Friday, December 28, 2012

இன்னொருவன் சொல்கிறான்...


அதிகாலை நடை உடம்புக்கு நல்லது.
அது கொழுப்பை குறைத்து
இதய நோய்கள் நம்மை அண்டாமல் காக்கிறது.
சர்க்கரை அளவை பராமரிக்கிறது.
இளங்காற்றை சுவாசிக்கத் தருகிறது.
கரும்பச்சை மரங்கள் காண அழகு.
புள்ளொலி கேட்டு புதுமலர் பார்க்கலாம்
தூணிலும் துரும்பிலும் இருக்கிறாரோ என்னவோ
கடவுள்
மிருதங்கத்தில் இருக்கவே செய்கிறார்.
அள்ளி முடியாத வனிதையர் கோலம்
அது திருக்கோலம்.

இன்னொருவன் சொல்கிறான்....

"அதிகாலையிலேயே
வீட்டை விட்டு ஓடிப்போவதற்குத் தான்
வாக்கிங் போவதென்று பெயர்".

Thursday, December 6, 2012

மூதேவி அருளியவை

                                        மூதேவியால் அருளப்பட்ட எல்லா சொற்களுக்கும்
    சரஸ்வதியின் பூரண நல்லாசியுண்டு.

                                              இசை  : 0:00

                உண்மையில் எனக்கு முன்னுரையில் என்ன எழுதுவதென்று தெரியவில்லை.என் கவிதையை திறந்து கொள்ள திறவுகோல் ஒன்றை வாசகர்களுக்கு வழங்கலாம்.ஆனால் அது வலிய ராட்சதர்கள் காவல் புரியும் அதீத மர்மங்களால் மூடிய குகையல்ல. எனவே அது அவசியமற்றது.இக்கவிதைகள் எழுதப்பட்ட சூழலைப் பற்றிப் பேசலாம். கவிதைகளையும் எழுதி விட்டு பிறகு அதைப் பற்றியும் எழுதுவது அலுப்பாக இருக்கிறது.இக்கட்டுரையின் தலைப்பொன்றே போதும் என்று தோன்றுகிறது.அது கூட கொஞ்சம் அதிகமாகத் தான் பேசி விட்டது என்று தோன்றுகிறது. ”கவிதை என்பது “ என்று துவங்கி எதாவது சொல்லலாம். உங்களுக்கு போர் அடிக்கும். நீங்கள் தான் எத்தனை ”கவிதை என்பது” வை கேட்டு விட்டீர்கள்.எத்தனை எத்தனையோ பேர் என்னென்னவோ சொன்ன பிறகும் இன்னும் சொல்ல ஏதேனும் மிச்சமிருப்பது தான் கவிதையின் அழகா?

          தாடி மண்டிய லும்பனாகவோ, மீசை வழித்த சீலனாகவோ இல்லாமல் இருப்பது எவ்வளவு தவறு என்று ஒரு முன்னுரை எழுதும் போது தான் உரைக்கிறது.ஒரு அரைவேக்காட்டிற்கு சொல்ல அரைகுரையாகத் தான் ஏதோ இருக்கிறது. எனவே நீங்களும் அரைகுரையாக டி.வி பார்த்துக் கொண்டோ , குழந்தைகளுக்கு வீட்டு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டோ இதைப் படிக்கலாம்.

                            நான் பூக்கோவையும் சாத்தரையும் படித்ததில்லை.
எனவே எனக்கு அவ்வளவு அறிவில்லை.அறிவில்லாததால் ஒரே குழப்பமாக இருக்கிறது. என் திருக்குறள் புத்தகத்தில் பிறர்மனை நோக்கா பேராண்மையை கோரும் குறளிற்கு அடுத்து சொல்லுதல் யார்க்கும் எளியவாம் என்கிற குறளை எவனோ ஒருவன் திருட்டுத் தனமாக சொருகி வைத்திருக்கிறான். நித்யானந்தரின் வீடியோ காட்சிகள் பொய் என்றார்கள். உண்மை என்றார்கள். பொய் என்றார்கள். உண்மை என்றார்கள். நான் இரண்டையும் மாறி மாறி உன்னிப்பாக கவனித்து வந்தேன்.இப்போது ஒன்றுமே சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.என்றாலும் ரஞ்சிதா எனக்கு
பிடித்த நடிகை. இந்த வகையில் நானும் சுவாமியும் ஒரே அலைவரிசையில் இருப்பது மகிழ்ச்சியே. இதற்கு மேல் இதைப் பேசுவது அநாகரீகம். இவ்வளவு பேசியது அநாகரீகமில்லையா? என்கிற எதிர்க்குரலை சவுக்குக் கட்டையால்ஓங்கி அடிக்கிறேன்.


                  இப்படி எல்லாம் குழப்பமாகத் தான் இருக்கிறது.
இருப்பதிலேயே பெரிய குழப்பம் கவிதை எழுதுவது தான். ”உணர்ச்சியில் விளையாடும் உன்னத கவிச்சிங்கம் “ என்கிற கண்ணதாசனின் வைர வரிகளுக்கு முன்னால் முத்துகுமார், செங்கொடி என்கிற இரண்டு கருகிய உணர்ச்சிகள் கிடத்தப்பட்டிருக்கின்றன. கவி.. மகாகவி.. கவியரசு.. கவிப்பேரரசு . மனம்.. கவிமனம்..உச்சபட்ச கவிமனம்... கொஞ்சம் குழப்பமாகத் தான் இருக்கிறது. ஈழத்தில் போர் முற்றிய நிலையில் சிவராசண்ணன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு செத்துப் போனார். சிவராசண்ணன் எவ்வளவு நல்லவர் என்பது எங்கள் ஊருக்கே தெரியும்.தன் அரைவை மிஸினில் மிளகாய் அரைக்க வரும் பெண்கள் செய்யும் பித்தலாட்டங்களை தெரியாதவர் போல் இருந்துவிட்டு அவர்கள் போன பிறகு “ நம்மள ஏமாத்தறாங்களாமா..”என்று சிரித்துக் கொண்டே சொல்பவர்.அவர் தலைக்குப் பின்னால் பிரபாகரன் தான் சிரித்துக் கொண்டிருப்பார். அவ்வளவு நல்லவர்க்கு நல்லவராக இருந்தவர் உண்மையில் நல்லவரில்லை என்கிறார்கள்...எல்லாம் குழப்பமாகத்தான் இருக்கிறது.

           அன்னா நல்லவர் தான் என்கிறார் ஜெயமோகன். ஆனால் காந்தி படத்துக்கு கீழே 27 டாக்டர்களுடன் அவர் வீற்றிருப்பது என்னவோ ஒட்டமாட்டேன் என்கிறது. ஆனால் மேதாபட்கர் வேறு உடன் இருக்கிறார்.
மேதாபட்கரோடு இருப்பவர் நல்லவராகத் தான் இருக்க வேண்டும். ஆனால் அருந்த்தி அவர் நல்லவர் இல்லை என்கிறார். குழப்பமாகத் தான் இருக்கிறது.குழப்பமே இல்லாமல் வாய்விட்டு அழுது விடும் ஒரு சூழல் வந்தால் கவனம்.. அம்மணமாக இழுத்து வரப் பட்டு பின்மண்டையில் சுடப்படுபவன் தமிழனே இல்லை.. சுடுபவன் சிங்களனுமல்ல.. என்கிறான் ஒருவன்.  சரி விடு.. எவனோ ஒரு மனிதன் என்றால் , முட்டாள்.. சுடப்படுபவன் ஒரு மனிதனேயல்ல.. சுடுபனும் ஒரு மனிதனல்ல என்கிறான் அவன்.  இப்படி மூளைக்குண்டர்களுக்கு மத்தியில் நாம் படாதபாடு பட வேண்டியிருக்கிறது.


            காலையிலும் மாலையிலும் பேப்பர் படிக்கிறேன். தமிழில் தான் படிக்கிறேன். நான் எம்.ஏ தமிழ்.. ஆனாலும் ஒன்றும் புரியமாட்டேன் என்கிறது. ஒழுக்கம் என்கிறார்கள்? கருணை என்கிறார்கள்? அறம் என்கிறார்கள்? கட்டுடைத்தல் என்கிறார்கள்? அறத்தின் அறமின்மை என்கிறார்கள்?நீதி என்கிறார்கள்? தர்மம் என்கிறார்கள்? மகாதர்மம் என்றும் சொல்கிறார்கள்? யாருக்கும் பேட்டரி செல் வாங்கித் தராதே என்று பயமுறுத்துகிறான் அய்யப்பன். புரட்சி என்கிறார்கள்? ட்விட்டர் புரட்சி என்கிறார்கள்? ரொம்ப நேரம் ஆடாமல் அசையாமல் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்தால் மூலம் வந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள் ? ஆன்மிகம் என்கிறார்கள்? மதமற்ற ஆன்மீகம் என்கிறார்கள்? அபத்தம் என்கிறார்கள் ? பேரபத்தம் என்கிறார்கள் ? நல்லதொரு குடும்பம் என்கிறார்கள்? குடும்பத்தை உடைக்க வேண்டும் என்கிறார்கள் ? அன்பு என்கிறார்கள்? காதல் என்கிறார்கள் ? இந்த ”ஓருடல் ஈருயிரை” சுடுவதென்றால் எத்தனை முறை சுட வேண்டும், குத்துவதென்றால் எத்தனை முறை குத்த வேண்டும் ?


      எம்.கே.டி “ சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே சுப்ரமண்ய சுவாமி உனை மறந்தார்” என்று பாடியிருக்கலாம் அல்லது ” மூன்று உலகிலும் மன்மதலீலையை வென்றார் உண்டோ “ என்று பாடியிருக்கலாம். ஏன் எம்.கே.டி இப்படி இரண்டையும் அவ்வளவு உண்மையாக பாடித் தொலைத்தாய் ? இப்போது சிக்கிக் கொண்டு சீக்கியடிப்பது யார் ?

 சரி.... என் கவிதைகளுக்கு வருவோம்.. “ அப்படியென்றால் இத்தனை நேரம்   நீ பேசியதற்கும் உன் கவிதைகளுக்கும் சம்பந்தமில்லையா”?

   அந்த சவுக்குக் கட்டையை எடுங்கள்...

  •                                                                            


           முகமறியா காலத்தில் இருந்து என் கவிதைகளின் மேல் ப்ரியம் கொண்டிருக்கும் கரிகாலன், கெட்டவார்தைகளில் திட்டி சில கவிதைகளை தொகுப்பில் சேர்க்க வைத்த நண்பன் திருச்செந்தாழை, பள்ளிப் பருவத்தில் இருந்து உடன் இருக்கும் நண்பர்கள் தங்கவேல், கார்த்திகேயன், தனிமையை பொறுத்துக் கொள்ளும் மனைவி அமுதா ஆகியோரை இத்தொகுப்பு உருக்கொள்ளும் தருணத்தில் நினைவில் கொள்கிறேன்.   ”உறுமீன்களற்ற நதி” யில் இடம்பெற்ற ஒரு கவிதையின் நிமித்தம் சரவணகணேஸ், ஜான் சுந்தர் என்கிற இரு வேறு நண்பர்கள் இரு வேறு காலங்களில் இரண்டு ஃபிளம் கேக்குகளைப் பரிசளித்து என்னை சந்தோசத்திற்குள் தூக்கி வீசினார்கள். சிவாஜிகணேசனுக்கும் அப்படி இருவர் கிடைக்காமலா போய் விடுவார்கள்? அவருக்குத் தான் எத்தனை லடசம் இரசிகர்கள்?இசை

இருகூர்

03/09/2011  ( சிவாஜிகணேசனின் முத்தங்கள் தொகுப்பில் உள்ள முன்னுரை)

Wednesday, November 28, 2012

தோத்தகாலிகளின் பாடல் வருகிறது....ரஜினிசார், அந்த ஏரி இப்போது கடலாகிவிட்டது.
பொங்குமறிகடல்....
இன்று நீங்கள் தனியனுமல்லன்
தொடுவானம் முட்டி நிற்கும் எண்ணற்ற படகுகளில்
அமர்ந்திருக்கும் எல்லோரும் நீங்கள்தான்.
நமது பரட்டைத்தலைகளை காற்றில் சிலுப்பிக்கொள்வோம்
நாமெதற்கும் பொறுப்பல்ல..
நம்மை துடுப்புவலிக்க வைத்தவன் எவனோ
அவனே அவர்களை நீருக்குள் பிடித்து தள்ளினான்
கண்களை மூடி ஒருமுறை காண்போம்
அந்த முத்தன்ன வெண்நகையை..
பிறகு பாடுபோம் நம் பாடலை...
கண்டம் கருக்கடிக்கும் அப்பாடலை...
வஞ்சத்தில் கமறும் பலநூறு குரல்களின்
ஒத்திசையா ஊளையிது.
நாம்  இக்கடலின் கர்ணத்தில் கடூரத்தை ஊதுவோம்.
ஊழி எழுந்து
நீள்விசும்பலைந்து
ஊர்புகுந்தாட,
நம் ஆளுயரப்  பெருமூச்சில்
நீதியின் மலைதீபம் பொசுக்கென்று அணைகிறது

Tuesday, November 27, 2012

தனிமை

அதி ஆழமான பாழ்கிணறு
என் தனிமை
ஒரு சொல்லிட்டு
 நீ அதை நிரப்பு

Wednesday, November 14, 2012

உதயகுமார் பேய்யாரது .. ?

பேயது !

  •          
நான் 30,000 ரூபாய்
செலவு செய்து சுவரோடு ஒட்டிக் கொள்ளுமாறு
ஒரு ப்ளாஸ்மா டீவி வாங்கிவைத்தேன்.
சனியன், அது வழியாகத்தான்
ஒரு பேய் வந்து குதிக்கிறது என் வீட்டில்.
  •           
உன்னோட் சேனல் மூனு
அங்கு மட்டும் இரு.
தொன்னூறு சேனல்களுக்கும் வந்து தொலைக்காதே.
  •       
எனக்குத்தான் லீவ் கிடைக்கலியே
அதான் எழுத்தாளர் கூட்டறிக்கையில்
கையெழுத்திட்டிருக்கிறேனே ?
  •    

ஆமாம்..
நேற்று ஏ.சி பாரில்தான் பீர் குடித்தேன்.
அதுக்கு...?
  •   

அரசொருபக்கம் கண்காணிக்கிறது
பேயொருபக்கம் கண்காணிக்கிறது
  •       
என் கைச்சரசத்தில்
இடை நுழைந்து தடைசெய்ய
உனக்கு வெட்கமாக இல்லையா?
  •        
தம்பி, என்ன எழுதுகிறீர்?
கவிதை...
அரசியல் கவிதை..

Saturday, November 10, 2012

கொக்கு பறக்குதடி பாப்பா !
ஐயன்மீர் ,
தங்கள் விமானங்கள்
இன்னும் கொஞ்சம் தாள வாராதா ?
வந்தால்
தாவி நானதன் இறக்கையில் தொத்திக்கொள்வேன்
போகிற வழியில்
வால்மார்டில் குதித்துக் கொள்வேன்

Thursday, November 8, 2012

கானம்- ரவிசுப்பிரமணியன் கவிதை


ம்...

ஸ...

விரல்களால் காது மடல்மூடி
கூட்டும் சுருதியில் ரீங்காரம்
கட்டுக்குள் வருகுது சகலமும்

மண்கிளறி உரமிட்டு
விதைவிதைத்து நீர் ஊற்றி
தளிர் கிளைத்து மேலெழும்ப
செடியாகி மரமாகி
பூத்துக் குலுங்கும் ஸ்வரராக விருட்சங்கள்

 பாடகி உருகி ராகத்தில் கரைகிறாள்
தோப்பாகிறது அரங்கம்


தோப்பில் திரியும் கவலைகளை
தேர்ந்த இடையனாய் மெல்ல மேய்த்து
வெளியில் நிறுத்திக் கதவைச் சாத்தி
இன்னொரு அற்புதம் செய்கிறாள் அவள்

Wednesday, October 10, 2012

எனக்கினி ஒரு ஜன்மும் கூடி...
                                                     
                                                                       -  சாம்ராஜ் -

எனக்குத் திலகனை "பெருந்தச்சனாகத்" தான் அறிமுகம். 89 அல்லது 90 என்று நினைக்கிறேன். அந்த உருவமும் குரலும் மிகையில்லாத நடிப்பும் என்னவோ செய்தது. "கிரீடம்" தான் என்னைத் திலகனின் தீவிர ரசிகனாக மாற்றியது. (தமிழில் அஜித்தை வைத்து அக்கிரமம் செய்தார்களே அந்தப் படம் தான். அசலுக்கும் போலிக்கும் என்ன வித்தியாசம் என்று இன்று வரை உங்களுக்கு வாழ்வில் விளங்கவில்லை எனில் இது இரண்டையும் அடுத்தடுத்து பார்த்து விடுங்கள்.)மலையாள சினிமாவில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிற படங்களில் ஒன்று கிரீடம். ஒரு அச்சன் - மகனைப் பற்றியான கதை. வண்ணதாசனின் வரியில் சொன்னால் ஒரு அச்சனின் கதை அது.

 ஒரு தந்தையாக, சாதாரண போலீஸ்காரனாக, மகனை எஸ்ஐ - யாக    
 பார்க்க வேண்டும் என்ற விடாப்பிடியான கனவு கொண்டவனாக அந்த    கனவுகள் நொறுங்கிப் போனவனாக அபாரமாக செய்திருப்பார்.
எங்கேனும் ஒரு வயதான, உண்மையான, கீழ்ப்படிதலான போலீஸ்காரரை காணும் பொழுது திலகனின் அந்தப் பாத்திரம் ஓர்மையில் வராமல் கடப்பது சாத்தியமில்லை. ரௌடியாக ஆகி விட்ட மகனை கடைத் தெருவில் இரவு ரோந்தின் பொழுது டார்ச் வெளிச்சத்தில் அப்பனும் மகனும் பார்த்துக் கொள்கிற தருணம் வாழ்வின் துயரம் அறிந்தவர்களுக்கு ஒருபொழுதும் மறக்க முடியாத தருணமது.

கிரீடத்தின் இரண்டாம் பாகமான " செங்கோல்" அதில் மகளைக் கூட்டிக் கொடுப்பவராக, அதை மகன் கண்டு பிடிக்கும் பொழுது தற்கொலை செய்து கொள்ளவதாக திலகனின் பாத்திரம். மகளை நாடகத்திற்கு நடிக்க அழைத்துப் போகும் தந்தை, அந்தப் பயணத்திற்கு "வேறு நோக்கங்களும்" உண்டு. அந்த நோக்கங்களை ஒரு சிறிய பெட்டியைக் கையில் பிடித்தபடி மகளோடு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து போவதில் திலகனால் கொண்டு வந்து விட முடியும்.

குணச்சித்திரம், எதிர்மறை, நகைச்சுவை என எல்லாத் தளத்திலும் அவரால் இயங்க முடியும். கிலுக்கம், மூக்கற்ற ராஜ்ஜியம், சில குடும்பச் சித்திரங்கள் போன்ற படங்களில் அவரது அபாரமான நகைச்சுவை நடிப்பை உணர முடியும். அவரது விருப்பமான நடிப்பு குணச்சித்திரமும், எதிர்மறை பாத்திரங்களுமாகவே இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. "காட்டுக் குதிரா" என்றொரு படமுண்டு. அது முழுக்க எதிர்மறையான பாத்திரம். திலகன் மீது நமக்கு வெறுப்பு வராமல் நாம் அரங்கத்தை விட்டு வெளிவர முடியாது.

சிறிய பாத்திரங்களில் கூட அவரால் நுட்பங்களை கொண்டுவந்து விட முடியும். " நாடு வாழிகள்" படத்தில் பெரிய முதலாளிகளின் வீட்டில், முதலாளிகள் வளரத் தொடங்கிய காலத்திலிருந்தே, அவரோடு கூடவே இருக்கும், பெரிய திறமையற்ற விசுவாசமிக்க ஊழியனின் பாத்திரத்தை அத்தனை நேர்த்தியாகச் செய்திருப்பார். தமிழில் சொன்னால் கொஞ்சம் அல்லக்கை பாத்திரம் அது. ஆனால் அதை திலகனால் தான் அப்படிச் செய்ய முடியும். " வரவேழ்ப்பில்" ஆர் டி ஓ அதிகாரி, "சதயத்தில்" நீதிபதி, "பிங்காமி" யில் சமூக சேவகன், "பஞ்சாக்கினி" -யில் பத்திரிக்கையாளன் என ஒருபாடு நல்ல பாத்திரங்கள் அவருக்கு உண்டு. அவரை மட்டுமே நம்பி எழுதப்பட்ட எடுக்கப்பட்ட திரைப்படங்கள் நிறைய உண்டு. பத்மராஜனின் மூணாம் பக்கம், லோகியின் கண்ணெழுதி பொட்டும் இட்டு, ரஞ்சித்தின் இந்தியன் ருபீ, அன்வர் ரஷீத்தின் உஸ்தாத் ஹோட்டல் என.

எதிலும் அடங்காதவராக இருந்தார் திலகன். தமிழில் வெறும் "பன்னீர்ஷெல்வம் " என்ற விளியின் மூலம் அறியப்பட்டவராகவே அவர் இருந்தார். அது அவரது ஒரு பக்கம் மட்டுமே!

எனக்கு ஒரு ஆறேழு வருடங்களாய் தொலைபேசியில் அவரோடு பேசிக்கொள்கிற அளவிற்கான நட்பிருந்தது. தொலைபேசியில் மிஸ்டு-காலைப் பார்த்துவிட்டு "ஈ நம்பரிலிருந்து விளிச்சிருந்தல்லே" என அவர் கேட்கும் பொழுது எனக்கு ஆடிப்போகும். எத்தனையோ படங்களில் கேட்ட அவரின் மகத்தான குரல் அது. என்னோடு தமிழில் பேசவே முயற்சிப்பார். "சொல்லுங்கோ" என்பார். சிறுவயதில் மதுரை, ராமேஸ்வரம் எல்லாம் வந்திருப்பதாகச் சொன்னார். தனது இளமைக்கால நாடக அனுபவங்களைப் பற்றி எப்பொழுதேனும் சொல்வார். தன் குரல் தனக்கு மிகப் பெரிய பலம் என்பார். எந்த மொழியானாலும் தன் குரல் இல்லையெனில் தன் நடிப்பில் பாதி போய் விடும் என்பார். சிவாஜியோடு யாத்ரா மொழி படத்தில் நடித்ததை தன் வாழ்நாள் பாக்கியமெனக் கூறுவார்.

AMMA -வோடு (மலையாள திரைப்பட அமைப்பு) முரண்பட்டு, புறக்கணிக்கப்பட்டு படங்களே இல்லாத சமயத்தில் இனியும் தனக்கு இந்நிலை தொடர்ந்தால் கலாச்சாரத் துறை அமைச்சர் எம் ஏ பேபி வீட்டு வாசலில் தற்கொலை செய்துகொள்வேன் என ஆனந்த விகடனில் பேட்டி அளித்தார். ஏன் சார் இப்படி என்று கேட்டேன்! கைப்பாகச் சிரித்தார். ஒரு சிறிய மௌனத்திற்குப் பின் " அது ஒரு வால்லாத வேதனையானு " என்றார். அபிநயிக்கானு இல்லாது இருக்கினது தனக்கு ஒருக்கிலும் தாங்காம் பட்டிலா" என்றார். நான் அழைக்கும் பெரும்பாலான சமயங்களில் உடல் நலம் இல்லாதிருந்தார். ஏதாவது சூரணம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்வார். ஒருமுறை அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்து. நான் போக முடியவில்லை. அந்த குற்ற உணர்ச்சி என் வாழ் நாளுக்கும் இருக்கும்.

மலையாள சினிமா அவர் மரணத்தை முன் அறிந்தது. போன வருடம் அவர் மீதான தடைகள் நீக்கப்பட்டபோது இயக்குனர் ரஞ்சித் அதற்காகவே காத்திருந்தது போல அவருடைய ஆகச் சிறந்த பாத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இந்தியன் ருபி திரைப்படத்தை இவருக்காகவே இயக்கினார்.

எந்த கதாநாயகர்களோடு முட்டி மோதினாரோ அவர்களின் படங்களிலும் தடைக்குப் பிறகும் நடித்தார். மோகன்லாலோடு ஸ்பிரிட் படத்தில் நடித்தார். (இருவரும் சந்தித்துக் கொள்வது போல காட்சிகள் இல்லையென்றாலும் கூட).

மம்மூட்டியின் மகனின் இரண்டாவது படமான "உஸ்தாத் ஹோட்டல்" திலகனை மனதில் வைத்தே எழுதப் பட்டது. (மம்மூட்டியே தன் மகனுக்கான திரைப்படங்களை தேர்ந்தெடுக்கிறார் என்று சொல்கிறார்கள். அவருக்கு திலகன் மைய பாத்திரமாக இருக்கும் படத்தில் தன் மகன் நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை).

ஒரு நல்ல நடிகனுக்கு உண்டான கௌரவத்தை சற்று தாமதமாகவேனும் மலையாள சினிமா அவருக்கு அளித்தது. உஸ்தாத் ஹோட்டல் படத்தின் முடிவு (ஏறக்குறைய அவரின் கடைசிப் படங்களில் ஒன்று) அவரது வாழ்விற்கான குறியீட்டு முடிவு போலவே இருக்கும். படத்தின் இறுதியில் எங்கோ சுவடுகளற்று புகை போல் மறைவார். திரைப்படத்தில் அவர் எங்கோ வாழ்வதாக மற்றவர்கள் நம்புவார்கள்.

அந்தத் திங்கள் காலை " திலகன் நம்மிடம் இருந்து விடை வாங்கி" என்று கோவில்பட்டி சரவணனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. சென்னை நகரப் போக்குவரத்து தாறுமாறாக என் முன் பாய்ந்து கொண்டிருக்க, நான் மிகத் தனியனாய் உணர்ந்தேன். நண்பர்களுக்கு எஸ் எம் எஸ்ஸில் செய்தி அனுப்பினேன். மிகத் தனியனாய் உணருகிறேன் என்று ஜெயமோகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். "நானும் அப்படி உணர்கிறேன். எல்லா எழுத்தாளர்களைப் போல என்னிடமும் அவருக்கான கனவுப் பாத்திரங்கள் இருந்தன" என பதில் அனுப்பினார்.

திருவனந்தபுறத்திற்கு போகலாம் என புறப்பாட்டால் அன்று மாலையே அனேகமாக அடக்கம் இருக்கும் என்றார் இயக்குனர் மதுபால். மதுரைத் தோழர் பிரபாகரன் அவர் எண்ணில் கூப்பிட்டுப் பாருங்கள் என்றார். அவர் இல்லாத அவர் எண்ணை அழைப்பது எத்தனைத் துயரம். யாரோ எடுத்து அன்று மாலையே என உறுதிப் படுத்தினார்கள்.

அறையிலும் இருக்க முடியாமல் வெளியிலும் திரிய முடியாமலும் நகரத்தில் அலைந்தேன். அவருடைய போனின் ரிங் டோன் பாடல் வரி இப்படி இருக்கும்,

"சந்த்ர கலபம் சாத்தி உறங்கும் தீரம்,

இந்த்ர தனுசின் தூவல் பொழியும் தீரம்,

ஈ மனோகர தீரத்து தருமோ இனி ஒரு ஜன்மம் கூடி,

எனக்கினி ஒரு ஜன்மமும் கூடி"

செங்கோல் படத்தில் மதுரம் ஜீவாமிர்த பிந்து என்ற பாடலில் "ஏகாந்த யாம வீதியிலே" என்ற வரியின் பொழுது கிராமத்து தெருவில் தள்ளாடியபடி நடந்து போவார் திலகன்.

நானும் அந்த இரவில் ஆதித்யா பாரில் இருந்து வெளியேறி  12 மணிக்கு நாய்கள் குரைக்க தள்ளாடியபடியே நடந்துகொண்டிருந்தேன்.. யாரிடமாவது சொல்லி அழவேண்டும் போல் இருந்தது. ப்ரியமானவர்களை தொலைபேசியில் அழைத்தேன்.லிபி, இசை, பிரசாத், மாயா.. என. மற்றவர்கள் இரண்டாம் ஜாமத்தில் இருக்க,  லிபி மட்டுமே எடுத்தார்.அவரது சொற்களும் தூக்கத்தில் மிதந்தன. “ தூங்குங்குள் லிபி ..” என்று சொல்லி விட்டு இணைப்பை துண்டித்துக் கொண்டேன்.

              இன்னேரம் திருவனந்தபுரம், தைக்காடு இடுகாட்டில் சாம்பலாகி இருப்பார் என் ஆதர்ஷ நடிகன். சாம்பலில் இருந்து பிரித்தெடுக்க முடியுமோ அக்குரலை..அந்த மகத்தான அபிநயத்தை

                                  "திலகன் அரங்கு ஒழிஞ்சு".

Tuesday, October 2, 2012

துயரத்தின் கழுத்துச் சதை மார்பில் துவள்கிறது

   காலையில் எழுந்ததும் டீ குடிக்கப் போவேன்
   பாதி டீ வரை சும்மாதான் குடிப்பேன்
   பிறகு  "மயிரப்புடுங்கியுடு"  என்று
   இரண்டு வறுக்கிகளை வாங்கி நனைத்துத் தின்பேன்.
   ஒரு ஜிலேபியை தின்னும் 
  அந்த இரண்டு நிமிடங்களில்
   இந்த வாழ்வு இனித்துச் சொட்டுகிறது
   இனித்துச் சொட்டும் வாழ்வை 
   விட்டுவிடக்  கூடாதென்பதற்காகத்தான்
   காலையிலும், மதியத்திலும், இரவிலும்
   இடையிடையும்
   ஜிலேபிகளைத் தின்கிறேன்.
   பால்யத்தை மீட்டுரு செய்யவே
   கம்பர்கட்டுகளையும், கொடல் வத்தல் பாக்கெட்டுகளையும்
  தின்கிறேன்.
  ப்ரூ காஃபியும், பூண்டு மிக்சர் தட்டோடும்
  நான் மொட்டைமாடியில் அமர்ந்திருக்கையில்
 மந்தமாருதம் என்னை  விட்டெங்கோடிப்போகும்?
 நான் ஒழுங்காக கோப்புகளை பார்க்கவே ஆசைப்படுகிறேன்
 இந்த கேண்டீன் முதலாளி மணிக்கொருதரம்
காற்றில் சமோசாவை ஏவி விடுகிறான்
அது என் காதோரம் வந்து
பார்த்து பார்த்து என்னைத்தை கிழித்தாய்
என்று கேட்கிறது
இந்த நாட்டில் எவ்வளவோ சட்டங்கள் இருக்கின்றன
”இருசக்கர வாகனங்களில் காதலர்கள் இறுக்கி அணைத்தபடியே
 பயணிக்கலாகாது “ என்று ஒரு சட்டமேனும் இல்லை.
ஒருத்தி தன் காதலனின் கன்னத்துள்
புகுந்து வெளிவந்ததைப் பார்த்த ராத்திரியில் தான்
நான் க்ரில்சிக்கனில் ஒரு முழுக்கோழி தின்றேன்
வாரத்திற்கு மூன்றுதரம்
முழுக்கோழி தின்னவேண்டும் என்பது என் தலையெழுத்து.
கடவுள் என் வலக்கையை
இயந்திரத்தின் இரும்புச்சக்கரங்களுக்கு கொடுத்துவிட்டு
இடக்கையில் இருட்டுக்கடை அல்வாவை வைத்தார்

Saturday, September 29, 2012

வீட்டிலிருந்து கிளம்பி வீட்டிற்கு போவது...
தூரநிலத்தில்
என்னை வரவேற்க காத்திருக்கும் நண்பன்
நான் அவசியம் அவன் வீட்டிற்கு வரவேண்டுமென்றும்
அங்கு அவன் மனைவியும் குழந்தைகளும்
என் வருகைக்காக
ஆவலோடு காத்திருப்பதாகவும் சொன்னான்
நான் அவன் முதுகிற்கு பின் இறங்கி
ஒரு ஆட்டோவைப் பிடித்து ஓடினேன்

இந்த மொட்டை வெய்யிலில் நின்றுகொண்டு
எடுக்கவே எடுக்காத என் எண்னை
திரும்ப திரும்ப அழைத்துக் கொண்டிருக்காதே...
போய்க்கோடா நண்பா !

Monday, August 27, 2012

ஒரு கழிவிரக்க கவிதை
ஒரு கழிவிரக்க கவிதை
கண்ணை கசிக்கிக் கொண்டு
என் முன்னே வந்து நிற்கிறது
அதன் மேனியெங்கும் கந்தலின் துர்நாற்றம்
ஊசிப்போன வடையை தின்றுவாழும் அதை
கண்டாலே எரிச்சலெனக்கு.
“ போய்த்தொலை சனியனே..
கண்ணெதிரே இருக்காதே..”
கடுஞ்சொல்லால் விரட்டினேன்.
காலைத் தூக்கிக் கொண்டு
உதைக்கப் போனேன்.
அது தெருமுக்கில் நின்றுகொண்டு
ஒருமுறை திரும்பிப் பார்த்தது
நான் ஓடோடிப் போய் கட்டிக்கொண்டேன்.

Friday, August 17, 2012

லூஸ்ஹேருக்கு மயங்குதல் அல்லது காமம் செப்பாது கண்டது மொழிதல்நான் எளியனில் எளியன்.
லூஸ்ஹேருக்கு      மயங்குபவன்.
மனம் போன போக்கில் தான் போகிறேன்
மனம் போகிறது
அதனால் போகிறேன்.
லூஸ்ஹேரில்   பரலூஸ்ஹேர் என்றொன்றில்லை.
என் உடலொரு கருவண்டுக் கூட்டம்.
ஒவ்வொரு லூஸ்ஹேரின் பின்னும்
ஒரு வண்டு பறக்கிறது.
எப்போதும் என் முன்னே ஒரு சுழித்தோடும் காட்டாறு.
காட்டாற்றைக் கடக்க உதவும் ஆல்விழுதே…
உன்னை சிக்கெனப் பற்றினேன்.
எனக்குத் தெரியும்.
லூஸ்ஹேரை மயிரென்றெழுதி கெக்கலித்த ஓர் அறிவிலி
கடைசியில் அதிலேயே தூக்கிட்டு மாண்டகதை.
ஈரும் பேனும் நாறும் இடமென தவநெறி முனிந்தால்,
லூஸ்ஹேரின் நுனியில்
தொங்கிச் சொட்டும் துளிநீரில்
இவ்வுலகு உய்கிறது என்பேன்.

                                       ( யாத்ராவிற்கு )

Saturday, August 11, 2012

க்ரிஷ்கெய்லிற்கு பந்து வீசுதல்
நான் இந்த ஆட்டத்திலேயே இல்லை

சொல்லப்போனால் ஒரு பார்வையாளனாக கூட இல்லை

மைதானத்திற்குள் தரதரவென இழுத்துவரப்பட்டு

பந்துவீசுமாறு பணிக்கப்பட்டிருக்கிறேன்

எதிரே க்ரிஷ்கெய்ல் நின்றுகொண்டிருக்கிறார்

அணித்தலைவர் ஓடிவந்து

பந்து அந்தரத்திலேயே இடப்பக்கம் சுழன்று

மறுபடியும் வலப்பக்கம் சுழன்று

விழுமாறு வீசச்சொன்னார்

நான் அவரது முகத்தையே பார்த்தேன்

அவர் திரும்பி ஓடிவிட்டார்

எதிரே க்ரிஷ்கெய்ல் நின்றுகொண்டிருக்கிறார்

அவரின் சடாமுடி ருத்ரதாண்டவனை குறித்து நிற்கிறது

அடேய் சுடலையப்பா….

இந்த பந்தை வானத்திற்கு அடி…

திரும்பி வரவே வராத படிக்கு வானத்திற்கு அடி.Friday, July 13, 2012

கடுவளிக்காலம்                                       

                                            நான் இப்போது
                                            குடித்தே ஆக வேண்டும்

                                            என்னிடம் நாலு பேரல்
                                            சாராயம் இருக்கிறது

                                            என் ஊறுகாய் மட்டை
                                            திருவனந்தபுரத்திலிருக்கிறது.

கணேசகுமாரன் கவிதை

 சாகும்வரை சிரிப்பவன்
அவன் ஆரம்பகால நாடகங்களில்
கதாநாயகனாக நடித்தவன்தான்
கைதட்டி ரசித்த மக்கள்
உச்சந்தலையில் முத்தமிட்டு வாழ்த்தினார்கள்
கலைஞன் வீடு முழுவதும் விருதுகள் குவித்தான்

மேலும் சில நாடகங்களில் வில்லனாக அவனே
விரும்பி நடித்தான்
உணர்ச்சிவசப்பட்ட மக்கள் சபித்தபடி
விருதுகளையும் பரிசுகளையும் அவன் கையில் திணித்தனர்
ஒரு நாளில் நிர்பந்திக்கப்பட்டான்
கோமாளியாக நடிக்கும்படி
சிரிப்பாய் சிரித்தது வாழ்க்கை
அவ்வளவு பெரிதாக
அவ்வளவு வலியாக
அவ்வளவு கொடூரமாக
எல்லோர் துயரங்களையும் விரட்டியபடி
சிரித்துக் கொண்டிருந்தது மேலும் மேலும்


அவனாலும் ஒரு கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியவில்லை
சிரித்து சிரித்துக் கண்ணீர் பெருகி ஆறாக ஓடி
மேடையும் மக்களும் மிதக்கத் தொடங்கியபின்னும்
நிறுத்துவதாயில்லை அவன்
அத்தனை அச்சாகப் பொருந்திவிட்டது கோமாளித் தொப்பி
பழைய கிரீடங்களைத் துறந்து ஆட்டம் தொடர்கிறது


இனி மேடையிலிருந்து வீழும் வரை
கோமாளியின் தர்பார்தான்.

Monday, July 9, 2012

எனது இரண்டு கவிதைகளின் கன்னட மொழியாக்கம்


எனது இரண்டு கவிதைகளின் கன்னட மொழியாக்கம் இன்றைய விஜயவாணி கன்னட தினசரியில் வந்துள்ளன.
மொழியாக்கம் செய்த கன்னட கவி கார்பென்டருக்கும், உதவிய நண்பர் சீனிக்கும்
சிவாஜிகணேசனின் முத்தங்கள்..
ತಮಿಳು ಕವಿ ಇಸೈ (Isai Karukkal) ಅವರ ಎರಡು ಪದ್ಯಗಳ ಅನುವಾದ ಇಂದಿನ ವಿಜಯವಾಣಿ ಪತ್ರಿಕೆಯಲ್ಲಿ ಪ್ರಕಟಗೊಂಡಿದೆ. ಅನುವಾದವನ್ನು Srinivasan Kannan ಅವರ ನೆರವಿನಿಂದ ಮಾಡಿದ್ದೇನೆ.
please watch today's Vijayavani daily. Tamil poet Isai's Kannada translated poems have published (translation: VR Carpenter)

புகைப்படம்: ತಮಿಳು ಕವಿ ಇಸೈ (Isai Karukkal) ಅವರ ಎರಡು ಪದ್ಯಗಳ ಅನುವಾದ ಇಂದಿನ ವಿಜಯವಾಣಿ ಪತ್ರಿಕೆಯಲ್ಲಿ ಪ್ರಕಟಗೊಂಡಿದೆ. ಅನುವಾದವನ್ನು Srinivasan Kannan ಅವರ ನೆರವಿನಿಂದ ಮಾಡಿದ್ದೇನೆ.
please watch today's Vijayavani daily. Tamil poet Isai's Kannada translated poems have published (translation: VR Carpenter)

Wednesday, June 27, 2012

என் கழுத்துநரம்பு முறுக்குக் கம்பியாலானதுஎன் பள்ளித்தோழன் தன் உள்ளங்கைக்குள்
ஐந்து தேன்முட்டாய்களை காட்டிமறைத்த போது
நான் முதன்முதலாக
என் தலையைத் திருப்பிக்கொண்டேன் என்று நினைவு
பிறகு எத்தனையோ முறை
வெடுக் வெடுக்கென்று திருப்பிக் கொண்டேன்
என் காளைப் பருவம் முழுவதும்
வெட்டி வெட்டி இழுத்தேன்
எத்தனை திருப்பிற்கும்
அறுந்து போகாத என் கழுத்து நரம்பு
ஒரு மருத்துவ அதிசயம்
நாம் என்னவோ கடவுளை கண்டபடி திட்டுகிறோம்
உண்மையில் அவர் ஒரு பேருபகாரி
இந்த வாழ்வில் ஒரு முறை கூட
தலையைத் திருப்பிக் கொள்ளாதவர் தவிர
மற்ற எல்லோரும் ஒரு சேர எழுந்துநின்று
அவர்க்கு நன்றி சொல்லுங்கள்
அவர் நம் தலையை
திருப்பிக் கொள்ளுமாறு வைத்ததின் மூலம்
அதை வெடித்துவிடுவதினின்று காத்தார்.


Sunday, June 3, 2012

ஓட்டைவாளியில் நீர்சுமப்பவன்

இசையின் “ சிவாஜிகணேசனின் முத்தங்கள் “ ஐ முன் வைத்து...
                                                              
                                                           - சாம்ராஜ்-


பத்து மணிக்கெல்லாம் நடைசாத்தப் பழகியவர்களின்
பாழ்நிலத்தை
நாம் பாதுகாக்கத்தான்  வேண்டுமா ?
 என்று கவிஞன் லிபிஆரண்யாவின் கவிதையொன்று முடியும். அப்படியான நிலம்தான் இது. முரன்பாட்டின் முக்கோணம் இந்நிலம், அன்றாடம் அந்த முரன்பாடு நம் சட்டைபிடித்து உலுக்குகிறது. சமயங்களில் நம்மைப் பார்த்து கேலியாய் நகைக்கிறது.. பேண்ட்களையோ, உள்ளாடைகளையோ நனைக்கிறது. பாலத்திலிருந்து குதிக்கச் சொல்கிறது. கொலை செய்யச் சொல்கிறது. கேவலப்படுத்துகிறது. பின்னிரவில் எழுப்புகிறது. பேயாய் பகலில் அலைய வைக்கிறது. பிரேதங்களை வாஞ்சையோடு பார்க்க வைக்கிறது. மிருகக்காட்சிசாலை கூண்டுக்கெதிரே வெகுநேரம் நம்மை நிறுத்தி வைக்கிறது. அன்பை  நல்ல பாம்பின் நாகரத்தின கல்லாக்குகிறது.
இந்தக் கொடடூர வாழ்வை எப்படி எதிர்கொள்வது? கூட்டு தியானம் போல கூட்டு தற்கொலை சாத்தியமா?, அல்லது அன்றாடம் செத்துச் செத்து பிழைக்கலாமா?” ஊரும் சதமல்ல, உற்றாரும் சதமல்ல” வென சித்தனனாய் திரியலாமா? இலையென கவலையின்றி மரத்திலிருந்து உதிரலாமா? தெரு நாயாய் கண்கள் மினுங்க நடுஇரவில் குப்பை தொட்டிகளுக்கு பின் பதுங்கியிருக்கலமா? புட்டம் முழுக்க புண்ணாய் பெண்நாயாய் அலையலாமா? வெளிச்சத்துக்கு அஞ்சும் கரப்பானாய் இருள் பொந்திலேயே இருந்து விடலாமா? கண்ணாடியிடம் பேசிக் கொள்ளலாமா? போதையிலேயே தெளியலாமா?
 நாம் இந்த வினாடி வாழ்ந்து கொண்டிருப்பது இதற்கு முந்திய வினாடிவரை தற்கொலை செய்து கொள்ளாததனால்தான். இந்த நிலத்தில் உண்மையான அர்த்தத்தில் வாழ்வதற்கு அபாரமான விடுவிப்பு கொண்ட மனம் வேண்டும். எல்லாவற்றையும் கலைத்துப் போட வேண்டும் அறத்தின் .எழுத்துகள் செதுக்கப்பட்டிருக்கும் சுவற்றின் மீது சிறுநீர் கழிக்க வேண்டும். பாசங்கெனும் பாம்புத் தோலை உரிக்க வேண்டும். ரங்கனாதன் தெரு நெரிசலில் கண்ணா.டிக் கோப்பை விற்கும் நெஞ்சுரம் வேண்டும். சபைகளை புறக்கணிக்க வேண்டும். மலைமுகட்டில் ஒற்றையாய் நிற்க வேண்டும். கழுவேற சித்தமாய் இருத்தல் வேண்டும்.  தன்னைத் தானே சிதைக்கு சுமந்து செல்லும்  தைரியம் வேண்டும்.
 மேற்கூறிய கேள்விகளையும் அதற்கான பதிலையும் ஒருங்கே எனக்கு சொல்கின்றவைகளாக  இருக்கின்றன இசையின் கவிதைகள்.
 இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவுகளை விட கூடுதலானது நமது குற்ற உணர்ச்சிகள். குற்ற உணர்ச்சிகளோடேயே பிறக்கின்றோம். வாழ்கின்றோம், சாகின்றோம். இவற்றிலிருந்து எவரேனும் என்னை விடுவிக்க மாட்டார்களா, காலில் சங்கிலி உரசி உரசி ரணமாய் இருக்கிறது. குற்ற உணர்ச்சி கனவுகளிலும் தன் வேட்டை நாயை என் மீது ஏவி விடுகிறது என்னையே தின்கிறது. என் காலடியிலே விடியும் வரை படுத்திருக்கிறது. விடிந்ததும் பொறுப்பை தொலைக்காட்சியில் அமர்ந்திருக்கும் தாடி வைத்த தாத்தாவிடம் கொடுத்துவிட்டு மறைகிறது. அவர் நாள் முழுக்க மண்டியிட்ட கோலத்தில் என் காதுகளில் எதையோ ஒதி கொண்டே இருக்கிறார். அவருக்கு அலுக்கும் பொழுது என் அம்மாவிடம் கொடுக்கிறார் ரிமோட்டை, அவள் எதிர்வீட்டு மாடியில் துணி காயப்போடும் இளம் பெண்னிடம் கொடுக்கிறாள், அவள் என் மேலதிகாரியிடம் கொடுக்கிறாள், அவர் மதுவருந்த போகும் பின்னிரவில் செக்யுரிட்டியிடம் கொடுக்கிறார், அவருக்கு தூக்கம் வரும்பொழுது கடவுளாரிடம் தருகிறார், அவர் மீண்டும் வேட்டை நாயிடம் வீசுகிறார் அது மறுபடி என்னை துரத்த ஆரம்பிக்க நான் இசையின் கவிதையோடு ஓட ஆரம்பிக்கிறேன்
 இசை தன் கவிதையால் என்னை விடுவிக்கிறான்.  வெட்டவெளியில் உப்புமிளகாயார் முன் எனக்கு ஞானஸ்தானம் செய்து வைக்கிறான். அவனுக்குப் பிடித்த பல்சரிலேயே வந்திருக்கிறான், அதை நேற்றிரவு எங்கோ கொண்டு போய் இடித்திருக்க வேண்டும், அதன் முன்பக்கம் சிதைந்திருக்கிறது அடங்காப்பிடாரி மதனும் கூட உண்டு. தலைவிரி கோலமாய் வந்தவளைப் பார்த்து தப்பிவந்த பொழுது அந்த விபத்து நடந்ததாய் என்னை நம்பச் சொல்கிறான், ஸ்கூட்டியைப் பார்த்துக்கொண்டு ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தென்கிறான் சைகையில் மதன்.  D.சிவாஜிகணேசனும், பொறியாளர் ஆனந்தும் வந்து கொண்டிருப்பதாகவும்  சில குடும்ப நாய்களை கூட்டிக்கொண்டு வருவதாகவும் சொல்கிறான். அறவுணர்ச்சி எனும் ஆட்டுக்குட்டியை அங்கு பலியிடலாமென்கிறான். நான் டம்மி இசை எங்கேயெனக் கேட்டால் என் கண்களை பார்க்க மறுக்கிறான் இயேசு நாதர் மதுவாங்கிக்கொண்டு வருகிறார். அவர்கூட தொற்றிக் கொண்டு வருகிறது குள்ளமான காதல். அழியும் சிட்டுக் குருவிகளும்,வழியனுப்பக் காத்திருக்கும் பறவையும் அவன் தோளில் அமர்ந்திருக்கிறது. எம்.கே.டியை தன் குரலில் பாடத்தொடங்குகிறான், மேயாத மான்கள் சிலிர்க்கின்றன. அவனால் கொலை செய்யப்பட்டவர்களின் ஆவிகள் எழும்புகின்றன. அவர்களிடம் “யாம் ஷகிலாவின் பாதக் கமலங்களை வணங்குகிறோம்” என்கிறான். இது உங்களுக்கு திருப்தியாக இல்லையெனில் “கர்த்தனின் வருகை சமீபமாயிருக்கிறது” என்பது பொருந்தி வந்தால் வைத்துக் கொள்ளுங்கள் என்கிறான். தாமதமாய் வந்த ராமகிருஷ்னன் மகா ரப்பரால் தன் வாழ்வை திருத்தித் தரமுடியுமா என்கிறார். அதைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாது சித்தாந்தங்களின் துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு பொறாமை மிருகத்தை கையில் பிடித்தவாறு நீலிக்கோணாம்பாளையத்தின் பீக்காட்டில் நிற்கும் டாங்கிகளை நோக்கி நடக்கத் தொடங்குகிறான். ஒரு கோடியே நூற்றியெட்டு துயரங்கள் அவனை தொடர்கின்றன.
இசை நம்மை {உங்களுக்கு எற்பில்லையெனில்} என்னை  சங்கிலிகளிலிருந்tது விடுவிக்கிறான். என்னை அலட்சியம் மிக்கவனாக அகங்காரனாக, முழ்கும் கப்பலில் இருந்து குலப்பெருமை பாடுகிறவனாக,

இவர்களின் யாகசாலையின் நடுவே பன்றியை இழுத்துக் கொண்டு போகிறவனாக,  ஓங்கார மந்திர உச்சாடனங்களுக்கு இடையே தமிழர்களுக்குப் பிடித்தமான வசவுச் சொல்லை உரத்துச் சொல்பவனாக, பரப்பிரம்மங்களை பகடி செய்பவனாக, அனுபூதி நிலை பற்றி அவர்கள் கசிந்துருகையில் கழிப்பறைக்குச் செல்பவனாக, சித்தனின் அல்லது பித்தனின் ஞானத்தை ஓட்டை வாளியில் சுமப்பவனாக, சமயத்தில் அதையே அடகு வைப்பவனாக என்னை உருமாற்றுகிறான் இசை.
பிறவியெனும் பெருங்கடலை இன்னும் பாதி கடக்க வேண்டியிருக்கிறது. மோசஸாய் முன்னே போய் கொண்டிருக்கிறான் இசை.

Monday, May 28, 2012

இரண்டு கவிதைகள்

1.நம் பூனைக்குட்டியைப் பார்த்தேன்

கோடாக இளைத்து
மேலெல்லாம் புண்ணாக
முடைவீசும் குப்பைமேட்டில்
எதையோ மோந்துபார்த்துக்கொண்டிருக்கும்
ஒரு பூனைக்குட்டியை பார்த்தேன்
அதற்கு
என் உதட்டிற்கும் உன் கழுத்திற்குமான
முனகலில் பிறந்ததின் அதே சாயல்
என் பழைய பூனைக்குட்டியே..
பழைய ப்புச்சுக்குட்டியே..
பழைய வெல்லக்கட்டியே..
பழைய மொசக்குட்டியே..

2. ரிசல்ட்

பயாப்ஸி டெஸ்டுக்கான
முடிவுகள் வந்துவிட்டன
மருத்துவர் மூக்கு கண்ணாடியை கழற்றிவிட்டு
கருணையின் கண்களைக் காட்டினார்
தோளைத் தட்டித் தந்து
தைரியமாக இருக்கச்சொன்னார்
நான் காதியில்
ஒரு நீலக்கலர் சால்வை வாங்கிப் போத்திக்கொண்டேன்.

Wednesday, May 9, 2012

உனக்கு நீயே தான்

உனக்கு நீயே தான்
சொக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்
உனக்கு நீயே தான்
மிஸ்டுகாலில் விளையாடிக் கொள்ளவேண்டும்
உனக்கு நீயே தான்
வாழ்த்து தெரிவித்துக் கொள்ளவேண்டும்
உனக்கு நீயே தான்
மறந்த பொருட்களை நினைவு படுத்திக் கொள்ளவேண்டும்
உனக்கு நீயே தான்
பின்னால் வந்து கட்டிக் கொள்ள வேண்டும்
உனக்கு நீயே தான் நிலா காட்டிக் கொள்ள வேண்டும்
நீயே தான் உன் காதில் கிசுகிசுத்துக் கொள்ளவேண்டும்
நாலாவது ரெளண்டில்
உனக்கு நீயே தான் கண்டித்துக் கொள்ளவேண்டும்
உன் கண்ணில் நீர் வழிந்து உன் நெஞ்சிலேயே தான் உதிரமும் கொட்டவேண்டும்
உன் தலையை அரிந்து
உன் மடியில் போட்டுக் கொண்டு
நீயே தான் கோதிவிட வேண்டும்.

Tuesday, May 8, 2012

வாளோடும் வயலினோடும் அலைபவன்....

லிபி ஆரண்யாவின் “ தப்புகிறவன் குறித்த பாடல்’ --- - சாம்ராஜ்- தமிழில் அரசியல் கவிதை எழுதுபவர்கள் மிக குறைவு. இங்கு இயங்கும் “கவிதையின் அரசியல்” அரசியல் கவிதைகளுக்கு எதிரானது. இடதுசாரிகளிடமே எப்பொழுதும் ”அரசியல் கவிதை” எழுதும் பேதமைமிக்க பொறுப்பு ஓப்படைக்கபடும். அவர்களும் கோஷங்களின் பிரேத குழியில் வார்தைகளின் சவங்களை அள்ளி அள்ளி புதைப்பார்கள். பிறகு பிறகென்ன சவங்களில் முளைத்த சொற்கள் மயானமெங்கும் மரத்தில் தொங்கும் விக்கிரமாதித்யன் வேதாளமாய் மிக அரிதாக அந்த காட்டில் மலர் பூப்பதுண்டு. என்பதுகளின் நடுபகுதியில் நக்சல்பாரி இயக்கங்களின் வெகுசன பத்திரிக்கைகளில் அப்படி மலர்கள் பூத்தன. உடனடியாக நினைவுக்கு வருபவர்கள் கலைநேச பிரபு, புதிய ஜிவா, பாரதிபுத்திரன், நிஷா என. இவர்களில் மிக முக்கியமானவர் பாரதிபுத்திரன். ”மாரிக்கால இரவுகள்” என்று ஓரு தொகுப்பு மாத்திரமே அவருக்குண்டு. அதுவும் 95 பிறகு மறுபதிப்பு வராத தொகுப்பு. மிக அரிதான குரல் பாரதி புத்திரனுடையது. கோஷங்கள் இல்லா கோபம் அவருடையது .அவரின் உக்கிரம் ஓரு பொழுதும் கவிதைகளை கொன்றதில்லை. இங்கு கவிதைகளை கொன்று பழைய பிரிட்டிஷ் அதிகாரிகள் போல அவற்றின்மிது காலை தூக்கிவைத்து புகைபடம் எடுத்து கொள்ளும் அனேக கவிதை வீரப்பன்களை நாம் அறிவோம்.. பல பேரின் கவிதை தொகுப்புகளின் பின்னட்டையில் அவர்கள் புகைபடத்திற்கு கீழே இருப்பது கவிதைகளின் பிணங்களே. நீங்கள் ”வரிகளுக்கிடையே” வாசிப்பவராய் இருந்தால் நிச்சயம் தெரியும். 90 களின் பிற்பகுதியில் மா –லெ இயக்கங்கள் ஏக்கங்களாய் மாற பாட்ஷா ரஜினிகாந்தாய் பாரதிபுத்திரன் தன் கவிஞன் அடையாளத்தை துறந்து பேராசிரியர் பாலுச்சாமியாய் சிற்பங்களையும் ஓவியங்களை நோக்கி நடக்கத் துவங்கினார்.இன்றும் என்னை போன்ற கொஞ்ச பேர் ஞாபகங்களில் சுமந்து திரிகிறோம் அவரது மகத்தான கவிதைகளை .பிறகு அப்படியான குரலை கேட்கவேயில்லை. லேசாக ஓலிக்கும் அதுபோன்ற குரல்களை உடனடியாக கொல்வதற்கு நிறைய பேர் கள்ளிபாலோடு அலைந்தனர், அலைகின்றனர். பிடறி சிலிர்த்த சிலரை கூட்டிச் சென்று கிணற்றில் “சிங்கம்” காட்டிய கதைகள் அனேகம் உண்டு.அவர்களும் பரினாமவிதி அனுசரித்து ”கினற்றில் திமிங்கலமாய்” வாழ தொடங்கினர். இந்த சுழலில்தான்2010ல் நான் லிபியின் குரலை கேட்கிறேன். எறக்குறைய அது பாரதிபுத்திரனோடு இல்லாது போன குரலின் தொடர்ச்சியது. தனித்துவமிக்க அரிய குரல் அது. ஓன்று அழகியல் அல்லது அரசியல் பிரகடனம் இரண்டுக்கும் இடையே ஓரு நைந்த நூல் பாலம் கூட கட்ட முடியாது என்று துண்டை போட்டு தாண்டுபவர்களுக்கு மத்தியில் கனத்த இருப்புபாலத்தில் நிற்கிறார் லிபி. 37 கவிதைகள் 56 பக்கங்கள்.எந்திரன் சிட்டி போல ஸ்க் ஸ்க் வாசித்து விடலாம்தான். அது நீங்கள் சிட்டியாக இருக்கும் பட்சத்தில். மனிதனாக இருக்கும் பட்சத்தில் நிறைய நாளாகும் இவற்றிலிருந்து வெளியே வருவதற்கு. லிபி பூங்கா அல்ல. காலை எட்டு மணி முதல் மாலை எட்டு மணிவரை என போர்டு போட. அடர் காடு. இதில் மிக முக்கியம் இந்த அடர் காட்டில் உங்களை நீங்கள் கண்டுபிடிபிர்கள் அல்லது கண்டடைவீர்கள். பின்னிரவுகளின் துல்லியமாய் லிபியின் கவிதைகள் “சிக்கலற்று இந்த புறநகர் தன் நாளை துவங்குவதற்கு தன் தூக்கத்தை பலி கொடுக்கும் வாழை பழ வியாபாரி” “ மூட்டையோடு தூங்கும் மன நிலை பிறழ்ந்தவன்” ”எழாம் பீர் பாட்டிலுக்கு மேலே பொகும் மேசைகள்” ”போதையில் உதிர்ந்த சொற்க்ளை வழியெங்கும் தேடுபவன்” ”வெளியேறிய தவளைகள் அடிவயிற்றில் சபித்து நிற்க” பின்னிரவுகள் பிறழ்ந்தவர்க்ளுக்கு மாத்திரமல்ல, பிறழ போகிறவர்களுக்கும் தான். லிபி பின்னிரவுக்காரன் மட்டுமல்ல பின்நவினத்துவ ஆத்திசூடிக்காரனும் கூட. அவனால் தான் “கூரையின் கிழ் இருக்கும் சமரசமற்ற போராளியை”யும் சொல்ல முடியும், நீர் தைலத்தையும் வரைய முடியும், காலனி கிளைத் தோழரின் அரசியல் வகுப்பிலும் அமர முடியும். “புரட்சி பிடுங்கி போல் கதைத்து திரியும் எம்மை ஓரு பொழுதும் மன்னியாதீர்” என மன்றாட முடியும். “மஹாபலியாய் ஆகப்பெரும் மேசையில் உதிரியாய் தன்னை கிடத்திக் கொள்ள முடியும். ”அகண்ட பாரதத்தையும் குட்டை பாவாடையும்” ஒருங்கே பாடக்கூடியவன் அவன் ”அரும்பும் பல்காரன்தான் தேசத்தின் பாடலையும்” இசைக்கிறான்” ”கரசேவையும் தேவகுமாரனால் கூடாத காரியமும்” இங்கு ஓன்றே. “சிறுவர்களை பிடித்து செல்பவர்களையும், சில்லறை பொறுக்குபவர்களையும், ராமசந்திரன்களையும், கோடைகால எசமானனையும், குழந்தைகள் கழுத்தில் ஸ்டெத்தை மாட்டுபவர்களையும், தாமதிக்காது கொலை செய்ய வேண்டும்” என்கிறான் கவிஞன். கூடவே ”ஆட்டம் முடியவே காத்திருக்கிறோம்” என்றும் சொல்கிறான் 88ம் ஆண்டில் பாகிஸ்தான் மட்டைபந்து அணி இம்ரான்கான் தலைமையில் இந்தியாவிற்கு ஓரு தொடர் விளையாட வந்தது. அணியில் அப்துல் ஹாதீர் என்றொரு சுழல் பந்து வீச்சாளரும் உண்டு. அவருடைய பந்துவீசும் முறை அன்றைக்கு உலக பிரசித்தம்.. ஆடப்போகிறவருக்கு பக்கவாட்டிலிருந்து புறப்படுவார். அவர் புறப்படுவது எறக்குறைய ஆடப்போகிறவருக்கு பந்து வீச அல்ல என்பது போலவே இருக்கும். எல் வடிவத்தில் பயனப்பட்டு பந்து வீசுவார்.. எறக்குறைய லிபி கவிதை சொல்லும் முறையும் இத்தகையதே. எதிர்பாராத இடத்திலிருந்து .புறப்பட்டு சட்டென்று கோனம் மாறி நம்மை தகர்ப்பது லிபியின் வழக்கம்.. சமீப காலத்தில் இத்தனை அரசியல் தெளிவோடு, அழகியலோடு,, நுட்பத்தோடான கவிதை தொகுப்பை நான் வாசிக்கவில்லை. என். ஹெச் சாலை குறித்தும் லிபியால் கூரிய கவிதை எழுதமுடியும். அதன் ஓரத்திலிருந்து சுருட்டு குடிப்பவர்கள் குறைந்து வருகிறார்கள் என்றும் பேச முடியும். ஓரு கணக்கில் லிபியின் குரல் தனியானது. எதிர் குரலற்றது. இதனோடு சேர்ந்திசைக்க ஓருவரும் இல்லை. இந்த குரல்களினால் தான் காலகாலமாய் இடதுசாரிகள் பிரகடனக்காரர்கள் என்ற கறையை போக்க முடியும். அழகியலுண்டு என நிறுவ முடியும். நவின கவிகளின் சிம்மாசனத்திற்கெதிரே கால் கால் மேல் போட்டு அமர முடியும். அசலான அரசியல் கவிதைகளை முன்னெடுத்து செல்ல முடியும். நவின கவிதை என்ற பெயரில் பிறக்கும் நான் கடவுள் கதாபாத்திரங்களை கட்டுப்படுத்த இயலும். லிபி நீண்ட காலமாக எழுதி வருகிறார் கள்ளி பாலையும், கன்னி வெடிகளையும் தாண்டி விட்டார். இனி எந்த மீட்பரும் இவரை வழி மாற்ற முடியாது. மிக நிதானமாக தொகுப்பு கொண்டு வந்திருக்கிறார். நிச்சயமாய் பின் அட்டையில் தன் புகைப்படம் போட்டுக் கொள்ளவில்லை. காவிக் கோவணம். சொப்பனஸ்கலிதம் அகண்டபாரதம். என்றொரு கவிதை முடியும். லிபியின் மகத்தான வரிகளில் ஒன்றென இதை நான் கருதுகிறேன். காத்திரமான கவிதைகள் இன்னும் நிறைய நமக்கு இருக்கின்றன லிபியிடமிருந்து.

Friday, April 13, 2012

நாம்

எனக்கு காலையிலும் மாலையிலும்
தன்னையே பிழிந்து சூஸ் போட்டு கொடுக்கும் ஒரு அம்மா..
வட்டவட்ட சிப்ஸ் துண்டுகளாக தன் சதை அரிந்து தரும் ஒரு அப்பா..
இரண்டு இரத்தத்தின் இரத்தங்கள்..
என்றாலும் அவர்களின் வயிற்றுக் கடுப்பின் போது
நான் கழிவறைக்கு உடன் போவதில்லை.
என் மழைக்காலத்து ஆஸ்துமா இரவுகளில்
அவர்கள் குறட்டை விட்டு தூங்குகிறார்கள்


" அங்க இருக்க முடியல.. வீட்டுக்குள் புகுந்து
பெட்டைகள சிதைக்கிறாங்க.."
என்று அகதியொருத்தி பேட்டி தருகையில்
நான் பாயசம் அருந்திக் கொண்டிருந்தேன்
விழிக்கடை நீரை உதறி எறிந்து விட்டு
மீதி பாயசத்தை உண்டேன்நண்பனை சிமெண்னெய் ஊற்றி எரித்து விட்டு வந்த இரவு
கால முறைப்படி மனைவியை புணர்ந்தாக வேண்டிய நாளாக இருக்கிறது
"தம்பி.... ! எழந்திரு...."நாமுக்குள் எட்டிப் பார்த்தால்
நானும், நீயும் தனித்தனியாக தெரிகிறது.இந்த "ஓருடல் ஈருயிரை '
சுடுவதென்றால் எத்தனை முறை சுட வேண்டும்
குத்துவதென்றால் எத்தனை முறை குத்தவேண்டும்..

Monday, March 26, 2012

திசேராவின் “ வெள்ளைத்தோல் வீரர்கள் “- ஒரு வாசிப்பனுபவம்

இந்த கட்டுரை சார்ந்து உங்களின் பொருட்படுத்தலுக்காக முதலிலேயே சில விஷயங்களை சொல்லி விடுவது உத்தமம். நான் கவிதைகள் எழுதி வருகிறேன். ஆனால் கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள் பத்தைத் தாண்டாது. நான் சிறுகதைகள் எழுதுவதில்லை. உலகின் தலைசிறந்த பத்துகதைகளுள் ஒன்று என்கிற நினைப்பில் என்னால் எழுதப்பட்ட இரண்டு சிறுகதைகள் பிரசுர வாய்ப்பை பெறவில்லை.தவிர கொலைக்களத்திலிருந்து எழுதப்பட்டிருக்கும் இக்கதைகளை தின்று கொழுத்து, ஊதிப்பெருத்திருக்கும் சுகவாசியான நான் விமர்ச்சிக்கப் போகிறேன்.மேலும் இது என் முதல் சிறுகதை விமர்சனம். இக்கதைகள் தொகுப்பாக்கப் பட்ட ஆண்டு 2004. இதில் இருக்கும் சில கதைகள் 2000 ல் எழுதப்பட்ட்வை. ஆக சுமார் 10 வருட இடைவெளியில் நமது மண்டையை கொஞ்சம் பெரிதாக்கிக் கொண்டு 2012 இக்கதைகளை விமர்சிக்கப் போகிறோம்.

திசேராவின் கதை சொல்லல் முறை ரொம்பவும் நிதானமானது.உணர்வெழுச்சியால் பீடிக்கப்பட்டு பீறிட்டெழும் மொழிதல் அனேகமாக எந்தக் கதைகளிலும் இல்லை. ”குண்டுகள் எங்காகிலும் வெடித்துக் கொண்டே இருக்கின்றது” என்று துவங்கும் கதையிலும் கூட. இந்த நிதானமான மொழிதலோடு ஒரு மென் அங்கதம் தொகுப்பின் எல்லா கதைகளிலும் இழையோடு வருகிறது. அவர் அங்கதம் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பதில்லை. மாறாக ஒரு இதழ்பிரியா முறுவலோடு இக்கதைகளை படிக்க முடியும். இந்த மென் அங்கதம் கதையின் தீவிர தன்மையை கெடுத்து விடாது, வருவதே தெரியாமல் கதையுடன் பயணிக்கிறது.இதை இக்கதைகளின் சிறப்பென்று சொல்லலாம்.பொதுவாக அங்கதம் வசீகரமானது. வாசிப்பின்பம் அளிப்பது.ஆனால் பகடியின் ஆழத்தில் இருக்கு தீவிரத்தன்மை துலங்கி வராமல் வெற்றுப் பகடியால் அடித்துச் செல்லப்படும் பல கதைகளை நாம் படித்திருக்கிறோம். இத்தொகுப்பில் ”மறைந்து போன உருக்கள் “ என்கிற கதையைத் தவிர மற்றவற்றை இதில் சேர்க்க முடியாது.சாப நிலத்திலிருந்து எழுதப்பட்டிருக்கும் இக்கதைகளில் தவிர்க்க இயலாமல் மரணம் பற்றிய பீதி அனேக கதைகளில் காணக் கிடைக்கிறது. “ சாவு கொண்ட நாள்” என்கிற கதை சாவிலிருந்து தப்பித்து விட துடிக்கிறது எனில், “ மூன்று மரணங்கள் பற்றிய முன் குறிப்பு” இத்துயர வாழ்விலிருந்து தப்பி, மரணத்தை அணைத்துக் கொள்ள தவிக்கிறது. மரணதிற்கு பயந்து பயந்து வாழ்ந்து சலித்து ஒரு கட்டத்தில் தன் மரணத்தை தானே குரூரமாக நிகழ்த்திப் பார்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்ட ஒரு மனிதனின் கதையாகவும் நாம் இந்தக் கதையை வாசிக்கலாம்.

திசேராவும் இந்தக் கதையை தத்துவார்த்தப் பிண்ணனியியோடு தான் எழுதிப் பார்க்க முயன்றிருக்கிறார். ஆனால் அது அவர் சொல் பேச்சு கேளாமல் அரசியலோடு போய் நின்று கொள்கிறது. ” முதல் மரணம் சடப்பொருளான உடல் இறந்து போதல். இரண்டாம் மரணம் உயிரனுக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சந்ததிகள் இறந்து போதல். மூன்றாம் மரணம் புகழின் மரணம்” என்று தத்துவம் கதைக்கும் இக்கதை, மரணத்தை நோக்கி ஒரு மனிதனை மூர்க்கமாக தள்ளிய அரசியல் காரணிகளால் அரசியல் கதையாகவும் ஆகி நிற்கிறது.

இக்கதைக்குள் ஒரு சின்னக்கதை. உமாதேவியை சிவன் ஒரு நாள் நந்தவனத்துக்கு அழைத்துச் சென்றார். செடிகள் அழகாய் பூத்துக் குலுங்கின.மலரொன்றை பறித்துத் தர முடியுமா ? என்றார். அதிகமாக சிந்தித்தாள் உமை. முன்னர் பறிக்கப்பட்ட அடையாளங்கள் தென்பட்ட சாய்ந்து கிடந்த செடியிலிருந்து பூவொன்றைப் பறித்து வந்தாள். அதற்காக அவள் சற்று தூரம் செல்ல வேண்டி இருந்தது. ஏன் இத்தனை செடிகளைத் தாண்டி அதில் சென்று பறித்தாய் என்றார் சிவன். உமை சொன்னாள் ” இவைகளின் அழகு கெட்டு விடுவதில் எப்பொதும் எனக்கு உடன்பாடில்லை”... அவளை நோக்கிச் சிரித்த சிவன் “ இதன் காரணமாகவே துன்பப்பட்டவையே இன்னமும் உழல்கின்றன”. திசேராவின் கதைகளில் நாம் எங்காவது அழ விரும்பினால் இந்த பத்தியை விட்டால் வேறு வழியில்லை. நாம் கவனமாக இங்கு அழுது விட வேண்டும்.

இக்கதையும், “ சாவு கொண்ட நாள் “ என்கிற கதையும் இத்தொகுப்பில் என்னை கவர்ந்தவை. காரணம் அதன் துல்லியமான மொழிதல். மேலும் பிடித்த ஒன்று “ கண்ணியத்தின் காவலர்கள்”என்கிற கதை. ஆனால் தமிழில் சில அங்கத சொற்கள் வயதாகி இறந்து விட்டன. “ கண்ணியத்தின் காவலர்கள்” என்கிற தலைப்பும் அதில் ஒன்று தான் என்று நினைக்கிறேன்.

சாவு கொண்ட நாள் கதையில் குண்டு வெடிப்பின் போது ஒரு சாப்பட்டுக் கடையில் சிக்கிக் கொண்டு அங்கிருந்து வெளிவர பயந்து இரண்டு பெரிய விறகுக்கட்டைகளால் தன்னை மறைத்துக் கொண்டு படுத்துக் கிடப்பவனின்

பீதி நிறைந்த நினைவுகளாக பேசப்படுகிறது. இக்கதையிலிருந்து ஒரு சிறப்பான பகுதியை எழுதிக் காட்ட முயன்றேன். ஆனால் அது ஒன்றொடொன்று பின்னப்பட்ட சங்கிலி போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கதையையே எழுதிக்காட்ட வேண்டியிருக்கும் என்பதால் தவிர்க்கிறேன். என்னளவில் இது ஒரு ஆகச் சிறந்த சிறுகதை.

“ உங்களுக்காய் எதையும் செய்வேன்.. நான் என்றால் நீங்கள்.. நீஙகள் என்றால் நான்.. உங்களுக்கு வருபவை எல்லாம் எனக்கு வருபவை.. உங்கள் குடிசைகளை மாளிகைகளாக்குவேன்.. .. தங்கத் தட்டில் உணவருந்த வைப்பேன்.. “ இந்த அரசியல் சூழ்ச்சியுரைகளின் முன்

“ கை தச்டி கோசம் போட்டு ஏமாந்து போனவர்கள் நாம்.. உயர்ந்தவன் அவன்.. “ என்று ஒரு எதிர்ப்புக் குரல் மெல்ல எழுகிறது. அக்குரல் வலுத்து ஒட்டுமொத்த கூட்டத்தையும் பற்றிக் கொண்டு , ஜனத்திரள் முழுதும் மேடையில் ஏறி நீதி கோரும் கதையாய் அமைந்திருக்கிறது, “ஒளிப்பொட்டின் விரிவு” என்கிற கதை. இது அம்மேடையில் சிலையாய் நிற்கும் பாரதியின் கோபாவேசமான சொற்களாலேயே சொல்லப்பட்டிருக்கிறது. மக்கள், பயமெனும் பேய்தனை அடிப்பதையும், பொய்மைப் பாம்பை பிளந்து உயிரைக் குடிப்பதையும் பார்த்து பரவசமாகும் பாரதி மேடையிலிருந்து குதித்து ஆடுகிறான். இக்கதை முழுக்க கூட்டத்தில் இருக்கும் ஒருவனின் லட்சியக் கற்பனையாகவே சொல்லபடுகிறது. கதையை முடிக்கையில் திசேரா இரண்டு வரி எழுதுகிறார்...

“ நிஜத்துள் எங்கேயும் இப்படி தீ பற்றிக் கொண்டால் சந்தோசமாய் இருக்கும். நனவாக்கப் பட வேண்டிய தேவையாய் தோன்றிய உணர்வோடு அரங்கிலிருந்து வெளியேறினேன்’

இந்தக் கடைசி வரிகள் இக்கதையை கொஞ்சம் நீதிக்கதைகளின் பக்கமாய் முகம் திருப்பிக் கொள்ள செய்துவிடுகின்றன.

” கண்ணியத்தின் காவலர்கள்” கதை அரசியல் அதிர்வுகளோடு துவங்குகின்றன். ஆனால் சுகுமார், சதிஸ்குமார் என்கிற இரண்டு ஆண் நண்பர்களுக்கிடையேயான காதல் மிகவும் இயல்பாகவும், அன்பு ததுப்பும் சொற்களாலும் சொல்லப் பட்டிருக்கிறது.இக்கதை ஒரு தேய்வழக்கில் போய் முடிகிறது.ஒரினச்சேர்க்கையிலும் சாதி வந்து குறுக்கிடுகிறது.சுகு கண் மூடி கனவு நிலையில் ஒரு ஒளிமனிதனைக் காண்கிறான். சுகுவின் ஒளிமனிதன் வேறு யாராக இருக்க முடியும்? சதீஷ் தான். “ ஒளிமனிதன்- சதீஷின் தலையிலிருந்து இரத்தம் கசிந்தது... பச்சை இரத்தம்.. அவன் வேற்று சாதி என்பதால் பச்சை இரத்தம் வடிந்தது.’ என்று எழுதுகிறார். கதை இப்படி முடிகிறது. “ கதவு தட்டப்படும் ஓசை. சுகு எழுந்து கதவைத் திறக்கிறான். தலையில் காயத்துடன் சதீஸ் சிரிக்கிறான். தலை வெடிப்பிலிருந்து கண்ணுக்கும், காதுக்கும் நடுவாய் சிவப்பு இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.”

நமக்கு தவிர்க்க இயலாமல் “ உனக்கும் எனக்கும் இரத்தம் ஒரே நிறந்தாண்டா” என்கிற தழிழ் சினிமாவின் வீரவசனம் நினைவுக்கு வந்து தொந்தரவு செய்கிறது. muak”முகமணியும் மனிதன்” என்கிற கதையில் ஒரு மனிதனின் வெவ்வேறு முகங்களை எவ்வளவு நுட்பமாகவும், திறமையாகவும் சொன்னாலும், ஒரு மனிதனின் பலமுகங்கள் என்பது அடிப்படையில் ஒரு தேய்வழக்கே.

மறைந்து போன உருக்கள் என்கிற கதை தொகுப்பிலேயே பெரிய கதை.எனக்கு மிகவும் பிடித்த பாரதியாலும், அவனின் காத்திரமான சொற்களாலும், அவ்வையாலும் அவளின் அறம் தீட்டிய சொற்களாலும் சொல்லப்பட்ட்டிருந்தாலும் கூட மனதில் ஒட்டவில்லை. வானிலிருந்து இரண்டு தீக்குழம்புகள் பூமியில் விழுகின்றன.. ஒரு விஞ்ஞான புனைகதை போல் துவங்கும் இக்கதை அந்த இரண்டு உருவாக பாரதியையும், அவ்வையையும் சொல்கிறது. தலைப்பாகையும் கருப்பு கோட்டும் அணிந்திருப்பதால் பாரதி கங்காணியாகி விடுகிறார்.புதுமையை அதிகம் விரும்பும் திசேரா, அவ்வையின் பாடல்களுக்கு ட்ம்மி வரிகளை எழுதிப்பார்கிறார்.

“ பெரியது கேட்கும் பேரறிவு சிறுவா

பெரிது பெரிது புவனம் பெரிது

புவனமோ வல்லரசுகளுள் அடக்கம்

வல்லரசோ ஆயுத்துள் அடக்கம்

ஆயுதங்களோ உயிர்களைக் கொல்லும்

அயூதங்களின் பெருமை சொல்லவும் அரிதே”

என்று எரிச்சலுட்ட்டும் பகடியால் நம்மை துன்புறுத்துகிறார். ஒரு கட்டத்தில் அவ்வை இரானுவத்திடம் மாட்டிக் கொள்கிறாள். ஒரு ரானுவ வீரனின் வாயிலிருந்து சல்லொழுகுகிறது. திசேரா எழுதுகிறார்..

“ கம்பை தட்டிவிட்டு கைகளை உயர்த்தி, அப்படியே நிற்கும் படி மணிக்கட்டுகளை பற்றி உலுக்கி, தன் இரு கைகளையும் அவருடலில் ஒட்டி கீழ்நோக்கி வந்து கைகளை பின்னுக்காக்கி அவளை முன்னுக்கிழுத்து இறுக்கி அணைத்தான்’.. “ உங்கள் புத்தம் புதுமைக்கு ஒரு எல்லையே கிடையாதா திசேரா?”

சேலம் தக்கை கவிதை விமர்சன நிகழ்வில் “ ஆதவன் தீட்சண்யா கவிதைகள்” நூல் விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அரசியல் கூருணர்வுள்ளவராக கருதப்படுகிற ஆதவனின் கவிதைகளை அவரைப் போலவே அரசியல் கூருணர்வுள்ளவராக கருதப்படுகிற விஷ்னுபுரம் சரவணன் விமர்சித்துப் பேசினார்.ஆதவனின் மொத்தக் கவிதைகளிலும் சரவணன் பிரதிநிதித் துவப்படுத்தி வாசித்த ஒரு கவிதை “ இன்னும் இருக்கும் சுவர்களின் பொருட்டு” என்கிற கவிதை. அவ்வளவு கலைஅமைதி கூடிவரப்பெற்ற ஒரு அரசியில் கவிதை. இது எதேச்சையாக நடந்திருக்காது என்றே நம்புகிறேன். ஒரு சொல் கூட அதிர்ந்து பேசாத இந்தக் கவிதை நம் மனசாட்சியை விடாது தொந்தரவு செய்வது ஏன்? நமக்கு நாமே அருவெருப்பாக தோன்றும் மனநிலையை இது எவ்வாறு உருவாக்குகிறது? இதை கலையின் மகத்தான வெற்றி என்றழைக்க விரும்புகிறேன். ஆதவனின் எத்தனையோ கோபாவேசமான கவிதைகளை இந்தக் கவிதை எப்படி தாண்டி வந்தது. நான் இப்படி சொல்வதால் சத்தம் செய்யும் கவிதைகளில் கலைத்தன்மை கூடாது என்று பொருளல்ல. அது பற்றி தொடர்ந்து பேச இது இடம் அல்ல.

கலையாகாத ஒரு காத்திரமான அரசியில் பிரதியிடம் சொல்லிக் கொள்ள ஒன்று இருக்கிறது “ அன்பே நீ கலையாகும் போது இன்னும் அதிகமாக அரசியலாவாய்”.

இன்றைய மாலை நடை எடையற்றிருக்கிறது

எனக்கு கடை வாயில் மூன்று பற்கள் சொத்தை
இரண்டால் இப்போதைக்கொன்றும் பாதகமில்லை
கடந்த சில நாட்களாக
அந்த கடைசி பல்லின் ஊழிக் கூத்து...
அதிலிருந்து சல்லொழுகும் வேட்டைநாயொன்று
வெளியே குதித்தது.
அதன் குதிரை உயரத்திற்கு கீழே கிடந்தேன்
என் இத்துனூன்டு நெஞ்சில்
க‌னத்த குளம்படிகள் விடிய விடிய ஓடின‌
அப்பாவி நண்பர்கள்
வேட்டை நாயிற்கு கிராம்பு தைலம் பூசச் சொன்னார்கள்
வலி தாளாத நான்
வாயிற்குள் ஒரு ஊசியைப் போட்டு
நேற்றதைப் பிடுங்கி எறிந்தேன்.
இப்போது அங்கொரு சின்ன ஓட்டை.
காற்றை அள்ளி வாய் முழுக்க கொப்பளித்தேன்
இன்றைய மாலை நடை எடையற்றிருக்கிறது.
என் ஊரை விட்டு வெகு தூரம் வந்துவிட்டேன்
பாழாய்ப் போன என்னை விட்டு வெகுதூரம் கடந்து விட்டேன்
நான் சொல்கிறேன்..
இன்று நிறைந்த பெளர்ணமி.
வான் சொல்லும் சிறுபிறையை ஒரு வளைவளைத்து
முழுமதியாக்கி நடக்கிறேன்

Sunday, March 18, 2012

நெடுவெங்கோடை

சாலையின் தார் உருகி வழிந்து
வாகனங்கள் வழுக்கி விழுந்தன‌‌


தர்ப்பூசணிப் பழத்தில் தீ பிடித்துக் கொண்டது

என் உடலில் இருந்து
கல் உப்புகளை வழித்தெடுத்தேன்

பதினோரு ஆண்டுகள் கழித்து
மின்சாரம் வந்திருக்கிறது
நண்பா
அந்த ஃபேனை 20 ல் வை !

ஆதவன் தீட்சண்யா கவிதை


இன்னும் இருக்கும் சுவர்களின் பொருட்டு..

சுவற்றின் இந்தப்பக்கம் இருக்கும் என்பெயர் மனிதன்
அந்தப்பக்கம் யாரும் இருக்கிறீர்களா?

விடையிறுக்கப்படாத இந்தக் கேள்வியை எழுப்பியபடி
நானெருவன் எத்தனைக்காலம்தான் காத்திருப்பது?
உங்களில் ஒருவருக்கேனும் எனது குரல் காதில் விழுகிறதா?

என்னோடு உரையாடுவதை தவிர்த்துக்கொள்ளும் பொருட்டு
உங்களது குரல்வளையை
நீங்கள் இன்னும் அறுத்துக்கொள்ளாதிருக்கும் பட்சத்தில்
மறுமொழி சொல்லுங்கள் யாரேனும்

குலுக்குவதற்கு நீட்டப்பட்டிருக்கும் எனது கரங்கள்
மரத்துப்போய்
தானே தொய்ந்துவிழ வேண்டுமென்று
காலந்தாழ்த்தும் தந்திரத்தை கைக்கொண்டிருக்கிறீர்களா
அல்லது,
இதோ நானிருக்கிருக்கிறேன் என்று பதில் கூற
யாருமேயில்லாத பாழ்வெளியாய் கிடக்கிறதா அந்தப்பக்கம்

சுவர் உங்களைக் காப்பதாய் சொல்லிக்கொண்டு
சுவற்றை நீங்கள் காக்கும் இழிகாலத்தில்
எந்தப்பக்கம் இருபவர் யார் என்ற வழக்கில்
இப்போது எழுதப்பட வேண்டியது தீர்ப்பு
மட்டுமேயாதலால்
சுவற்றின் இந்தப் பக்கம் இருக்கும் என்பெயர் மனிதன்
அந்தப்பக்கம் யாரும் இருக்கிறீர்களா?
உஸ்பார் கொய் ஹை க்யா?
ஆக்கடே யாரு இதாரே?
திக்கடே பாஜீ கோன் ஆஹே..?
அக்கட எவுரு உண்ணாரு ?
அப்பக்கம் ஆரெங்கிலும் இண்டோ?
எனிபடி ஈஸ் தேர்?

Wednesday, March 7, 2012

கருணையின் ராஜா

பல நாள் திருடன் நான் இறந்துக் கிடக்கிறேன்
என்னை ஒரு நாளும் அகப்படாமல் இறக்கச் செய்தீர்
ஸ்தோத்ரம் ஆண்டவரே
சில ஈக்களை அனுப்பி என் முகத்தின் திருட்டு களையை
பறந்து போகப்பண்ணினீரே
ஸ்தோத்ரம் ஆண்டவரே
யோக்கியத்தின் கல்லிலிருந்து என்னை தப்புவித்தீர்
கருணையின் ராஜா !
உமக்கு நன்றி ஐயா

Wednesday, February 29, 2012

ஏக்கத்தின் தேன்


நள்ளிரவில் விழித்துக்கொண்டு
பாலுக்கழுகிறது என் குழந்தை.
ஒரு வாய் சோறதற்குப் போதவில்லை
அள்ளிஅள்ளிக் கொட்ட எனக்குத் துப்பில்லை.
கிறீச்சிடா வண்ணம் கதவு திறப்பதில்
அது சமத்தெனினும்
கொஞ்சம் கிறீச்சிட்டுத் தான் விடுகிறது.
அப்போது நான் கண்மூடிக் கிடப்பது போல் கிடப்பேன்.
தெரியும், அது மண் தின்னப்போகிறது.
போகட்டும்.
கையிரண்டில் அள்ளி வாய் முழுக்கத் தின்னட்டும்.
சதா ஏக்கத்தின் தேனூறும் அதன் கட்டை விரல்
சுண்டச் சூம்பி விட்டது
சீக்கரத்தில் மறைந்து விடும்.
கண்நுதல் நெருப்பில் தப்பிப்பிழைத்த
ஒரு துளியிலிருந்து
பிறந்து வளரும் குழந்தையிது,
சிவனேன்னு கிடப்பதில்லை ஒரு பொழுதும்

Friday, February 17, 2012

தம்பி

ஒவ்வொரு அதிகாலையிலும்
அவசர அவசரமாக பல்துலக்கி முடிக்கையில்
ஒரு நினைப்பு
இன்று எவளோ ஒருத்தியின் இதழ்கடித்து தின்போமென.
தம்பி இன்னும் கொஞ்சம் பேஸ்டை பிதுக்கி
இன்னும் கொஞ்சம் துலக்குகிறான்.

Wednesday, February 15, 2012

நில்லுங்கள்

அந்தப் பக்கம் போகவேண்டாம்
அங்கு தான் அம்பிகாபதி அமர்ந்து
லாட்டரி சீட்டுகளை உரசிக் கொண்டிருக்கிறான்.
நூறு சீட்டிற்கு ஒரு சீட்டில்
கடைசி எண்ணில் கோடிகள் தவறிவிடும் அவனுக்கு.
அப்போது ஒரு சிரி சிரிப்பான்.
அந்த சிரிப்பில் சிக்கி செத்தவர் அனேகம்.
அந்தப் பக்கம் போகவேண்டாம்.

Monday, January 23, 2012

சிவாஜி கணேசனின் முத்தங்கள் - இசையின் இன்னொரு தொகுப்பு மரபின் மைந்தன்-

அதிகபட்ச அவமானத்தில்,. நிராசையின் நிமிஷங்களில், ஒரு மனம் தேடக்கூடியதெல்லாம் குறைந்தபட்ச ஆறுதலைத்தான். ஆனால் ஆறுதல் சொல்லும் அக்கறையினூடாக உண்மை நிலையை உணர்த்தும் நேர்மையும் இருந்துவிட்டால் அதைவிடவும் ஆதரவான நம்பகமான தோழமை வேறேது?

"ராஜகிரீடம்
உன் சிரசில் பொருந்தாததற்கு
யார் என்ன செய்ய முடியும் நண்பா?
இந்த வாயிற்காப்போன் உடையில்
நீ எவ்வளவு மிடுக்கு தெரியுமா?"

என்றெழுதும் இசையின் கவிதைகளில் ஒலிக்கிறது நேர்மையான, நம்பகமான குரல்.

இசையின் மூன்றாவது கவிதைத் தொகுப்பின் தலைப்பு "சிவாஜி கணேசனின் முத்தங்கள்". முத்தக்காட்சிகளிலும் சிவாஜியாகவே இருக்கும் சிவாஜி, முத்தத்துக்கான மறைப்புக் காட்சிக்குப் பின்னர் உதடு துடைக்கும் போதுகூட சிவாஜியாகத்தான் இருக்கிறார்.


ஆனால் மூன்று தொகுதிகளிலும் இசை இசையாகவே இருப்பதில் நாம் மகிழ்ச்சியும் ஆறுதலும் கொள்ள முடிகிறது.

விட்டுவிட முடியாதவற்றை விட முயல்வதும் விட்டு விட்டவற்றை திரும்பத் தருவிக்க முயல்வதும் ஒன்றுக்கொன்று சளைக்காத அபத்தங்கள். அத்தகைய அபத்தங்களின் ஆக்கிரமிப்பல்லவா வாழ்க்கை!!

"ஒரு பறவையை வழியனுப்புதல்"என்ற கவிதையில் இதைக்குறித்து நுட்பமாகப் பேசுகிறார் இசை.

"ஒருபறவை கூட்டை விட்டு
வெளியேறும் விருப்பத்தைத் தெரிவிக்கையில்
நீங்கள் அதற்குத் தகுந்த காலநிலையைத்
தெரிவு செய்து கொடுக்க வேண்டும்.

அதன் சிறகுகளை ஒருமுறை
சோதித்துக் கொள்வது நல்லது.
தேவையெனில் அதன்
வலிமையைக் கூட்டும் வழிகளையும் கற்பிக்கலாம்"

என்று சொல்லிக் கொண்டு வருகிற கவிதை இப்போது வேறு திசையில் வாளை சுழற்றத் தொடங்குகிறது.

"அடிக்கடி அதைத் தடவிக் கொடுப்பதை
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் கண்களைத் தவிர்த்துவிட வேண்டும்"

என்றெல்லாம் ஆங்காங்கே செருகுகிற வாள் ஒரு கட்டத்தில் முகமாகவே மாறிவிட்ட முகமூடியின் தோலைக் கிழிக்கிறது..

"பிறகு,
வானத்தைப் பார்க்கும் சாக்கில்
அண்ணாந்து பார்க்காதிருக்க வேண்டும்".

"தம்பி அந்தக் கல்லை எடு" என்கிற கவிதை தொந்தியைப் பற்றிப் பேசுகிறது.

"ஆடைக்குள் மறைத்து எடுத்துச் செல்லப்படும்
திருட்டுப் பொருள்போல்
அது என்னை உறுத்தும்போதெல்லாம்
நான் அனாதை இல்லங்களுக்கு
மதிய உணவு வழங்கினேன்"

என்கிறார் இசை.

ஒரு மனிதன் தன்னைத்தானே அசௌகரியமாய் உணரும் தருணம் ஒரு தவறை முதன்முதலாகச் செய்யும் தருணம்தான். மற்றவர்களுக்கு ஒன்றை நிரூபிப்பதும் தனக்குத் தானே ஒன்றை நிரூபித்துக் கொள்வதும் அடிப்படையில் வெவ்வேறு. தன்னைத் தனக்கே நிரூபிக்கும் கணம் எவ்வளவு அற்புதமானதோ அவ்வளவு அசௌகரியமானது, தன்னிடம் தானே பிடிபடும் தருணம்.

இந்த உணர்வை மீட்டும் இசையின் கவிதை ஒன்று. அந்தக் கவிதையின் ஒரே துரதிருஷ்டம் அதன் தலைப்பு. ஆகவே அந்தத் தலைப்பைத் தவிர்த்துவிட்டு அந்தக கவிதையைப் பார்க்கலாம்.

"அறவுணர்ச்சி
என் கசாப்புக்கடையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்
ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆடு.
அதை நிலத்தில் கிடத்தி அமுக்குகையில்
அது தெரிந்து கொண்டு
ஓலமாய் ஓலமிடும்....."

என்று நீள்கிற கவிதையில்,குற்றவுணர்ச்சி ஓர் அமெச்சூர் அறங்கொல்லியை எப்படி வதைக்கிறது என்று அழகாகச் சொல்கிறார்.

"நான் முதன்முதலாக ஒரு ஆட்டை வெட்டியபோது
அது குதிரையைப் போலக் கனைத்தபடி
கால்களைத் தூக்கிக் கொண்டு
என் கனவில் வந்தது.
நான் தலையணைக்கடியில்
மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து
அதைக் கனவில் ஒரு போடு போட்டேன்.
மகா கொடூரனின் முன்னால்
நீதிகேட்டுப் போவது மடமையென்று
தன் இனத்திற்கு அறிவித்துவிட்டு
அது மடிந்து போனது."

இந்தக் கவிதையின் நிறைவு வரியும் முக்கியமானது.

"ஒரு நீதிமான் முதல் ஆட்டை வெட்டும் போது
தயவுசெய்து நீங்கள் அவனைக்
காணாததுபோல் நடந்து கொள்ளுங்கள்"மனித மனம் மிகவும் நுண்ணியது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வை எவ்வளவு தூரம் இயந்திர கதியில் இயக்கினாலும் எங்கோ ஓரிடத்தில் அல்லது யாரேனும் ஒருவரிடம் தன் நுண்ணுணர்வுகள் வெளிப்படும் விதமாய் நடந்து கொள்கிறான். நுண்ணுணர்வுகள் போல் அற்புதமும் கிடையாது . அபத்தமும் கிடையாது. இந்த உணர்வை உறுதி செய்யும் விதமாய் இசையின் கவிதை ஒன்று.

"நாம் கதைகளில் மட்டுமே படித்திருக்கிற
பொன்நிறப் பறவையொன்று அவன் வீடு தேடி வந்தது.
கண்கூசி முகம் ஜொலித்தது அவனுக்கு.
100 முறை ஸ்பரிசித்துவிட்டால்
ஓடிவிடும் பறவை அது.
அவன் முதல் நாளே 74 முறை தடவிக் கொடுத்தான்.
பிறகு விவரம் அறிந்து பதறியவன்
இனி தொடவே மாட்டேன் என்று சொல்வதற்காக
நூறாவது முறை தொட்டான்."

இந்த வாழ்க்கை உற்சாகமானதென்று சொல்வதற்கோ நம்புவதற்கோ பலருக்கும் பெரிதாகக் காரணங்கள் இல்லை. ஆனால் தன்னையே தூண்டி உற்சாகப்படுத்திக் கொண்டுதான் அவர்கள் பலரும் வாழ்கிறார்கள். தன்னைத்தானே உற்சாகப்படுத்திக் கொள்ள சில எளிய பிரயத்தனங்களே போதும் என்பதும் இசையின் வரிகள் உணர்த்தும் உண்மை.

"மேல்சட்டையைக் கால்சட்டைக்குள் செருகி
பெல்ட் வைத்துக் கட்டி
ஒரு நாளை புத்தம் புதிதாக்கினேன்.
முகத்தின் கருங்காட்டை வழித்தெடுத்ததில்
நெகுநெகுவென்று திறந்தது ஒருநாள்.
சப்பென்றிருக்கும் நாளின்மீது
கொஞ்சம் உப்பையும் மிளகாய்ப்பொடியையும்
தூவிவிடுவேன்.
இப்போது இது ஒரு சுவையான வெள்ளரிப்பிஞ்சு".

இன்னாதம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே"

என்கிறான் சங்கப் புலவன். இசையும் இன்னாத வாழ்வில் இனிமை காண்கிறார். இந்தக் கவிதையின் கடைசி வரிகளைப் பாருங்கள்.

"எம் கே டி எத்தனை நாட்களைத்தான்
வெளுத்துத் தருவார்..
வாயில் ஊறும் இது,
இந்த நாளில் இருபத்திமூன்றாவது கம்பர்கட்"

இந்தத் தொகுப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்த கவிதை, "விகடகவி மட்டையை உயர்த்துகிறார்". வாழ்வின் நொம்பலங்களை சிரித்து மழுப்ப நேரும் அவலத்தை அழகாகச் சொல்லும் இந்தக் கவிதையின் சில பகுதிகள்:

"முதன்முதலாக நான் செருப்படி வாங்கியபோது
வானத்தில் போன பறவைகள் அப்படியே
நின்றுவிட்டன.
கடலில் எழும்பிய அலைகள் அந்தரத்தில்
ஸ்தம்பித்து விட்டன.
இரண்டாவது முறையாக செருப்படி வாங்கியபோது
பறவைகள் அதுபாட்டுக்குப் பறந்தன
அலைகள் அதுபாட்டுக்கு அடித்தன...
...........................................................................
...........................................................................
எல்லோரும் என்னை விகடகவி என்பதால் நான் எல்லாவற்றையும் விளையாட்டாக்கிக் காட்ட வேண்டியுள்ளது. எனவே 100 ஆவது செருப்படியின் போது இந்த உலகத்திற்கு முன்னால் நான் ஒரு மட்டையை உயர்த்திக் காட்டினேன்.

ஆனால் 101 ஆவது செருப்படி ரொம்பவும் வலுவாக நடு மொகரையில் விழுந்தது. நான் ஒரு விகடகவியாதலால் வாயை இளிப்பிற்குக் கொண்டுவர முயன்றேன். அதற்குள் கண்ணிரண்டும் கலங்கிவிட்டன."

இந்தக் கடைசிவரியைப் படித்தபின் கவியும் அதிர்ச்சியும் மௌனமும் அடர்த்தியானது.ஒரு கவிதை தரக்கூடிய அதிகபட்ச அனுபவமும் அதுவே.
"சிவாஜி கணேசனின் முத்தங்கள்"

-இசை
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.70