Skip to main content

Posts

Showing posts from March, 2022

வண்ணங்களின் ஆட்டம்

  பொ டிப் பட்டாம் பூச்சியொன்று ஆவாரஞ்செடியை சுற்றிச் சுற்றி வருகிறது ஒரு கிளையிலிருந்து இன்னொன்றுக்கு ஒரு மலரிலிருந்து இன்னொன்றுக்கு ஒரு இலையிலிருந்து இன்னொன்றுக்கு மாறி மாறி அமர்ந்து என்னென்னவோ பேசுகிறது தன்னையும் ஆட்டத்தில் சேர்த்துக்  கொள்ளச் சொல்லி கண்ணீர் வடிக்கும் சிறுவனைப் போல அருகிருந்து தேம்புகிறேன் நான்.

சோக இரத்தம்

இ ன்னொரு முறையும் என் தலைக்குப்  பின்னே ஒலித்தது சோக வயலின் அதற்கு என்னைத் தெரியும் ஆயினும் அது அதன் கடமையை ஆற்றுகிறது இதயத்தோடு உரசி உரசி இதயமாகவே மாறிவிட்டது சோகம் எனது இதயம் சோக இதயம் எனது இரத்தம் சோக இரத்தம் சோக வயலினில் சோகம் உண்டு இதம் உண்டு இனிமை உண்டு சோக வயலினை சோக வயலினால் ஒன்றும் செய்விட முடியாது.

உலகை அலங்கரித்தல்

உ றுதியாக மிக உறுதியாக ஒரு இராசயனக் கலவையல்ல உன் நெற்றியில் வட்டமிட்டு அமரும் அப் பொட்டு.

அல்லது

  மி ன்னல் தாக்கி என் குழந்தை  துடிதுடித்துச் செத்த மறுநாள் என் முன்னே இரண்டு சாத்தியங்கள் இருந்தன நடுத்தெருவில் பைத்தியம் போல் கத்தியபடி கத்தியைத் தூக்கிக் கொண்டு மின்னலைக் கொல்ல ஓடுவது அல்லது ஃபேஸ்புக் அக்கவுண்டை   டீ ஆக்டிவேட் செய்துவிடுவது

திருக்காப்பு

இ ரைச்சலும் குழப்பமும்  நீங்காத சந்தைக்கடைத் தெருவில் அமர்ந்துள்ளது ஒரு நாய் அவ்வளவு அழகாக அவ்வளவு கம்பீரத்தோடு "எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்கிற காவலோடு. நான் அதையே நெடுநேரம்  உற்றுப் பார்த்தபடி இருந்தேன் அதே நாயின் சாயலில் இன்னொரு நாய் தெரிந்தது. அது  பூமிப்பந்தின் முகப்பில் அமர்ந்துள்ளது. அதே பாவனையோடு அதே உறுதிமொழியோடு உள்ளே நாம் மனம் ஓய்ந்து  உறங்கிக் கொண்டிருக்கிறோம்.

அழைப்பு

  அ த்தனை கரங்களையும் விரித்து அழைக்கிறது ஒரு வயலெட் மலர். தவழ்ந்து தவழ்ந்து தவழ்ந்து தவழ்ந்து போகிறது குழந்தை. வயலெட் மலருக்கு வயலெட் வண்ணம் வழங்கியது எதுவோ அதனோடு விளையாட.

தருண தாவரம்

  மெ யின் பாடகி  ஏற்கனவே களைத்திருந்தாள். மேலும் அவளுக்கு  தான் யார் என்பது நன்றாகவே தெரியும். பாடலினின் உச்சகட்டத் திருவிழா  கோரஸின் பொறுப்பில் இருந்தது. மொத்த அரங்கமும் எழுந்து பறக்கும் தறுவாயில் களைப்பை   எறிந்து  மெயினை மறந்து அவ்வளவு அனிச்சையாக வந்து கூடினாள் அவள். மெயின் கோரஸில் கலக்கும் கழிமுகத்துச் செழிப்பில் தழைத்து வளர்ந்தது இந்தக் கவிதை. காற்றில்  அசைகின்றன பார் இதன் சொற்கள்.

வாழ்க!

  மு தன்முதலாக  காதல் நம்மை ஒரு கோவிலுக்குள் அழைத்துச் செல்கையில் செருப்பைக் கொஞ்சம் அலங்கோலமாக  உதறிவிட்டேன். கடிந்து நீ சொன்னாய்.. "செருப்பு விடும் அழகிலிருந்தே  வாழ்வின் ஒழுங்கு துவங்குகிறது..." அன்றிலிருந்து இரண்டு ரோஜாக்களை அருகருகே அணைந்து வைக்கப் பழகிக் கொண்டேன். சொன்னது நீ என்பதால் அதை அப்படியே நம்பி விட்டேன்.  விடாது  வளர்த்துவருகிறேன்  நம் ரோஜாக்களை இன்று வரை.  நெடுங்காலம் கழித்து நேற்றுன்னை கடைவீதியில் கண்டேன். செருப்பைக் கொண்டு  வாழ்வை ஒழுங்கு செய்ய முயன்ற  சின்னஞ் சிறுமியே..!  உன் பேதை நெஞ்சத்தழகு வாழ்வாங்கு வாழட்டுமென்று கூட்டத்துள் பதுங்கி  ஒளிந்து கொண்டேன்.

கவனக்குறைவின் திருவிழா

  கூ ட்ட நெரிசலில் மாறி மாறி கை கோர்த்துக் கொண்டன  இரு ஜோடிகள். சின்ன அலறலோடு நான்கு எட்டில் தீர்ந்து விட்டது ஒரு திருவிழா.