இரைச்சலும் குழப்பமும் நீங்காத சந்தைக்கடைத் தெருவில் அமர்ந்துள்ளது ஒரு நாய் அவ்வளவு அழகாக அவ்வளவு கம்பீரத்தோடு "எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்கிற காவலோடு. நான் அதையே நெடுநேரம் உற்றுப் பார்த்தபடி இருந்தேன் அதே நாயின் சாயலில் இன்னொரு நாய் தெரிந்தது. அது பூமிப்பந்தின் முகப்பில் அமர்ந்துள்ளது. அதே பாவனையோடு அதே உறுதிமொழியோடு உள்ளே நாம் மனம் ஓய்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறோம். |
உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும் அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில் மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு வேறொரு காதல் இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?
Comments