அதிகபட்ச அவமானத்தில்,. நிராசையின் நிமிஷங்களில், ஒரு மனம் தேடக்கூடியதெல்லாம் குறைந்தபட்ச ஆறுதலைத்தான். ஆனால் ஆறுதல் சொல்லும் அக்கறையினூடாக உண்மை நிலையை உணர்த்தும் நேர்மையும் இருந்துவிட்டால் அதைவிடவும் ஆதரவான நம்பகமான தோழமை வேறேது? "ராஜகிரீடம் உன் சிரசில் பொருந்தாததற்கு யார் என்ன செய்ய முடியும் நண்பா? இந்த வாயிற்காப்போன் உடையில் நீ எவ்வளவு மிடுக்கு தெரியுமா?" என்றெழுதும் இசையின் கவிதைகளில் ஒலிக்கிறது நேர்மையான, நம்பகமான குரல். இசையின் மூன்றாவது கவிதைத் தொகுப்பின் தலைப்பு "சிவாஜி கணேசனின் முத்தங்கள்". முத்தக்காட்சிகளிலும் சிவாஜியாகவே இருக்கும் சிவாஜி, முத்தத்துக்கான மறைப்புக் காட்சிக்குப் பின்னர் உதடு துடைக்கும் போதுகூட சிவாஜியாகத்தான் இருக்கிறார். ஆனால் மூன்று தொகுதிகளிலும் இசை இசையாகவே இருப்பதில் நாம் மகிழ்ச்சியும் ஆறுதலும் கொள்ள முடிகிறது. விட்டுவிட முடியாதவற்றை விட முயல்வதும் விட்டு விட்டவற்றை திரும்பத் தருவிக்க முயல்வதும் ஒன்றுக்கொன்று சளைக்காத அபத்தங்கள். அத்தகைய அபத்தங்களின் ஆக்கிரமிப்பல்லவா வாழ்க்கை!! "ஒரு பறவையை வழியனுப்புதல்"என்ற கவிதையில் இதைக்குறி...