மனைவியுடன் சண்டையிட்டுவிட்டு நாகர்கோவில் பாசஞ்சரின் கடைசி பெட்டியில் தொற்றி ஏறினேன். பேண்ட் ஜிப் திறந்திருப்பது வெகுநேரம் கழித்து தான் கவனத்திற்கு வந்தது. இந்த ரயிலின் “தடதட” எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனெனில், அமைதியான இடங்களில் என் மனதின் “ தளபுள “ வெளியே கேட்டு விடுகிறது. ஸ்டேஷன் வந்ததும் இறங்கி ப்ளாட்பாரத்தில் போடப்பட்டிருந்த மொசைக்கல்லில் அமர்ந்தேன். கருணை போல அது குளிர்ந்திருந்தது. சட்டென என் சிதோஷ்ண நிலை மாறிவிட்டது. இறைவனின் கருணை இல்லாதவர்களால் மொசைக்கல்லின் கருணையை அவ்வளவு எளிதாக நிராகரித்து விட முடியாது. அப்படியே அதில் சுருண்டு படுத்தேன் தலைமாட்டில் அரசமரம் விட்டுவிட்டு கூவிக்கொண்டிருந்தது. செல்ஃபோனை தேடிஎடுத்து அலுவலகத்திற்கு விடுப்பு சொன்னேன்.