம்பித்தலில் இருந்து இயக்கத்திற்கு வருகிறார்கள்.மொழி படத்தை இப்படி பார்க்கையில் இன்னும் ரசமாக தோன்றுகிறது.
          படத்தில் ஜோதிகா, ப்ரித்வி, பிரகாஷ்ராஜ் அனைவரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ஜோதிகா ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்களெனினும், என் தனிப்பட்ட ரசனையில் “மொழி” என்றவுடன் நினைவுக்கு வருவது எம்.எஸ்.பாஸ்கரின் முகம்தான். கூடவே “ mark my words “ என்கிற புரபெசர் தனமான வசனமும். முதல் காட்சியில் தொடங்கி படம் முடியும் வரை ரசிக்கும்படியான நகைச்சுவைத்துணுக்குகளை தாராளமாக வைத்துள்ளார் விஜி. கூடவே, படத்தின் கதையோட்டத்திற்கு துணை செய்யும், அதன் மென்மைத்தன்மையை போற்றிப் பாதுகாக்கும் வசனங்களையும் குறிப்பிட வேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் தனக்கு எந்த மாதிரி மனைவி வேண்டும் என்பது பற்றி நாயகன் நாயகியிடம் உரையாடும் காட்சியின் வசனங்களை சொல்லலாம். அக்காட்சியில் “ அவ என்ன புரிஞ்சிருக்கறவளா இருந்தாவே ...என்னோட இசை அவளுக்கு புரிஞ்சிறும்..” என்று தீர்க்கமாக சொல்கிறார் ப்ரித்வி. இவ்வசனத்தை இந்த வாழ்க்கையின் குளறுபடிகளுக்குள் போட்டு குழப்பிக்கொள்ளாமல் “கேட்க நன்றாக இருக்கிற படியால்” ரசிக்கலாம்.
    பாஸ்கரின் பாத்திர படைப்பிற்காகவும், அப்பாத்திரத்தை மைய பாத்திரமான நாயகிக்கு அருகே, அதே அளவு கனத்துடன் படைத்த நேர்த்திக்காகவும் ராதாமோகனுக்கு என் ப்ரியங்கள்.
                                 நன்றி : அந்திமழை- நவம்பர்-2015

Wednesday, November 4, 2015

நாட்டுவளம் உரைத்தல்

                                         
                               


இந்த முறை ஊடலல்லமுறிவு.
பட்டென்ற சத்தத்துடன்
 ஒட்ட  முடியாதபடி  உடைந்து விட்டது.
எழுந்து நின்று ஒரு முறை சடவு முறித்தேன்
அப்பாடா…” சொன்னால்தான் ஒழுங்காக சடவு முறியும்
ஆகவே முறைப்படி  இழுத்துச்சொன்னேன்.
ஐந்தாண்டுகளாக  அடக்கியாண்ட தொப்பைக்கு விடுதலையளித்தேன்.
இனி மூச்சுப்பயிற்சிக்கு சோலி கிடையாது.
மீசைக்குள் கத்தரியுடன் குதிக்க வேண்டியதில்லை.
பெருவிரலில் மண்வெட்டி வளர்ந்தால்
நறுக்க வேண்டியதில்லை.
மண்டைக்குடுவையில் கண்டதையும் கலக்கி
பொய் செய்ய அவசியமில்லை.
நிலவு தன் சொந்த முகத்தோடு திகழ
இராத்திரியை கூட்டவோ குறைக்கவோ தேவையில்லை.
ஆகவே சேவல்கள் தப்பிப்பிழைத்து வாழும்
நாடெந்தன் நாடே!

                                                நன்றி : கல்கி தீபாவளி மலர்

Tuesday, November 3, 2015

தலைவி அரற்று


ஒரே ஒரு முறை
அள்ளி அணைத்திருந்தால்
ஒரு வேளை
செத்துப் போகாதிருந்திருப்பான்.
நான் தான்
என் முலைகளை
ஒரு கடுவனுக்கு எழுதி வைத்துவிட்டேன்.

Sunday, November 1, 2015

ஆட்டுதி அமுதே !

இந்த அதிகாலை பயணிகள் இரயிலில்
சுண்டல் வாடையொடு கலந்து
துயரவாடை வீசிக்கொண்டிருக்கிறது.
குழந்தையான சிறுவனொருவன்
என்னெதிரே நீண்ட இருக்கையில் கிடக்கிறான்.
இடுப்புக்கு கீழே இரண்டு குச்சிகள்
ஒன்று மற்றொன்றின் மீது அணைந்து கிடக்கிறது.
சுண்டுவிரலைப் போன்றதான
கட்டைவிரல் வாயைப் போன்றதான ஓட்டைக்குள்
அழுந்திக்கிடக்க
நிலைகொள்ளா விழியிரண்டும் எங்கேயோ வெறிக்கின்றன.
புதிதாய் வந்தமரும் ஒரு இளைஞன்
தன் ஸ்மார்ட் ஃபோனை  முடுக்கி விடுகிறான்.
“டங்காமாரியான ஊதாரிஎங்கள் பெட்டிக்குள்
வந்து குதித்தான்.
நான் அந்த இளைஞனை
அவன் ஃபோனை
அந்தக் காலத்தை முறைத்துக்கொண்டிருந்தேன்.
பார்க்கவே கூடாது என்று
முகம் திருப்பியிருந்த படியால்
பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது.
நாசூக்காய் ஓரக்கண் ஓட்டுகையில்
கண்டேன்
அந்தக் குச்சிபாதம் ஆடிய ஆட்டம்…
அப்படி.... ! அப்படி... !
விளங்காத காலே ஆயினும்
அதை அப்படி ஆட்டு
என் செல்லமே!

                     நன்றி : ஆனந்த விகடன்