Skip to main content

அன்னை அளாவிய கூழ்


             




காயத்ரி சித்தார்த்தின் " மகள் கீர்த்தி" நூலிற்கான முன்னுரை...


ஆட்டம் போடும் வீடு

பூட்டிக் கொண்டு கிளம்பினேன்
எதையோ மறந்து போனதால்
உடனே திரும்பினேன்; திறந்தேன்
டிவியும்  ஃப்ரிட்ஜும் ஓடிப் பிடித்து
விளையாடிக் கொண்டு இருந்தன
அலமாரியில் உள்ள புத்தகங்களெல்லாம்
அணி அணியாகப் பிரிந்து கபடி
ஆடிக் கொண்டிருந்தன.
சோபா-வுக்கும்  சேரு-க்கும் ஓட்டப் பந்தயம்.
பழைய சாக்ஸ்கூட  தன்னிச்சையா
சுற்றிக் கொண்டிந்தது
ஒரு நிமிஷத்துக்குள்
எல்லாம் இயல்பு நிலையை அடைந்து விட்டன
‘என்ன இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டான்’
என்று தண்ணீர் பாட்டில் முணுமுணுத்தது.
அப்புறம் அமைதியாகிவிட்டது
பிறகு ஒன்றும் நிகழவில்லை.
பூட்டிக்கொண்டு கிளம்பினேன்.
திறப்பதற்கு முன் தட்டி இருக்கவேண்டும்
என்ன நாகரிகம் இல்லாத பிறவி நான் !

- முகுந்த் நாகராஜன்

ஒரு தாய் தன் மகளின் கீர்த்திகளைப் பாடியிருக்கும் நூல் இது. அவர் தமிழறிந்தவர்  என்பதால் இயல்பாகவே ஒரு இலக்கியப்பிரதியின் இன்பத்தில் சமைந்திருக்கிறது.  “தீபத்தைக் கொண்டு சுடரேற்றிய தீபம் போலிருக்கிறாள் கீர்த்தினி” என்கிற முதல் வரியை கொஞ்சி முடிக்கவே எனக்கு அதிக நேரம் ஆனது. குழந்தைமையும் சமயங்களில் அதிலிருந்து எழும் நகையுணர்வும் இப்புத்தகத்திற்கான ஆதாரங்களாக உள்ளன. ஆனால் இந்த நகை கிச்சுகிச்சு மூட்டுவதல்ல. மாறாக பரவசமளிப்பது.

மொழிக்குள் விளையாடுபவர்கள் கவியும் குழந்தையும். மொழியைப் புரட்டிப் போடும் சாகசத்தில் கவிக்கு கடும் சாவல் விடுவது ஒரு குழந்தைதான். கவியும் குழந்தையும் இணைந்தெழும் தருணங்கள் மின்னற் பொழுதுகள். கவி கஷ்டப்பட்டுக் கெடுத்தால் ஒழிய அது மின்னாது விடாது. முகுந்த் நாகராஜனின் கவியுலகம் இப்படியான ஒளிச்சரிகைகளால் ஆனது. காயத்ரியின், “நான்கு வருடங்களாய் கொஞ்சமும் அலுத்துக் கொள்ளாமல் எல்லா கணங்களிலும் அழகாய் இருக்கிறாள்” என்ற வரியில் காலுதைத்துப் பறந்தால் முகுந்தின் கவியுலகிற்குள் மெத்தென்று போய் விழுகிற ஆனந்தத்தை அடையலாம்.
சுகுமாரன் கவிதையையும், மனுஷ்யபுத்திரனின் கவிதையையும் அடுத்தடுத்து பிழிந்து வைத்தாற்போல ஒரு பத்தியைச் செய்திருக்கிறார்.

“உன் சொற்கள் ஆணைகளாகட்டும்” என்று ஒரு வரி பிறக்கிறது. இந்த உலகில் அப்படி ஆகிவிடாது. ஆனால் ஒரு அன்னை நெஞ்சுபூத்து சொல்லும் அத்தருணத்தில் அப்படியான ஒரு உலகம் பிறந்து விடுகிறது. நம் கண்களில் நீர் கோர்த்துவிடுகிறது.

பழந்தமிழ் இலக்கிய அறிவை “யாம் பெற்ற இன்பம்” என்கிற நியதிப்படி கிடைக்கிற இடங்களில் எல்லாம் வாந்தியெடுத்து வைக்காமல் பொருத்தமான இடங்களில் அதன் ஒளியைச் சரித்துக்காட்டுகிறார். ஒரு தமிழ் மனைவி தன் தமிழ்க்கணவனை “நீ என்னில் செம்பாகம் அன்று பெரிது” என்று தமிழால் அணைத்துக்கொள்ளும் போது “ஆஹா… இப்போது நாம் எந்த லோகத்தில் இருக்கிறோம்?” என்று இன்பத்தில் குழம்பி விடுகிறது நமக்கு.

இன்றைக்கோ நாளைக்கோ எனும்படிக்கு மூக்கில் செருக்கப்பட்ட குழாய்களுடன் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கபட்டிருக்கிற ஒரு வரி " ஐ லவ் யூ". நாம்தான் அதை இப்படி ஆக்கினோம். சொல்லிச் சொல்லித் தேய்த்து அதன் ஊனை உருக்கி வெற்றுக் கூடாக்கி விட்டோம். பாவம்.. லவ்வற்ற மனிதர்கள்! கிடைக்கிற வாய்ப்புகளை விட்டுவிட முடியுமா என்ன?  நமக்காகத்தான் கீர்த்தினி "ஐ தவ் வூ" என்கிற ஒரு புதிய வரியை படைத்து அளித்திருக்கிறாள். நாம் இனி நமது வேலையைத் துவங்கலாம். நான் இந்த சனிக்கிழமையே துவங்கி விட்டேன்.

கிருஷ்ணாவை "கிச்சா" வாக்கி அவனை வைகுண்டத்திலிருந்து பூமிக்கு இழுத்து வந்து விடுகிறாள் கீர்த்தினி. கிருஷ்ணர் இப்போது வீட்டிற்கு சிலிண்டர் போட வரும் ஒரு அண்ணன். " உனக்கெல்லாம் என்ன குறை...ஸ்கூலா ஒன்னா? என்று துக்கம் கட்டிய முகத்தால் கேட்டபடி இவளுக்கு கையாட்டிச் செல்லும் ஒரு பள்ளிச்சிறுவன்.

“புலியும் புதரும்” ஓவியத்திற்கு ஒரு புதரை மட்டும் வரைந்துவிட்டு புலிக்குட்டி அதனுள் தூங்குவதாகச் சொல்லும் கீர்த்தினியின் நவீனஓவிய அறிவின் முன் “காதலா காதலா” கமலஹாசனே அஞ்சிப் பின்வாங்குவார்.

தான் பட்ட துன்பங்கள், அவமானங்களைத் தன் பிள்ளைகள் படக்கூடாது என்று பெற்றோர் எண்ணுவது இயல்பானதே. அதே சமயம் தான் " விட்ட இடங்களை" பிடிக்கும் வேட்டை நாய்களல்ல பிள்ளைகள் என்பதையும் அவர்கள் மறந்துவிடக் கூடாது. சின்னஞ்சிறு கிளிகளை அவசர அவசரமாக "செல்வக் களஞ்சியமாக்க” வேண்டியதில்லை.

லிபி ஆரண்யாவின் கவிதை வரியொன்று நினைவில் எழுகிறது.

"களைத்து வீடு திரும்பும் குழந்தைகளின்
அடையாள அட்டையைக் கழற்றுகையில்
கழுத்தில் ஸ்டெத் வளர்ந்து வருகிறதாவென
பதட்டத்துடன் தடவிப் பார்க்கின்றனர்."

குழந்தை டாக்டராக வளரும் புளகாகிதங்களாக இல்லாமல், குழந்தை குழந்தையாக வளரும் பரவசங்களைச் சொல்வதனாலேயே இது ஒரு குறிப்பிடத்தகுந்த நூல்.

"என்னளவில் அம்மாவாயிருப்பதற்கும் அசடாயிருப்பதற்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை" என்று ஒரு அழகான வரியுண்டு புத்தகத்தில்.

அசடாயிருக்கும் அம்மாக்களால் வீட்டிற்கோ நாட்டிற்கோ உயிருக்கோ ஒரு கேடுமில்லை. ரொம்ப விவரமாக இருக்கும் ஒரு அம்மா " பாப்பா, ரெண்டாவது போகாம டைரக்டா பண்ணண்டாவது போயிட்ரய்யா...என் செல்லமில்ல..." என்று கெஞ்சிக்கேட்கிறாள். அவளால்தான் சிக்கல்.

“தம் மக்களன்றி எம்மக்கள் மெய்தீண்டும் போதும்” புளகமுறுமாறு ஒரு மனிதனால் மேலெழ முடியுமா?  அப்படி மேலெழுந்து நிற்கும் மனிதர்களும் நம் கண்ணெதிரே இருக்கவே செய்கிறார்கள். காயத்ரி.. நீங்கள் அவர்களுள் ஒருவராக இருக்க வல்லவர். அகிலத்து அன்னையாக எழுந்து விரியுங்கள். பேரன்னையாகுங்கள்! “யாவரும் மகள்” என்பது உங்களின் அடுத்த நூலாக இருக்கட்டும். கீர்த்தினிகளில் ஒரு கீர்த்தினிக்கு என் கள்வெறி முத்தங்கள். கீர்த்தினி, உன் மெரினாவில் அலை குன்றாதிருப்பதாக!
முன்னுரையின் முதலில் இருக்கும் முகுந்தின் கவிதை அன்னையாவதற்குப் பிள்ளைகள் கூட அவசியமில்லை என்று சொல்வதாகவே எனக்கு தோன்றுகிறது.

இது ஓர் அன்னை அளாவிய கூழ். சமயங்களில் வயதை மறந்து நாமும் வாயைத் திறந்து விடுகிறோம்.

                                    இசை
                                            19/12/19

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம