
கையில் ஒரு அலுமினியத் தட்டில்லை
உடைகளில் கிழிசலேதுமில்லை
ஆனாலும் அந்தக் கண்கள் ..
அது நிச்சயம் ஒரு பிச்சைக்காரனுக்குரியவை
அவன் உணவு
தேக்கு மரக்கதவுகளாலும்
சுற்றி நிற்கும் காம்பவுண்டு சுவர்களாலும்
இரண்டு கொழுத்த நாய்களாலும்
தாளிட்டுக் கொண்டு ஒரு மாளிகைக்குள்
வாழ்கிறது.
அந்த வீதியில் எத்தனையோ
வீடுகள் திறந்திருக்கும் போதிலும்
பன்னெடுங்காலமாக
அவன் அந்த இரும்பு கிராதிக்கு
கீழே தான் நின்றுகொண்டிருக்கிறான்.
காம்பவுண்டு சுவரை எகிறிக் குதித்து,
நாய்களை கொன்று வீசி விட்டு
தேக்குமரக்கதவுகளை
உதைத்து உதைத்து திறக்கும் நாயக பாவத்தில்
அவன் புனையும் பாடல்கள்
அவனைப் போலவே
இரும்பு கேட்டுக்கு கீழே கிடக்கின்றன.
அவன் அப்பாடல்களை தின்று வாழ்கிறான்
அல்லது அந்தப் பசியை.
அது நன்கு வறுக்கபட்ட கோழி இறைச்சியைப் போல் இருக்கிறது.
அது வாழட்டும்
காணவே காணாத அந்தப் பிச்சை
அதுவும் வாழட்டும்
அந்த நாய்கள்
அவை வாழ்வாங்கு வாழட்டும்.
Comments
சமயவேல்