நாஞ்சில் நாடனின் “பாடுக பாட்டே” சமீபகாலமாக என்னிடம் கொஞ்சம் நாஞ்சில் நாடன் வாசம் அடிப்பதாகச் சொன்னார் ஒரு நண்பர். இருவருக்கும் பொதுவான பழந்தமிழ் இலக்கிய ஈடுபாட்டைக் கருதி அவர் இப்படிச் சொல்லியிருக்கக் கூடும். இதில் நாஞ்சிலுடையதைப் புலமை என்றும், என்னுடையதை ஆர்வம் என்றும் வரையறுக்கலாம். சமீபத்தில் வெளியான என் கட்டுரைத்தொகுப்பின் தலைப்பு “தேனொடு மீன்”. இது கம்பனின் வரி. முதல் கட்டுரைத் தொகுப்பின் தலைப்பு “அதனினும் இனிது அறிவினர் சேர்தல்” ஒளவை அருளியது. என் புத்தகங்களின் பெரும்பான்மையான தலைப்புகள் ஏதோ ஒரு பழந்தமிழ்ப் பாடலிலிருந்து பெறப்பட்டிருப்பது இப்போது நினைவிற்கு வருகிறது. 2008 ல் வெளியான “உறுமீன்களற்ற நதி” என் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. அப்போது நான் பழந்தமிழ் இலக்கியங்களையோ, நாஞ்சில் நாடனையோ அதிகம் வாசித்திருக்கவில்லை. ஆனால் அந்தத் தலைப்பும் ஒளவையின் ஒரு பிரபலமான பாடலிருந்தே பிறந்துள்ளது. ஆகவே இதை ஒரு “பிறவிக்குறைபாடு” என்றும் கொள்ளலாம். இந்தநூலின் தலைப்பு “அகவன் மகளே! அகவன் மகளே!” என்று துவங்கும் ஒரு குறுந்தொகைப் பாடலிலிருந்து தோன்றியுள்ளது. “பாடுக பாட்டே” எனில் சிறப்பித்துப்...