Skip to main content

Posts

Showing posts from May, 2016

இருளி

       உள்கதவைத் தாழிட்டாலே உலகம் மறைந்து விடும் அவளுக்கு  வெளிக்கதவையும் அடைக்கவேண்டும் வாசற்கதவையும் சாத்த வேண்டும் ஜன்னல் வழியே உள்நுழையும்  கள்ள ஒளிக்கீற்றை  ஒரு முறை முறைப்பாள் அது வந்த வழியே ஓடி விடும்  புழுக்கத்தின் இன்பத்துள் வாழ்கிறாள் அவள் கழுத்து வடவடப்பை நாவை வீசி அவள் நக்கித் துடைத்ததை ஒரு முறை ஒளிந்திருந்து பார்த்தேன்.

வழக்கம் போல் தானே ?

                                          வழக்கமான குடிகாரன் வழக்கமான மதுவிடுதிக்குள் வழக்கம் போல் நுழைகிறான் வழக்கமான சிப்பந்தி வழக்கமான வணக்கத்துடன் ”வழக்கம் போல் தானே..? “ என்று கேட்டான். “வழக்கம் போல் தான் ...” என்று சொல்லிவிட்டு வழக்கமான இடத்தில் போய் அமர்ந்து கொண்டான் வழக்கமான கோழிக்கறி  வழக்கமான தட்டில் வழக்கமான சத்தத்துடன் முன்வைக்கப்பட்டது வழக்கமான சுதியில் வழக்கமான எண்களை அழைத்து வழக்கமான கண்ணீரைக் கொட்டினான் வழக்கமான சொற்களால் நீவி விடப்பட்டான் வழக்கமான நேரம் வந்ததும் வழக்கம் போல் எழுந்து கொண்டு வழக்கமான சாய்வில்  வழக்கநடை நடந்து  வெளியேறுகிறான். பக்கத்தில் தான் இருக்கிறது புத்தம்புதுமைகளின் கூடாரம் அங்கு வந்தவன்தான் இவன்.

அமுதென்றும் நஞ்சென்றும் ஒன்று !

       கடைக்கண்ணால் நோக்கி நகைக்கூட்டம் செய்யத் துவங்கிவிட்டோம் நாசூக்கு கூடி வருகிறது இருவரிடமும் அந்தப்   பாம்புக்குட்டியை நான் பார்த்துவிட்டேன் அது தன் பிளவுண்ட செந்நாவை வெளியே நீட்டி “காதல்.. ” “ காதல்.. ” என்கிறது இதை இப்படியே விடுதல் ஆகாது எனவே நேராகச் சென்று “ இந்த வீக் எண்ட்ல ஜாலியா மகாபலிபுரம் போலாமா... ” என்று கேட்டு வைத்தேன். ” செருப்பு பிஞ்சுடும்.. ” என்றாள்  ஒரே ஒரு செருப்படியோடு போனது  இப்போது  அவரவர் அவரவர் செருப்பை அணிந்து கொண்டு  அவரவர் சோலிகளைப் பார்க்கிறோம்.                        (   தலைப்பின்பம் நாஞ்சில்நாடனுடையது )                                  

பயனிலி

                  செல்ஃபோனே கெடுதி என்பதுதான் அறிஞர்கள்  தரப்பு அது சிட்டுக்குருவிகளை அழித்துவிட்டதாக சொல்கிறார்கள் பேசப்பேச வெடித்து விடுமென்றும் சொல்கிறார்கள் அதன் கதிர்வீச்சால் எண்ணற்ற தீமைகள் விளையக்கூடும் என்கிறார்கள். நேரத்தைக் கொல்லுதல், உள்ளத்தைக் கெடுத்தல், அறிவை மயக்குதல் இவையெல்லாம்  உபரி தீமைகள். அதை கீழ்பாக்கெட்டில் வைத்தால் ஆண்மை குறைந்துவிடும் என்றார்கள் மேல் பாக்கெட்டில் வைத்தால் இருதயம் கெட்டுவிடும் என்றார்கள் ஆனாலும் எங்கேனும் வைத்தாக வேண்டுமல்லவா? நான் நன்றாக சீர்தூக்கிப் பார்த்து மேல்பாக்கெட்டில் வைப்பதென்று முடிவு செய்தேன். பொதுவாகவே  நான் இதயத்தை அதிகமாக உபயோகிப்பதில்லை.

வல்லான் வகுத்தது

                                                                          தம்பி, முதலில் உன் மேல்கோட்டை கழற்றி வானத்திற்கு வீசு.. தாவாக்கொட்டையில் குந்தியிருக்கும் அந்த ஃப்ரெஞ்ச் மயிரை மழித்தெறி.. இனி கழுத்து நீண்ட குடுவைகளில் எதையும் போட்டுக் கலக்காதே.. நமக்கு ஒன்றுமே புரிவதில்லை தம்பி..! எதையும் யோசித்தல் கூடாது அதிலும் ஆழ்ந்து யோசித்தல் கூடவே கூடாது நமது பரிசோதனை கூடத்தின் மீது  புல்டோசரை விடு.. ஒரு வேம்பின் கீழே குறையுடையில் கிடப்போம் வாடா !