Skip to main content

புதிய நூலின் இரு அத்தியாயங்கள்



   கம்பனின் காதல் கவிதைகள் 




  
       1. துயரச் சந்தனக் கிண்ணம்


இராமனும், இலக்குவனும் சீதையைத் தேடிச் செல்கையில் கிட்கிந்தையில் உள்ள பம்பை என்கிற பொய்கையை அடைந்து அங்கு ஒரு நாள் தங்குகின்றனர். மலர்கள், பறவைகள், மீன்கள் என இயற்கை எழில் மிக்க பொய்கை அது. கன்னியர் கனி இதழ்ச்சுவை போல் ருசிப்பது. கம்பன் இந்தப் பொய்கையை ஒளியும் நறுமணமும் கூடிய சந்தனக் கிண்ணம் என்கிறான்.

“…ஒண்தளச்
சேறு இடு பரணியின்
திகழும் தேசது” (3723)

அதன் எழில் இராமனுக்குச் சீதையின் எழிலை நினைவுறுத்தி வருத்துகிறது. அந்தப் பொய்கையில் காதலின் துயர நாடகங்கள் நிகழ்கின்றன.

அரி மலர்ப் பங்கயத்து
    அன்னம், எங்கணும்,
‘புரிகுழல் புக்க இடம்
    புகல்கிலாத யாம்,
திருமுகம் நோக்கலம்; இறந்து
    தீர்தும்’ என்று,
எரியினில் புகுவன எனத்
    தோன்றும் ஈட்டது; ( 3715)

அந்தப் பொய்கையில் உள்ள தாமரையில் அன்னங்கள் வாழ்கின்றன. அவ்வளவுதான் செய்தி. ஆனால் கம்பன் செக்கச் சிவந்த தாமரையை, பற்றி எரிய விடுகிறான். அதில் அன்னங்களை எரி புக வைக்கிறான். ஏனாம்? அவற்றால் சீதை இருக்கும் இடத்தை இராமனுக்கு காட்டித் தர இயலவில்லையாம். ஆகவே அவன் முகம் காண நாணி, இறந்தொழிவோம் என தீயுள் விழுகின்றனவாம்.

அந்தப் பொய்கையின் மீன்கள் இராமனின் கண்களில் தாம் பட்டுவிடக் கூடாது என்று ஓடியோடி ஒளிகின்றன. அவன் கண்டுவிட்டால் பிறகு சீதையின் கண்கள் நினைவில் எழுந்து வருத்த, அவன் கண்கள் அழத்துவங்கிவிடும் அல்லவா?

‘களிப் படா மனத்தவன்
    காணின், “கற்பு எனும்
கிளிப் படா மொழியவள்
    விழியின் கேள்” என,
துளிப் படா நயனங்கள்
    துளிப்பச் சோரும்’ என்று,
ஒளிப் படாது, ஆயிடை
    ஒளிக்கும் மீனது ( 3717)


மீன்கள் இப்படி ஓடியோடி ஒளிய, அன்னங்களும், குவளை மலர்களும், குமுத மலர்களும் வேறு மாதிரி யோசிக்கின்றன. நம்மால் சீதையைத்தான் அவனுக்கு பெற்றுத் தர இயலவில்லை. அவளது சாயைகளையாவது காட்டி அவனைக் கொஞ்சம் ஆற்றுப்படுத்துவோம் என்று அவன் முன்னால் வந்து வந்து தோன்றுகின்றன அவை.

கவள யானை அன்னாற்கு, ‘அந்தக்
    கடி நறுங் கமலத்-
தவளை ஈகிலம்; ஆவது செய்தும்’
    என்று அருளால்,
திவள அன்னங்கள் திரு நடை
    காட்டுவ; செங்கண்
குவளை காட்டுவ; துவர் இதழ்
    காட்டுவ குமுதம். (3725)


காதல் எங்காவது ‘போதும்’ என்று சொல்லியுள்ளதா? அதற்கு அந்த வார்த்தையே தெரியாது. அதுவும் காதலைத் தொலைத்துவிட்டு கண்ணீர் பெருக தேடி அலைபவன் எப்படி ‘போதும்’ என்று சொல்லுவான்.

‘வண்ண நறுந் தாமரை மலரும்,
    வாசக் குவளை நாள்மலரும்,
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும்
    மருந்தின், தரும் பொய்காய்!
கண்ணும் முகமும் காட்டுவாய்;
    வடிவும் ஒருகால் காட்டாயோ?
ஒண்ணும் என்னின், அஃது
    உதவாது, உலோவினாரும் உயர்ந்தாரோ?’ (3732)


பச்சைப் புண் போல் எரிகிற என் நெஞ்சுக் காயத்திற்குக் களிம்பு போல அவள் கண்களையும் முகத்தையும் காட்டித் தரும் பொய்கையே! உன்னால் அவள் முழு வடிவையும் காட்டித் தர முடியாதா? தன்னால் ஒன்று இயலும் போதும் அதை உதவாது உலோபம் காட்டுவோர் உயர்ந்தோரா என்ன ?

உதவிக்கு வருவோரையே பழித்து வைப்பதும் மனிதனின் குணங்களில் ஒன்று தானே?

மயில்களே உங்களுக்குப் போட்டி ஒழிந்ததன்றோ? ஆகவே இப்போது உங்களுக்கு மகிழ்ச்சிதானே? என்று மயில் இனத்தை வம்பு செய்கிறான்.

“ஓடாநின்ற களி மயிலே! சாயற்கு
ஒதுங்கி, உள் அழிந்து
கூடாதாரின் திரிகின்ற நீயும்
ஆகம் குளிர்ந்தாயோ….” (3734)

சீதை என்னிடத்தில் இல்லை. என்னை விட்டு அப்பால் இருப்பவளும் இல்லை. அப்படியிருக்க அவளுக்கு விருப்பமான உன்னிடம் தானே அவள் இருந்தாக வேண்டும். அவளை என்னிடம் காட்டாமல் ஒளித்து வைத்திருக்கும் உன்னிடம் எனக்கென்ன உறவு?

“ … … தாமரையே!
என்பால் இல்லை; அப்பாலோ
இருப்பார் அல்லர்; விருப்புடைய
உன்பால் இல்லை என்ற போது
ஒளிப்பாரோடும் உறவு உண்டோ?”( 3736)

சீதை தாமரைச்செல்வியன்றோ?

ஒரு குவளை இயல்பாக மலர்ந்து ஒளி வீசுகிறது. என்ன நிலை கண்டு சிரிக்கிறாயோ? என்கிறான்.

“ …கண் போல் மணிக் குவளாய்!
நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால்
என்னை நலிவாயோ?” ( 3739)
“… தன்னின் நீங்கிய தளிரியற்கு
உருகினன் தளர்வான்,
உன்னும் நல் உணர்வு
ஒடுங்கிட, புலம்புதலுற்றான்” ( 3730)


‘உன்னும் நல் உணர்வு’ என்பதற்கு ‘ஆராய்ந்தறிதற்கு உரிய நல்லறிவு’ என்று பொருள் சொல்லப்படுகிறது. காதற் துயர் மிக, ஆராய்ந்து அறியும் அந்த அறிவு மங்கிடப் புலம்பத் துவங்கி விடுகிறான் இராமன். அதாவது நடையின் நின்றுயர் நாயகன், அறத்தின் மூர்த்தி, பாற்கடலில் பள்ளிகொண்டு உலகைக் காத்தளிக்கும் திருமாலின் அவதாரம், அரிய மறைகளாலும் அறிந்து கொள்ள முடியாத (அருமறைக்கு உணர்வு அரும் அவனை) இராமனுக்கு நல் உணர்வு அழிந்து விடுகிறது. அழுகை முதலில் வந்து விடுகிறது. பிறகு மெய்ஞானம் மெதுவாக வந்து, இப்படி அடித்துக் கொண்டு அழ இதில் ஒன்றுமில்லை என்கிறது. யதியின் ஒரு கட்டுரை இப்படிச் சொல்கிறது … “என் குரு ஒரு முறை என்னிடம் சொன்னார்… அழக்கூடிய அளவு உண்மை இந்த உலகத்தில் இல்லை. அதனால் சிரியுங்கள்” வாசித்த உடனேயே நெஞ்சில் பொறித்துக் கொள்ள வேண்டிய வாசகம் என்று தோன்றியது. ஆகவே பொறித்துக் கொண்டேன். மறுநாள் இரவே தேம்பி அழும்படி ஆகிவிட்டது. ஆனால் மனிதர் நனிநாகரீகர் “எங்கே நெஞ்சைக் காட்டு?” என்றவர் கேட்கவில்லை.

இன்னொரு பாடலில் இராமன் வருந்தவில்லை, புலம்பவில்லை கண்ணீர் சிந்தவில்லை வெறுமனே ஒரு காட்சியைக் நோக்குகிறான். ஆனால் துயரம் பெருகிவிடுகிறது. சொல் அவிந்து பெருகும் துயரம்.

வார் அளித் தழை மாப்
    பிடி வாயிடை,
கார் அளிக் கலுழிக் கருங்
    கைம் மலை
நீர் அளிப்பது
    நோக்கினன், நின்றனன் -
பேர் அளிக்குப் பிறந்த
    இல் ஆயினான்.( 3741)

           

தன் பிடியின் வாயில் ஆண் யானை பொய்கை நீரை அள்ளி அள்ளி ஊட்டுவதைக் காண்கிறான் இராமன். கருணையிம் பிறப்பிடம் என்று போற்றப்படுபவன். இன்றோ கையறு நிலையில் நிற்பவன். ‘நோக்கினன், நின்றனன்’ என்கிற சொற்களுக்கிடையே காட்சி உறைந்து கிடக்கிறது.


            2. தூய காமுகி   



தூய காதல் என்று ஒன்று உள்ளது போல் தூய காமம் என்றும் ஒன்று இருக்குமல்லவா? காமம் என்றாலே காதைப் பொத்திக் கொள்ளும் பண்பாடு நமது. ஆனால் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் குதறி வைப்பதில் குறை வைப்பதில்லை. இன்பத்து ஊற்றால் உலகம் முழுதையும் படைத்தளித்து விட்டு, மாபாவியைப் போல் பதுங்கு குழிகளில் மூச்சடக்கி வாழ்கிறது நமது காமம்.

அன்பு, பேரன்பு, நேசம், ப்ரியம், இரத்தப் பெருக்கு, தற்கொலை முயற்சி, வாக்குறுதி, ஓருயிர் ஈருடல், நீ பாதி நான் பாதி போன்ற உணர்ச்சிகரங்களின் பெயரில் உடல்களை வேட்டையாடுவதை விடவும், தூய காமம் தீங்கானதல்ல. அது தந்திரசாலி அல்ல. ஏமாற்றுப் பேர்வழி அல்ல. அன்புள்ள பிரியமே! சொன்னால் நம்பு, யார் மழையில் நனைகிறார்களோ அவர்களுக்குதான் காய்ச்சல் வரும். எவ்வளவு கவித்துவக் குறைவு என்றாலும் இதுவே உண்மை . இதுவே சத்தியம்.

கம்பனில் தூய காமுகி ஒருத்தி வருகிறாள். அவள் பெயர் அயோமுகி. இராமனை சூர்ப்பணகை இச்சித்தது போல, இலக்குவன் பால் காம வயப்பட்டவள் இவள். அயோமுகி எனில் இரும்பைப் போல் முகம் கொண்டவள் என்று அர்த்தமாம். அவள் மூச்சில் நெருப்புத் தெறிக்கிறது. யானைக் கூட்டங்களை இனிதின் மென்று தின்றுவிடுபவள் அவள். பெரிய பாம்புகள் அவள் வளையல்கள். புலிகளைக் கொன்று ஆரமாக அணிந்தவள். சிங்கங்கள் இரண்டை காதணியாகத் தொங்க விட்டவள். பல யாளிகளைக் கோர்த்து தாலியாக்கி அணிந்திருப்பவள்.

நீள் அரவச் சரி,
தாழ் கை, நிரைத்தாள்;
ஆள் அரவப் புலி
ஆரம் அணைத்தாள்;
யாளியினைப் பல
தாலி இசைத்தாள்;
கோள் அரியைக் கொடு
தாழ் குழை இட்டாள் ( 3588)


இலக்குவனைக் கண்டு ‘மன்மதன் ஆம் இவன்’ என்று மயங்குகிறாள். இவ்வளவு அழகனை விழுங்கவா முடியும்? அணைக்கத்தானே முடியும்?

“…புழுங்கும் என் நோவொடு
புல்லுவேன்; அன்றி
விழுங்குவெனோ என
விம்மல் உழந்தாள்” ( 3581)

அயோமுகி தன் காமத்தை சொல்ல இலக்குவன் அதை மறுக்கிறான். அவள் மாயத்தால் அவனை மயக்கி தன் குகைக்குத் தூக்கிச் செல்கிறாள். இறுதியில் மாயத்திலிருந்து விடுபடும் இலக்குவன் அரக்கியின் அங்கங்களை அறுக்கிறான் என்கிறது கதை.

அவள் இலக்குவனிடம் தன்னை இப்படி அறிமுகம் செய்கிறாள்

பேசினேன்; அங்கு அவள்
பேசுற நாணாள்;
ஊசல் உழன்று அழி
சிந்தையளும்தான்,
‘நேசம் இல்
அன்பினளாயினும், நின்பால்
ஆசையின் வந்த அயோமுகி’ ( 3592)

தன் இச்சை தணியுமோ தணியாதோ என்கிற ஊசல் மனம் கொண்டு வருந்தும் அவள் தன் காமத்தைப் பேச நாணவில்லை. ‘நேசம் இல் அன்பினளாயினும்’ என்கிற வரிக்கு அறநிலைப் பதிப்பு இப்படிப் பொருள் சொல்கிறது ‘பழைய உறவு இல்லாத அன்பு உடையவளாயினும்’ வாசித்த உடனே அதன் பொருத்தமின்மை விளங்கிவிடுகிறது. .மேலும் அவ்வரியை ஒட்டி தன் குழப்பத்தையும் சொல்கிறது ‘மூன்றாவது அடிக்கு வேறு பாடங்களும் உள எனினும் நாம் கொண்ட பாடம் உட்பட எதற்கும் முற்றும் பொருந்துறப் பொருள் கொள்ள இயலவில்லை. ஏடெழுதியோர் பிழையோ, பொருள் கொள்ள நம்மால் உள்ள குறையோ தெரியவில்லை.’ நேசமோ அன்போ கலவாத தூய காமத்தைச் சொல்வதாக அவ்வரி இருக்கக் கூடும் என்று நான் சந்தேகிக்கிறேன். வெறுமனே ‘ஆசையின் வந்த அயோமுகி’ அவள். வேறு பாடங்கள் என்னென்ன சொல்கின்றன என்று எனக்குத் தெரியவில்லை. நானும் ஒரு பாடம் சொல்ல முயல்கிறேன் அவ்வளவே. ஒரு வேளை தூய காமத்திற்கு அறிஞர்கள் அஞ்சுகிறார்களோ என்னவோ? அந்த வரிக்கு என்ன பொருள் வந்தாலும் அவள் தூய காமுகி அதில் சந்தேகமில்லைதான்.

அயோமுகி! 21 ம் நூற்றாண்டுக் கவிதை ஒன்றை வாசிக்கிறேன். உனக்குப் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.

நம்மிடையே வேறு கணக்குகளில்லை

இன்றுதான் முதன்முதலாக பார்த்துக் கொண்டோம்
இந்த மாலை நம்மை மயக்கிப் போட்டிருக்கிறது
நாம் இந்த இரவை மயக்கத்துள் தள்ளுவோம்

உன் முலைக்காம்பில்
தாய்மையின் ஊற்று பொங்கிக் கொட்டுவதாக
நான் பொய் சொல்ல மாட்டேன்

என் விரிந்த மார்பில்
அப்பனின் சுகம் இருப்பதாக நீ கதை விடாதே

நமது அம்மணம் விடுதலையானது
புணர்ந்து தீர்ந்த பின்னும்
கசகசக்கும் வியர்வையோடு
கட்டிக் கொண்டே கிடக்க வேண்டிய அவசியம்
அதற்கில்லை.
செளகர்யமாக நாம் தனித்தனியே உறங்குவோம்

பெயர்களில் என்ன இருக்கிறது?
உன் பெயர் பெண்
என் பெயர் ஆண்.



(குறிப்பு: கம்பனின் காதல் கவிதைகள் குறித்து எழுதப்பட்டிருக்கிற “நறுமணத் துயரே! நறுமணத் துயரே!” நூலிலிருந்து இரண்டு அத்தியாயங்கள் இவை. பாடல் அருகே கொடுக்கப்பட்டிருக்கிற பாடல் எண்கள் ‘கோவை கம்பன் அறநிலை’ பதிப்பின் படியானவை. நூலை ‘விஷ்ணுபுரம் பதிப்பகம்’ வெளியிடவுள்ளது.)

             நன்றி; உயிர்மை- அக்- 2025



Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நக...

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் ...