Sunday, August 23, 2009

நூல் விமர்சனம்: நக்கீரன்


உறுமீன்களற்ற நதியிலும் வாடி நிற்காத கவிதைகள்

அகம் புறம் இந்த இரண்டுக்கு நடுவே இன்று பெர்லின் சுவர் எதுவும் கிடையாது. ஒரு மெல்லிய சவ்வுதான் இருக்கிறது. அதனூடாக சவ்வூடு பரவலைப் போல் புறமானது அகத்துக்குள் என்றோ ஊடுருவி விட்டது. இதை நன்றாக உணர்ந்து புரிந்து கொண்டவர்கள். அல்லது தன்னையறியாமலேயே உள்வாங்கிக் கொண்டவர்கள்தான் இன்று நல்ல கவிஞர்களாக அறியப்படுகிறார்கள். முதல் இரு உலகப் போர் நிகழ்வுக்ளை ஒட்டி கவிதை பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி வந்தது நாம் அறிந்ததே. இன்று உலகமயமாக்கல் எனும் அரூப ஆயுதத்தை கைக்கொண்டு, வளந்த நாடுகள் ஒரு மாய யுத்தத்தை வளரும் மற்றும் மூன்றாம் உலக நாடுகள் மீது நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில் அவதிக்குள்ளாகியிருக்கும் வெகு மக்கள் திரளுள் ஒருவராகவே கவிஞனும் வாழ நேர்கிறது. அத்தகு கையறு நிலையில் சக மக்கள் புலம்பிக் கொண்டிருக்க, வித்தை தெரிந்த கவிஞன் அப்புலம்பலை பகடியாக்கி கவிதை செய்கிறான். ஆனாலும் கூரான கத்திக்கு முன் நிற்க நீ ஒன்றும் சேகுவாரா அல்ல என்று சக படைப்பாளிகளை எச்சரிக்க கூடிய அளவிற்கு கவிஞன் இச்சமூகத்துள் தன்னிலை குறித்த சுயபிரக்ஞையுடன்தான் இருக்கிறான். மேலும் தன் இருப்பு குறித்த தெளிவும் அவனுக்கு இருக்கிறது. அதனாலேயே கூத்துமன்றத்தில் அரசனாக வாழ்ந்து பகலில் கடன்காரனுக்கு பயந்தொளியும் ஒரு வேடத்திற்கு தன்னைத் தானே சிபாரிசு செய்து கொள்கிறார் கவிஞர்.

இன்று தமிழில் அங்கத சுவை கொண்ட கவிதைகள் குறைவு. அங்கதம் என்றதும் நமக்கு ஞானகூத்தன் ஞாபகம்தான் வரும். ஆனால் அவருடையது சார்புநிலை அங்கதம் என்பது நாமறிந்ததே. இவ்வகையில் இசையின் கவிதைகள் எந்த சார்புநிலையுமற்று தனித்து நிற்கிறது என்பதற்கு ஓர் உதாரணம்தான் “கீரீடங்களை மட்டும் தாங்கும் தலைக்காரன்” . அத்தலைக்காரனின் இடத்தில் எவ்வித இயக்கம் சார்ந்த நபரையும் குறிக்காது அதிகாரத்தை கைக்கொண்டிருக்கும் எந்த தலையையும் சுலபமாக பொருத்திப்பார்க்க முடியும்.

வாழ்வில் அபத்தங்களை எதிர்கொள்வதில் ஆணும் பெண்ணும் தத்தம் வழிகளில் வேறுபடுகின்றனர். ஆணானவன் அதனோடு முரண்பட்டு எதிர்த்து நிற்கையில், பெண்னானவள் அதற்கு உடன்பட்டு அதனுள் ஐக்கியமாகி விடுகிறாள். இந்த பொருத்தப்பாட்டிற்காகவே ஆண்மைய சமூகம் அவளை வெகுகாலமாக பக்குவத்துடன் தயாரித்து வந்திருக்கிறது. “என் காதற் கிழத்திக்கு இதுதான் நிகழ்ந்தது” கவிதையில் வரும் பெண்ணே இதற்கு உதாரணம். மணமாகும் வரை தன்னோடு பழகிவந்த கபிலரை, அதற்குப்பின் அவரை தானாகவே வெளியேற செய்துவிட்டு எவ்வித சலனமின்றி தன் குழந்தைகளுக்கு “ஜானி..ஜானி..யெஸ் பாப்பா..” கற்றுக்கொள்ள அதனால்தான் அவளால் முடிகிறது. அதே சமயம் ஆண் என்னவாகிறான் என்பதை குணா குறித்த இரு கவிதைகளும் காட்டுகின்றன. ஒரு குணா மனநிலை பிசகியவனாக முடிவு செய்யப்பட்டு, காணவில்லை என்று அறிவிக்கப்படுகிறான். மற்றொருவனின் முடிவோ மனதை அதிர வைக்கிறது.

பல்லாண்டு கழித்து கடவுளுக்கு
காட்சியளிப்பது குறித்து
அவன் யோசித்தான்
வழியில் ஆளில்லா லெவல் கிராசிங்
ஒன்று குறுக்கிட்டது
ரயில் கடக்கட்டும் என்று
காத்திருந்தவன்
கடைசிப் பெட்டிக்கும்
முந்தைய பெட்டிக்குமிடையே
ரயிலைக் கடந்தான்

நிகழ்கால வாழ்வியல் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் ஆடியாக இம்மூன்று கவிதைகளும் விளங்குகின்றன.

கவிஞன் என்றாலே அவன் மதுவைக் குறித்து நான்கு கவிதையாவது எழுதி விட வேண்டும் என்கிற விதிக்கப்படாத சாபம் இக்கவிஞரையும் பீடித்துள்ளது. இம்மாதிரி கவிதைகள் படித்து படித்து சலித்து விட்டது. அதே சமயம் காதலும் காமமும் எத்தனை முறை எழுதப்பட்டாலும் எழுதுபவன் கையில் அது தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறது என்பதற்கு உதாரணம் “பிச்சாந்தேகி” கவிதை.

பணிமணையில், தயங்கித் தயங்கி நகரும் பேருந்தில் நனவுக்கும் கனவுக்கும் இடையே அல்லாடி வாழ்வைக் கடக்கும் அதே கவிஞன்தான் தன் கவித்துவ கணத்தில் குற்றவுணர்வில் ‘பிதாவே தயவு பண்ணி எம்மைக் கைவிடும்’ என இறைஞ்சுகிறான். ஒரு படைப்பாளி மற்றவர்களிடமிருந்து வேறுபடும் மையப்புள்ளி இதுதான்.

இத்தொகுப்பில் ”செளமிக்குட்டி செளமியா ஆனது எப்போது”, ”தோழமை” போன்ற குழந்தைகள் குறித்த கவிதைகள் குறிப்பிடத்தக்கது. ஒரு தொகுப்பில் நல்ல கவிதைகள் எது அவ்வாறு இல்லாத கவிதைகள் எது என்பது மற்றவர்களைக் காட்டிலும் அக்கவிஞனுக்கே நன்றாக தெரியும். இத்தொகுப்பில் “தமிழின் மிக முக்கிய இளங்கவி” எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் கவிஞர்தான்.

முதலில் வண்ணத்துப்பூச்சிகள்
தங்களை தைரியமாக
வண்ணத்துப்பூச்சிகள் என்று
சொல்லிக்கொள்கின்றன
அந்த இடத்தில்
கொஞ்சம் திக்குகிறது என் கவிதைக்கு

எனத் தயக்கம் காட்டுகிறார். ஒரு வேளை தன்னோடு காலமும் சேர்ந்து அதை தீர்மானிக்கட்டும் என அவர் நினைத்திருக்கலாம். ஆனால் அடுத்த தலைமுறைக் கவிஞர்களின் பெயர்பட்டியலிலிருந்து இசையின் பெயரை எந்த அழிப்பானும் நீக்கி விட முடியாது என்பதற்கு இத்தொகுப்பு என்றும் சாட்சியமாக நிற்கும்.

நன்றி: மணல் வீடு இதழ் 8 & 9

5 comments:

தமிழ்நதி said...

இசையின் கவிதைகள் மிகுந்த கவனம் பெறும் என்ற என் கணிப்பு தவறாதிருப்பதில் மகிழ்ந்தேன்.

டங்கு டிங்கு டு said...

nantri tamil.sinkara chennaiku eappothu varavathaka uthesam?

ஸ்ரீ said...

வாழ்த்துகள் இசை, உயிர்மையிலும் இந்தத் தொகுப்பினைப் பற்றிய விமர்சனத்தைப் படித்தேன். ஈரோடு புத்தகச் சந்தையில் உங்கள் புத்தகத்தை நானும் ,கார்த்திகைப் பாண்டியனும் வாங்கியுள்ளோம்.நன்றி.

டங்கு டிங்கு டு said...

nantri sri.unkal idai vidatha anbu iyakkathukkana urchakathai alikirathu.

செல்வராஜ் ஜெகதீசன் said...

Recently i read this collection.

Really good.

Keep going please.