Skip to main content

Posts

Showing posts from April, 2016

நம்பு !

                          இந்தக் கோடையை எத்தனை எலுமிச்சைகளின் துணையுடன்  கடந்து வந்தேனோ அத்தனை எலுமிச்சைகளின் மீதும் ஆணையிட்டுச்  சொல்கிறேன்.. என்னை நம்பு !

உண்கண்

            காதலனொருவனுக்கு “ கண்டார் உயிர் உண்ணும் கண் “ என்கிற வரியை வாசித்த மாத்திரத்தில் மெய்நடுக்கம் கண்டு விட்டது. அல்லும், எல்லும் அதையே பிதற்றித் திரிந்தான். உண்கையில், உடுக்கையில் குளிக்கையில், கழிக்கையில் சொல்லி சொல்லிப்பார்த்தான். நடத்துனரிடம்  பத்து ரூபாய் நீட்டி  உயிருண்ணும் கண்களைக் கேட்டான். பணியிடத்தில் ஏத்துயேத்தென்று ஏத்தும் போதும் உள்ளுக்குள் அக்கண்களை கண்டு நின்றான். அடேய்..மடதம்பி..! அதிகாலை 5 மணிக்கு எல்லா கண்ணும் பீளையுண்ணும் கண்.

செல்வத்தைத் தேய்கும் படை

                       இந்த நகரத்தின் ஓரங்களில் சாக்கடையைப் போல்  சுழித்து ஓடுகிறதே  இ து  எங்கள் கண்ணீர்... இந்த நகரத்தின் பாலங்களில் ஓடி விரைகிறதே இ வை நேற்று  சந்தைக்கு வந்த கொள்ளையர்  தம் சிவிகை இரண்டும் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்வதில்லை.

நீதிநெறி விளக்கம்

                                 நான் பார்க்க எவ்வளவு காலமாய் எந்தக் கதவையும் உடைக்காமல் எந்தப் பூட்டையும் திறக்காமல் இவ்வளவு சாவிகளைப் பரப்பிக்கொண்டு இப்படி புதன்கிழமைச் சந்தைகளில் வீற்றிருக்கிறார் இந்தக் கந்தலாடைக் கிழவர்.

நீர்மலிகண்ணார்

இன்னும் எவ்வளவோ இருக்கிறது எல்லாம் உனக்குத்தான் வேறு யாருக்குமல்ல இன்னும் எவ்வளவோ இருக்கிறது எல்லாம் உனக்குத்தான் வேறு யாருக்குமல்ல

ஏகாந்த வாசம்

                   பீடையின் எண்ணிறந்த ஸ்தலங்களில் நான் கொஞ்சம் விசேசம் என் கண்களைத் திறந்து வைத்தால் நன்றாக காற்று வரும். சுற்றிலும் வேம்பும் அரசும் நிற்கின்றன. இடிக்கு தூர்ந்து விடாது மழைக்கு ஒழுகி விடாது இதமான வர்ணங்களால்  எழிலுற வனையப்பெற்ற விசாலமான அறைகள்... இவ்வுடல் பூடைக்கு கொழுநிழல். என் கால்மேல் கால்போட்டு மார் மேல் தலைசாய்த்து அப்படியொரு தூக்கம் அதற்கு.