அன்புள்ள இசைக்கு என் பெயர் சக்திவேல். முன்பு உங்களுடைய வாழ்க்கைக்கு வெளியே பேசுதல் கவிதை தொகுப்பை வாசித்து கடிதம் எழுதியிருக்கிறேன். ஜெயமோகனின் வாசகர் என அறிமுகப்படுத்தி கொண்டேன் - கடிதத்தில் தான். சென்ற டிசம்பரில் நடந்த விஷ்ணுபுரம் விழாவில் உங்களை பார்க்க முடிந்தது. சனிக்கிழமை நண்பகல் நேர இடைவெளி பொழுதில் ஆங்கில பதிப்பு முகவர் கனிஷ்கா குப்தா அவர்களிடம் எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன், அஜிதன், விஷால் ராஜா என அரங்கின் நடுவில் வட்டமாக அமர்ந்து உரையாடி கொண்டிருந்தார்கள். நான் சக்கர நாற்காலியில் வந்து சேர்ந்து கொண்டேன். நீங்கள் எனக்கு எதிர்புறமாக இரண்டு நண்பர்களுக்கு பின்னால் அமர்ந்திருந்தீர்கள். எனக்கு உங்களுடைய வாசகன் என்று அறிமுகப்படுத்தி கொள்ள ஆவலாய் இருந்தது. ஆனால் அந்நேரம் பார்த்து உங்கள் கவிதைகளோ, அவை பற்றிய எண்ணங்களோ எதுவுமே மனதில் இல்லை. இதற்காக உங்கள் கவிதைகளை படிக்காதவன் என முடிவு செய்யாதீர்கள். உங்கள் கவிதைகள் கொடுத்த உணர்ச்சிகரத்தை மட்டுமே அப்போது என்னிடம் தெளிவாக இருந்தது. அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. எனவே தயங்கி தயங்கி விட்டுவிட்டேன். அண்மையில் ஜெ தளத்தில...