உறுமீன்களற்ற நதியிலும் வாடி நிற்காத கவிதைகள் அகம் புறம் இந்த இரண்டுக்கு நடுவே இன்று பெர்லின் சுவர் எதுவும் கிடையாது. ஒரு மெல்லிய சவ்வுதான் இருக்கிறது. அதனூடாக சவ்வூடு பரவலைப் போல் புறமானது அகத்துக்குள் என்றோ ஊடுருவி விட்டது. இதை நன்றாக உணர்ந்து புரிந்து கொண்டவர்கள். அல்லது தன்னையறியாமலேயே உள்வாங்கிக் கொண்டவர்கள்தான் இன்று நல்ல கவிஞர்களாக அறியப்படுகிறார்கள். முதல் இரு உலகப் போர் நிகழ்வுக்ளை ஒட்டி கவிதை பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி வந்தது நாம் அறிந்ததே. இன்று உலகமயமாக்கல் எனும் அரூப ஆயுதத்தை கைக்கொண்டு, வளந்த நாடுகள் ஒரு மாய யுத்தத்தை வளரும் மற்றும் மூன்றாம் உலக நாடுகள் மீது நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில் அவதிக்குள்ளாகியிருக்கும் வெகு மக்கள் திரளுள் ஒருவராகவே கவிஞனும் வாழ நேர்கிறது. அத்தகு கையறு நிலையில் சக மக்கள் புலம்பிக் கொண்டிருக்க, வித்தை தெரிந்த கவிஞன் அப்புலம்பலை பகடியாக்கி கவிதை செய்கிறான். ஆனாலும் கூரான கத்திக்கு முன் நிற்க நீ ஒன்றும் சேகுவாரா அல்ல என்று சக படைப்பாளிகளை எச்சரிக்க கூடிய அளவிற்கு கவிஞன் இச்சமூகத்துள் தன்னிலை குறித்த சுயபிரக்ஞையுடன்தான் இருக்கிறான். மேலும் தன் ...