லைட்டாப் பொறாமைப்படும் கலைஞன் தினசரிக்கூலிகள், பால்காரர்கள், பெட்டிக்கடைக்காரர்கள் என்று சாமானியர்கள் துவங்கிக் குறுமுதலாளிகள், பெருமுதலாளிகள், மருத்துவர்கள், மென்பொறியாளர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் வரை அனைவரின் வாயிலும் வடிவேலுவின் வசனங்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன. இது மட்டுமல்லாது தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் பலரும் வடிவேலுவின் வசனங்களைத் துணைக்கழைத்து எழுதியிருக்கின்றனர். தமிழ் இனத்தை மாளாத குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டு எரிபுகுந்த முத்துக்குமாரின் கடிதத்திலும் “இது வரைக்கும் யாரும் என்னத் தொட்டதில்ல” என்கிற வடிவேலுவின் வசனம் உண்டு. இலக்கியவாதிகளுக்குத் தனிக்கொம்புண்டு என்றும் அவர்கள் தேவதூதர்கள் என்றும் நம்பிக்கொண்டிருந்த காலத்தில் வடிவேலுவின் வசனத்தை எடுத்தாண்டிருந்த ஒரு இலக்கியவாதிக்குக் காட்டமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறேன். தங்களின் அமரத்துவம் வாய்ந்த எழுத்தில் ஒரு கோமாளி நகைச்சுவை நடிகனுக்கெல்லாம் இடம் அளிக்கலாமா என்பதுதான் அந்தக் கடிதத்தின் சாரம். ஆனால் அக்கடிதம் அத்தருணத்தில் எனக்கும் முளைத்திருந்த ஒரு குட்...