Sunday, February 1, 2015

செவிநுகர்கனிகளின் இனிப்பும் சத்தும்

                  
                                         ( .மோகனரங்கனின் மீகாமம் )


     

                கவிஞரும் விமர்சகருமான .மோகனரங்கனின்  மூன்றாவது கவிதைத்தொகுப்பு இது. கடந்த சில வருடங்களாக இவர் விமர்சகரும் கவிஞருமானஎன்கிற முன்னொட்டோடு அழைக்கப்பட்டு வந்தார் அல்லது இரக்கமின்றிவிமர்சகர் என்றழைக்கப்பட்டார்.குறிப்பிடத்தக்க கவிதைகள் நிரம்பிய இத்தொகுப்பு தழிழில் இவரை ஒரு குறிப்பிடத்தக்க கவியாக நிறுவுகிறது. பார்க்க மெலிதாக தெரிகிற இத்தொகுப்பு உண்மையில் வாசகனிடம் அதிகமாக வேலை வாங்குகிறது. ஒரு தழிழ் மாணவனுக்கு மகிழ்ச்சியையும் பரவசத்தையும் தரவல்ல நிறைய கவிதைகள் இதில் உள்ளன. பக்கங்களை கொண்டு  படைப்பை அளவிட இயலாது என்பது மீண்டும் ஒரு முறை இத்தொகுப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வெறும் 48 பக்கங்கள் என்று ஒரு வாசகன்  நம்புவானாகில் அவன் ஏமாந்துபோகவே வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு பக்கத்தையும் புரட்ட அவ்வளவு  நேரமாகிறது.

       இன்றைய கவிதைகளின் மேல் இரண்டு குற்றச்சாட்டுகள் உண்டு. முதலாவது “ இவை தமிழில் எழுதப்பட்டாலும் இதில் தமிழ் வாசனை இல்லை” என்பது. இரண்டாவது, “தமிழின் வளமார்ந்த இசைமொழி இதில்  இல்லைஎன்பது.... இந்த இரண்டு குற்றச்சாட்டுளையும் இத்தொகுப்பை நோக்கி கூற இயலாது. இவை அசலான தமிழ் கவிதைகள்…. மேலும் செவிநுகர் கனிகள். செவிநுகரும்கனிகள் சமயங்களில் மோசமாக புளிப்பவை. நாம் அதில் சூப்பி ரசிக்க ஒன்றுமே இருக்காது. அல்லது  ஒரே சூப்பில் மொத்தமும் மறைந்து விடும். பளபளக்கும் தோலால் மூடப்பட்டிருந்தாலும் சமயங்களில் உள்ளே ஒன்றுமே இருக்காது. ஆனால் மோகனரங்கனின் இக்கனிகள் இனிப்பும் சத்தும் நிரம்பியவை.

     துள்ளும் மீனுக்கும்
     தூண்டில் முள்ளுக்கும்
     இடையே
     எப்போதுமிருப்பது
     கைசொடுக்கும் நேரம் தான்.
     அதற்குள்
     ஓடி முடிகிறது ஒரு நதி
     தேங்கி நிறைகிறது ஒரு ஏரி
     புரண்டு மறிகிறது ஒரு கடல்
    தோன்றி மறைகிறது ஒரு கனவு
    வாழ்வென மயங்குகிறது நினைவு.
                       ( தோற்றமயக்கம் )
  இது போன்ற வரிகளை நினைவில் வைத்து வைத்து சுவைக்கலாம்.

      ஒரு கவிஞன் சொல்லை அறிந்திருக்கிறான். அவ்வளவு சூடான ஒரு சொல் எவ்வளவு சீக்கிரத்தில் ஆறிப்போகிறது என்பதை   பார்க்கிறான். அதை நம்பி வாழும் அவனை அது எவ்வளவு மோசமாக ஏமாற்றுகிறது என்பதையும் பார்க்கிறான். அவனுக்கு  சொல் மேல் எவ்வளவு அன்புண்டோ அதே அளவு விரோதமும் உண்டு. அது அழைத்த குரலுக்கு ஓடோடி வரமாட்டேன் என்கிறது அதனாலேயே ஒரு கவி தன் வாழ்நாள் முழுக்க அதை அழைத்துக்கொண்டே இருக்கிறான். சொல் நிழல் தருவதைப் போலவே அலைக்கழிக்கவும் செய்வதை  தன் முன்னுரையில் குறிப்பிடும்  மோகன்,   இத்தொகுப்பில் பயன்படுத்தி இருக்கும் சொற்கள் அலாதியானவை. புதர்மறைவில் நெடுநேரம் ஒளிந்திருந்து சரியான தருணத்தில் எய்யப்பட்ட  பிழையாத பானங்கள் என்று அவற்றை சொல்லலாம். இலக்கை சாய்த்துவிட்ட சந்தோசத்தை அவை தாராளமாக கொண்டாடலாம். சொற்களை நம்பாதவராக இருப்பதாலேயே அது குறித்த திருட்டுத்தனங்களில் தேர்ந்தவராக இருக்கிறார்.
“ பண்புடையாள் மாட்டு/ பகிர்ந்து கொள்ளும்/ முத்தங்கள் “ என்கிற யுனிவர்சிட்டி மொழியை “ தந்திரமாக கவிதைமொழியாக்கி விடும் வித்தை அவருக்கு கைகூடியிருக்கிறது.
    
    மீகாமம் எனப்பெயரிடப்பட்டிருக்கும் இத்தொகுப்பு காமத்தின் வெவ்வேறு  ரூபங்களை நம் முன் வைக்கிறது.அது எப்படி முத்தமிடும், எப்படி நஞ்சூட்டும் , முத்தமிடும் பாவனையில் நஞ்சூட்டி , நஞ்சூட்டும் பாவனையில் முத்தமிட்டு, அவிழாத புதிரின் தீராத இளமையில் நின்று அது எப்படி கள்ளச்சிரிப்பு சிரிக்கும் என்பதை நமக்கு  எழுதிக்காட்டியிருக்கிறார் மோகன்...

  
    யவனராணி

களைந்த பின்
தேடி
ஏமாறுகிறேன்.
உடுத்தி
நீ
நடக்கையில்
பிறப்பித்து
உலவவிட்ட
இரகசியங்கள்
ஒவ்வொன்றையும்.

 இந்தக் கவிதையை வாசித்து முடித்ததும் வியப்பும் துக்கமும் மேலிட்ட்து. வியப்பை விவரிக்க வேண்டியதில்லை. துக்கத்திற்கான காரணம் இது என்னுடைய கவிதை என்பதால். என்றாவது ஒரு நாள் இந்தக்கவிதையை நான் எழுதிவிடுவேன் என்றிருந்தேன். “ நானே எழுதுவேன் “ என்று இறுமாந்திருந்தேன் என்றும் சொல்ல்லாம். நீண்ட பெருமூச்சுடன் இக்கவிதையை திரும்ப திரும்ப வாசித்தேன். தீராத ஆதங்கத்தில் அப்போது உரையாட நேர்ந்த ஒரு மூத்தகவிஞரிடம் இக்கவிதையை பகிர்ந்து கொண்டேன். அவர் நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டார். ஏன் என்று விசாரித்தால் “ இது அவருடைய கவிதையாம். இப்படியாக இந்தக்கவிதை வாழ்வாங்கு வாழட்டும். முழுக்க சுற்றி இழுத்துச்செருகிய பின் ஒரு சின்ன சதுரம் போன்று வெளித்தெரியும் இடையை கண்டுதான் ஒருவனுக்கு புத்தி பேதலித்து போகிறது. ரவிக்கையின் மேல்வெட்டில் பளீரிடும் முதுகுப்பரப்பில் அவன் வாழத்துவங்குகிறான். முற்றாக களைந்த விட்டபின் அவன் அதை அங்கு தேடுகிறான். பாவம், மோசமாக ஏமாந்து போகிறான்.இங்கு தானே இருந்தது... இங்கு தானே இருந்தது”  என்றவன் பரிதவிக்கிறான். அவனுக்கு அது அங்கு தான் இருக்கிறது என்பது உறுதியாக தெரியுமாகையால் தன் வாழ்வு முழுக்க அதைத் தேடியலைகிறான்.

            வாழ்க்கை- நாடகம் – ஒப்பனை- முகமூடி என்று பேசிச்சலித்த விசயங்களைத்தான் பேசிகிறது ஒரு கவிதை. ஆனால் அக்கவிதைக்கி இடப்பட்டிருக்கும் தலைப்பு வசீகரிப்பதாக இருக்கிறது.ஆயிரத்து ஒருவன் “ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.  ஆயிரத்தில் ஒருவனின் காலம் முடிந்து விட்ட்து போலும். இது ஆயிரத்து ஒருவன்களின் காலம். ஒரு சொல்லை கொஞ்சம் நகர்த்தி வைத்து அதை முற்றாக மாற்றிவிடும் ரசவாதத்தை இத்தலைப்பு செய்திருக்கிறது இன்னொரு தலைப்பு குறித்தும் சொல்ல வேண்டும்...

     கூட்டிலிருந்து
     விழுந்தெழுந்து
     பயத்தோடு,
     பறக்கக்
     கற்றுக்கொள்ளும்
     குஞ்சுப் பறவைக்காக
     குனிந்து கொடுக்கிறது
     வானம்.
கொஞ்சம் பிசகியிருந்தால் ஒரு தன்னம்பிக்கை கவிஞராகி உயர்தர  உணவகங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு  தொங்கவிடப்பட இருந்த ஆபத்திலிருந்து  இத்தலைப்பின் மூலம் தப்பியிருக்கிறார் மோகன். இக்கவிதை கொஞ்சம் போலஎன்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. இப்போது அந்தக்கவிதையை ஒரு முறை  திரும்ப வாசிக்கும் போது அதன் தொனி மாறியிருப்பதைக் காணலாம். தன்னம்பிக்கை கவிஞனின் மனதில் “ கொஞ்சம் போல “ என்கிற சொல்லே கிடையாது. அவருக்கு எல்லாமே “ ரொம்ப போல” அல்லவா ?
    
  இத்தொகுப்பின் கவிதைகளில் பழந்தமிழ் கவிதைகளின் வரிகள் சில ஊடாடி வருகின்றன. தமிழில் இதற்கு முன் சி.மணி இம்முறையை கையாண்டிருக்கிறார். இம்முறை கவிதைக்கு ஒரு “ புத்தழகை “ நல்கவே செய்கிறது.இக்கவிதைகளை பரிசிக்க கொஞ்சம் பழந்தமிழ் வாசிப்பு அவசியமாகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் வாசிப்பு இன்னும் சுவையுடைத்தாகிறது. நேரே “ மேற்கிலிருந்து “ இறங்கி வரும் ஒரு வாசகன் இக்கவிதைகளின் முன் கொஞ்சம் தள்ளாடியே போவான். இம்முறை குறித்த என் தனிப்பட்ட அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொள்ள இது சரியான தருணம் என்று நினைக்கிறேன். நண்பர் ஒருவர் சமீபத்தில் சி.மணியின் கவிதைகள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். பிரசுரத்திற்கு முன் அவரும் நானும் பரஸ்பரம் எழுத்துக்களை காட்டிக் கொள்வது வழக்கம் என்பதால் அக்கட்டுரையை படிக்க நேர்ந்தது. அக்கட்டுரையில் சி.மணியின் கவிதையாக சிலாகிக்கப்பட்டிருந்த கவிதை “பலபட்டடை சொக்கநாத புலவருடையது “. மணி இந்தக்கவிதையை அப்படியே தூக்கி  தன் நெடுங்கவிதை ஒன்றில் பயன்படுத்து இருக்கிறார். “ தனிப்பாடல் திரட்டில் “ சொக்கநாதப்புலவர் எழுதியிருப்பாதாக காணப்படும் சுமார் 50 கவிதைகளில் என்னளவில இரண்டு தான் கவிதை. அதில் ஒன்று அபாரமானது. அபாரமான அந்த ஒன்றையும் சி.மணிக்கு தூக்கித் தந்துவிட்டால் பாவமல்லவா சொக்கநாதர்?. இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பழந்தமிழ்வரிகளை குறித்த சில குறிப்புகளை பிண்ணினைப்பாக தர முடியுமா  என்பது குறித்து நாம் யோசிக்கலாம்.        ” விளக்குவது “ கவிதையை கொல்கிறது என்பது உறுதியாகி விட்ட படியால் அடிக்குறிப்பாக தர இயலாது . ஆனால் பிண்ணினைப்பாக தரலாமா?  அல்லது அதுவும் கவிதையை கொல்லுமா என்னும் சிக்கலை என்னிலும் அறிவு முதிர்ந்தோரிடம் விட்டு விடுகிறேன். ஆனால் அந்த இணைப்பு ஒரு வாசகனை பழந்தமிழ் கவிதைகளை நோக்கி நிச்சயம் நகர்த்தும். அவன் போய் “ சிறுகோட்டு பெரும் பழத்தை “ , உன்னித்தெழுந்த இளமுலையை, கள்ளத்தில் நீரருந்தும் மானை, ஒரேருழவனை, பாழ்காத்திருத்தலை பார்த்துவிட்டு வரட்டும்.


             சில சொற்களை ஒரு குறிப்பிட்ட ஒன்றிற்கென்று  எழுதித்தந்து விடுகிறோம்.பிடிக்கிறதோ இல்லையோ அச்சொல் அதனோடே வாழவேண்டி இருக்கிறது.தினமும் உணர்ச்சியற்று பாடப்படுகிற ஒரு பாடலின் உள்ளே சிக்கித்தவிக்கும் ஒரு நல்லசொல்லின் மீது கவிஞருக்கு இஷ்டமோ அனுதாபமோ
பிறந்திருக்கிறது. தமிழ்தாய் வாழ்த்தில் இடம் பெறுகிற “ நின் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே” என்கிற வரியில் இருக்கும் “ சீரிளமை “ என்கிற சொல்லை தனியே  பிய்த்தெடுத்து வந்து,  தன் கவிதையின் மூச்சைக்கொடுத்து அதை புத்துயிராக்க முயன்றிருக்கிறார். இம்முயற்சி  அவ்வளவு சுலபமானதல்ல. அரிதாகவே வெற்றி கிட்டும். எனினும் இப்பணி ஒரு கவிக்கு சவாலானதும் அவசியமானதுமாகும் என்பது என் எண்ணம்.
             

               “  கொண்டு
                 கூட்டிக்
                கொள்ள முயலும் தோறும்
                குழம்பிப்  பொருள் மாறும்
                உந்தன்
                சீரிளமை தேகம்…. “

என்கிற வரியை எத்தனை முறை வாசித்தாலும் தேகத்தை முந்திக்கொண்டு
“ கொடிக்கம்பம் “ நம் மீது சாயந்து விடுகிறது அல்லது என் மீது சாய்ந்தது.
   
         தொகுப்பில் சில நல்ல காதல் கவிதைகள் உண்டு. நெடுநாள் கழித்து சந்திக்கும் தன் காதலியின் கார்குழலில் இருந்து தனித்தெழுந்து ஆடும்  நரைமுடியைக் கண்ணுற்று அவர் பதறிப்போகிறார். “ கருக்கலில் எழுந்து பறக்குமொரு கொக்கு “ என்றவர் அரற்றுகிறார். காதல் இவரையும் விட்டுவைக்கவில்லை என்பதை அறியும் போது என மனதில் பெரும் நிம்மதியும், மகிழ்ச்சியும் குடிகொள்கிறது.

     அறிவு ஜீவிகள், மகாகலைஞர்கள் பொதுவாக அந்த விசயத்தில் “ வீக் என்று சொல்லப்படுவதுண்டு. அந்தவிசயத்தின் பொருட்டு அவர்கள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வதும் உண்டு. நான் அறிவுஜீவியோ , மகாகவியோ அல்ல என்பதால் எனக்கு அது குறித்து ஏதும் தெரியாது.

   சுரி குழல்
   நெளிவு ;
   தோடுடைய
    செவி ;
   தொய்யா விள
   முலைகள் ;
   திருவிறக்கத்தின் பாற்பட்ட அரிவரித் தடம்:
   இறுகிய
   இடைபற்றித்
   திரண்டொடுங்கி
 மெலிந்திரங்கிடும்
 மென் கால்கள் :
 மேற் செல்ல
 பொய்யா மலரெனப்
 பூத்த சேவடிகள் :
 திருக்காணவல்ல
 தெள்ளியருக்கு
 தேகமதும்
 தெய்வமே.
                                            
          என்கிறார் கோனகரங்கன்.
                                             ( தொழுகை )


    நான் இவரை ரொம்ப நல்லவர் என்று நினைத்துகொண்டிருந்தேன். காமத்தின் முன் அதுவும்  மீகாமத்தின் முன் யார்தான் நல்லவர்?

    “ ஆசையை
      பாவமென்று
      எண்ணத்தலைப்படாத
      பெண்ணெவளும்
      அம்மணியென்றே
      அறியப்படட்டும் “
 என்கிற வரியின் முன்னே நெடுநேரம் அசையாது அமர்ந்திருந்தேன்.

 

          ( ஈரோடு  இலக்கிய சுற்றம், தமிழினி பதிப்பகம் இணைந்து 31/01/2015 அன்று ஈரோட்டில் நிகழ்த்திய அமர்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை )

2 comments:

sambu said...

It is nice observation and right exposing isai...- sambu

எழுத்தாளர் பைரவன் said...

nandri sambu