Skip to main content

Posts

Showing posts from April, 2025

கம்பனின் " ஐயோ"

அ ழகை வியந்து வியந்து வியந்து வியந்து   வியந்து தீராத தருணத்தில்  "ஐயோ...!  " என்று அலறி வைத்தான் கம்பன். தொடக் கூடாத சொல்லை தொட்டு வைத்தான் பாவி. அச்சொல் ஒரு சாபமென விழுந்தது கவிக்குலத்தின் மீது. இன்று வரை அது வியந்து வியந்து வியந்து வியந்து போகிறது... போகிறது... "ஐயோ" வென்று போகிறது

இரண்டு குள்ளங்கள்

  கு ள்ளமாக இருப்பதால் திருமணம் ஆகாத குள்ளமாக இருப்பதால் தற்கொலைக்கு முயன்ற குள்ளமாக இருப்பதால் குழந்தையாகவே காட்சி தருகிற துப்புரப் பணியாளர் ஒருத்தி தேநீர் இடைவேளையின் போது அசந்தர்பமாக  என் அறைக்குள் நுழைந்து விட்டாள் விடாப்பிடியாக பிடித்து அவளை எதிரே அமர வைத்தேன். என் குள்ளத்திலிருந்து கொஞ்சம் நேநீரை எடுத்து அவள் குள்ளத்துள் ஊற்றினேன் தேநீரில் வாய்வைத்து தேநீரை விட  இனிய ஒன்றை அருந்திக் கொண்டிருக்கின்றன இரண்டு குள்ளங்கள் வெறும் தேநீர்க்கே  நிரம்ப முடிந்த  இரண்டு குள்ளங்கள்

தீக்குள் வைத்த விரல்கள்

“வி லை மதிப்பற்றது” என்கிற குறிப்போடு போட்டோவில்  ஒரு பொருளை அனுப்பிருந்தாய் அதனோடே சேர்ந்து வந்து விட்டது உன் சுண்டு விரல் பிறகு அது  ஒரு சின்ன விலைக்குள் அடங்கிவிட்டது “ஆகச் சிறந்த கவிதை”  என்று  ஒன்றை அது போன்றே அனுப்பி வைத்தாய் இன்னும்  நான் அதை வாசிக்கவில்லை. மகத்தான ஒன்று மகத்தான இன்னொன்றை குறிப்பிட்டுக் காட்டுவதில்  என்னவோ  சிக்கல் இருக்குதடி? சில விரல்கள் நிலவைச் சுட்ட  உகந்தவையல்ல பிறகு மொத்த நிலவும் காணாமல் போய்விடுகிறது.

முதன்முதலில்

    உ னக்கு முன்பும் இந்த உலகில் எனக்கு ஓராயிரங்கள் மறுக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் பார், முதன் முறை இப்போதுதான் ஒன்று மறுக்கப்படும் முகத்துடன் உன் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்.

பிறப்பதற்கு முன்

  ப ள்ளி முடித்து கல்லூரிக்குள் நுழையும் ஒரு குழந்தை  தொங்கிய முகத்துடன்  சொன்னாள்.. "மனசு சரியில்ல சார்..' தெய்வமே... அவள் இன்னும் பிறக்கக்  கூட இல்லையே அதற்குள் அவளுக்கு ஒரு மனம் பிறந்து அதற்குள் அது சரியில்லாமலும் ஆகிவிட்டதா?

டாஸ்மாக்கில் இரு மச்சிகள்

  "இ ந்தா மச்சி..."  சின்ன சில்வர் தட்டை நீட்டினான். இன்றுதான் பிறந்து இன்றே  மச்சிகளாகிவிட்ட   யாரோ இருவர் ஒரு மிளகாய் பஜ்ஜியை இரண்டாகப் பகிர்ந்து கொள்கிற காட்சி... ஆஹா...! இப்படித்தான் வையகம் இப்படித்தான் தழைக்க வேண்டும்