செருப்புக்கடைக்கு செருப்புக்கடை என்றே பெயர் சூட்டியுள்ளான் ஒருவன் உனக்கு அம்மை அப்பன் யாருமில்லையா? பெண்டு பிள்ளை சேர்க்கவில்லையா? காதலி... பழைய காதலி... பால்ய சகி ... ஒரு நினைவும் இல்லையோ உனக்கு? அபிமான நடிகன் அபிமான நடிகை இப்படி அபிமானம் ஏதுமில்லையோ? உன் தலைக்கு மேல் வானமில்லையா? பூவோ, புழுவோ இல்லையோ உன் நிலத்தில்? கொள்கை? கோட்பாடு ? தெய்வம் என்று ஒன்று கூட இல்லையா உனக்கு? செருப்புக்கடைக்கு செருப்புக்கடை போதும் என்று முடிந்தது பெருஞ் சலிப்போ? அன்றி தெள்ளிய ஞானம் தானோ? சலிப்பும், ஞானமும் அவ்வளவுக்கும் அருகருகோ! |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments