நன்றி : அந்திமழை –செப்டம்பர்- 2013 எழுதுவதற்கு என்று என்றென்றைக்குமான அடிப்படைக் காரணம் ஒன்றுண்டு . அது ஒருவனுக்கு இந்த உலகத்திற்கு சொல்ல ஒரு சேதி இருக்கிறது என்பது தான் . ஒரு சாமானியனுக்கு எந்த சேதியும் இல்லையா என்றால் , அவனுக்கும் சொல்ல ஒன்று உண்டு தான் ஆனால் அவனுக்கு சொல்லியே தீரவேண்டிய நெருக்கடியோ , பதைபதைப்போ இல்லை . நீட்டிப்படுத்தால் தூக்கம் வந்து விடுகிறது என்றால் எழுதுவதற்கு ஒரு அவசியமும் கிடையாது . மாறாக படுக்கையில் நாலாய் எட்டாய் சுருண்டு வளையும் பாம்பு எழுதியே தீரவேண்டி இருக்கிறது . எது ஒருவனை படுத்தி எடுக்கிறது என்பது ஆளுக்கு தக்க மாறுபடும் அது ஒன்றாகவே இருக்க ஒரு கட்டாயமும் இல்லை . லா . ச . ரா , தன்னை ஒரு செளந்தர்ய உபாசகன் என்கிறார் . இளவேனிலோ , “ சகோதரிகளே , உங்கள் ஸ்நான அறையை நன்றாகத் தாளிட்டுக் கொள்ளுங்கள் ...