சிக்கலான அல்ஜீப்ரா கணக்குகளுக்கு திணறும் எளிய மூளை ‘காயசண்டிகை’ கவிதை நூலை முன் வைத்து.. நவீன கவிதைகளில் படிந்திருக்கும் துயரத்திற்கு உலகப் போருக்குப் பிறகான மனித மனங்களில் படர்ந்த இருள் ஒரு காரணமாக சொல்லப்படுவதுண்டு. துயரம் மனிதனோடு சேர்ந்தே பிறக்கிறது. ஆனால் உலகப் போரின் பேரிழப்புகளின் போதே அது பெரிதாக, ஒட்டு மொத்தமாக உணரப்பட்டது என்று இதை நாம் புரிந்து கொள்ளலாம். இப்படி துயரக் கறை கொண்ட கவிதைகளின் மேல் தற்போது வைக்கப்படும் ஒரு விமர்சனம் “ஒப்பாரி வைப்பது போல் இருக்கிறது” என்பது. ஒப்பாரிப் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் ஏற்கனவே ஒரு கலைப்படைப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிற நிலையில், இவ்விமர்சனத்தை நிர்தாட்சண்யமாக ஒதுக்கி விடலாம். ஒரே ஒரு நிபந்தனை, அப்பாடல்கள் கலையின் அழகியலோடு வெளிப்படவேண்டும் அவ்வளவே. நவீன கவிதையின் குறிப்பிடத்தக்க ஆளுமைகள் பலரிடமும் ஒரு ஓயாத துயரத்தைக் காணமுடிகிறது. துயரக் கறைக் கொண்ட இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் அடங்கிய இவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘காயசண்டிகை’ 2007ல் வெளிவந்து தற்போது பரவலாக கவனம் பெறத் துவங்கியிருக்கிறது. வாழ்வு தரும் நெருக்கடிகள் வழங்கியவை இக்கவித...