Skip to main content

‘காயசண்டிகை’ நூல் விமர்சனம்


சிக்கலான அல்ஜீப்ரா கணக்குகளுக்கு திணறும் எளிய மூளை
‘காயசண்டிகை’ கவிதை நூலை முன் வைத்து..

நவீன கவிதைகளில் படிந்திருக்கும் துயரத்திற்கு உலகப் போருக்குப் பிறகான மனித மனங்களில் படர்ந்த இருள் ஒரு காரணமாக சொல்லப்படுவதுண்டு. துயரம் மனிதனோடு சேர்ந்தே பிறக்கிறது. ஆனால் உலகப் போரின் பேரிழப்புகளின் போதே அது பெரிதாக, ஒட்டு மொத்தமாக உணரப்பட்டது என்று இதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இப்படி துயரக் கறை கொண்ட கவிதைகளின் மேல் தற்போது வைக்கப்படும் ஒரு விமர்சனம் “ஒப்பாரி வைப்பது போல் இருக்கிறது” என்பது. ஒப்பாரிப் பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் ஏற்கனவே ஒரு கலைப்படைப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிற நிலையில், இவ்விமர்சனத்தை நிர்தாட்சண்யமாக ஒதுக்கி விடலாம். ஒரே ஒரு நிபந்தனை, அப்பாடல்கள் கலையின் அழகியலோடு வெளிப்படவேண்டும் அவ்வளவே. நவீன கவிதையின் குறிப்பிடத்தக்க ஆளுமைகள் பலரிடமும் ஒரு ஓயாத துயரத்தைக் காணமுடிகிறது.

துயரக் கறைக் கொண்ட இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் அடங்கிய இவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘காயசண்டிகை’ 2007ல் வெளிவந்து தற்போது பரவலாக கவனம் பெறத் துவங்கியிருக்கிறது.

வாழ்வு தரும் நெருக்கடிகள் வழங்கியவை இக்கவிதைகள். இக்கவிதைகளின் மூலம் அந்நெருக்கடிகளின் அழுத்தத்திலிருந்து கவிஞர் வெளியேற முயற்சித்திருக்கிறார். வாழ்வு அடிக்கடி தன் நாசரூபம் காட்டுவதும், கவிஞர் ஒரு கவிதையின் மூலம் அதைக் கடக்க முயற்சிப்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. அடிக்கும் போது அழுவது ஒருவித எதிர்வினைதான் என்று கொள்வோமெனில், வஞ்சமும் கசப்பும் கொண்ட இவ்வாழ்வுக்கெதிராக இக்கவிதைகள் தொடர்ந்து எதிர்வினையாற்றுகின்றன என்று சொல்லலாம். ‘போதும்...என்னை விட்டு விடு’ என்று மண்டியிட்டுக் கெஞ்சுகின்றன. யார் செவிமடுப்பதெனத் தெரியவில்லை; தொடர்ந்து புகார் கூறுகின்றன. படிக்கும் போது செவி மடுக்கும் நாம் அதனோடு சேர்ந்து சொல்கிறோம் “ஆம்..இவ்வாழ்வு மோசமானதுதான்” .

ஏன் இப்படி இளங்கோ துயரத்தை மட்டுமே பாடுகிறார் என்ற கேள்வியை எழுப்பி பார்க்கலாம். நமக்கு ஒரு வாழ்கை வழங்கப்பட்டிருக்கிறது. அதை நாம் வாழ்ந்தாக வேண்டும். அதை நம்மால் மாற்ற முடிவதில்லை. நமது நாட்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே கழிகின்றன. (ஒன்று போலவே தோன்றும் அறைகள் கொண்ட இப்பெரும் மாளிகையில் இன்னும் எத்தனை அறைகள் உள்ளன: பக்கம் 35) ஊர், வீடு, நண்பர்கள், அலுவலகம், வழித்தடம் என எதுவும் மாறுவதில்லை எனவே கவிதையும் மாறுவதில்லை என்று சொல்லலாமா? (நமது வாழ்வனுபவமாக இல்லாமல் புத்தகங்கள் மூலமாக நாம் பெறுகிற அறிவு வெவ்வேறு விஷயங்களை கவிதைக்குள் கொண்டு வந்து சேர்க்குமா என்பதில் எனக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகமிருக்கிறது) இது கொஞ்சம் சோர்வைத் தரவே செய்கிறது. ஆனால் இன்று வெளியிடப்படுகின்ற மூத்த கவிஞர்களின் முழுக் கவிதைத்திரட்டுகளை படிக்கும் போதும் நாம் கொஞ்சம் சோர்வடையவே செய்கிறோம். ‘ஒருவித’ கூறியது கூறல் எல்லாக் கவிஞர்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது. இத்தனை சமாதானங்களுக்குப் பிறகும் இன்னொரு கேள்வி எழுகிறது இளங்கோவின் வாழ்வில் கொண்டாட்டமே இல்லையா என்பது அது. இருந்திருக்கும் ஆனால் எல்லாக் கவிஞர்களுக்கும் தன் படைப்பில் எதைச் சொல்வது என்பதில் அவன் அறிந்தோ அறியாமலோ ஒரு தேர்வு இருக்கிறது என்றே கருத வேண்டியிருக்கிறது.

நமது மரபுக் கவிதைகளில் இசை வெள்ளம் பெருகி, அது கவிதையையே அடித்துக் கொண்டு போனதால் நாம் நவீன கவிதைகளில் இசைத் தன்மை என்பதை வெறுத்து ஒதுக்கினோம். இருந்தும் இசையின் அழகியலை, கவிதைக்கு ஊறு நேரா வண்ணம் கைக்கொண்ட கவிஞர்கள் சிலர் இருக்கிறார்கள். பிரமிள், ராஜ சுந்தரராஜன், ஞானக்கூத்தன், தேவதேவன் போன்ற சிலரை இவ்வகையில் சேர்க்கலாம். இத்தொகுப்பிலும் இசையின் அழகியலோடு வெளிப்பட்டிருக்கிற கவிதைகள் சிலவற்றை காணமுடிகிறது. இவ்விஷேச அழகியலால் பிற கவிதைகளிலிருந்து தனித்து தெரிந்து கவனம் பெறுகின்றன இவை.

உன்மத்தம் முற்றிய பிச்சைக்காரியின் கையில் உருவெடுக்கும் அட்சய பாத்திரம், அறம் பிழைத்தோர்க்கு கூற்றாகும் மஞ்சள் நிற முகமூடியிலிருந்து வெடித்தெழும் சிரிப்பொலி என தொன்மங்களில் இருந்து உருவாக்கியிருக்கிற பிரதிகள் அலாதியான வாசிப்பனுவம் தருபவை.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொன்று இக்கவிதைகளின் எளிமை. இவை பயமூட்டலை இலக்காக கொள்ளாமல், வாசித்தலை இலக்காக கொண்டவை. ஆனால் வாசிக்கப்படவேண்டும் என்பதற்காக நீர்த்த, மொன்னைத் தனமான வெளிப்பாடுகள் எதையும் இவை கொண்டிருக்கவில்லை. மாறாக விரிவும் ஆழமுமான பயணங்களுக்கு நம்மைக் கூட்டிச் செல்லவே செய்கின்றன. ஆனால் இக்கவிதைகளோடு இவை உருவான காலந்தொட்டு வாழ்ந்து வருபவன் என்கிற அடிப்படையில் எனக்கு நேர்கிற ஒரு வருத்தம் ‘கவிதையின் ஆயுள்’ என்பது. திருகலான மொழியும் அதி நுட்பமும் கொண்டெழுதும் கவிஞர்களே இது குறித்து அதிகம் அக்கறை கொள்ளும் இச்சூழலில், ஒரு எளிய கவிதை சொல்லி இது குறித்து இன்னும் அதிக அக்கறை காட்ட வேண்டியவனாக இருக்கிறான். கவிதையின் ஆயுளை நிர்ணயிக்கும் பல்வேறு விஷயங்களில் புதுமையும் அழகியலும் பிரதான இடம் வகிக்கின்றன. இளங்கோ அசட்டையின்றி உச்சபட்ச புதுமையின் அழகியலை சமைப்பதன் மூலம் அவர்தன் கவிதையின் ஆயுளை இன்னும் கூட்டிக் கொள்ளலாம்.

நன்றி: தேவமகள் இலக்கிய விருதுகள் விழா மலர் மார்ச்' 2008
தொகுப்பிலிருந்து....கையறு நிலை

கள்ளின் சுவை மூளையைக் கிள்ள
சொல்லின் போதை இருதயம் நுரைக்க
யாழினை மீட்டிப் பாணன் பாடுகிறான்

பெளர்ணமி நிலவே பெளர்ணமி நிலவே
பைரவி நெற்றியின் களிர்பல் பொட்டே
முன்னொரு காலம் பூமி பிளந்ததில்
பன்னியின் கறியும் பனைமரக்காடும்
ஐவகை நிலமும் அறுசிறு பொழுதும்
முக்குறு முடியும் மக்களின் குணமும்
பூமியின் வயிற்றில் போனதம்மே

நீல்வான் நிலவே நீல்வான் நிலவே
நீலியின் முலைபோல் சுரந்திடும் அமுதே
பின்னொரு காலம் மூழ்கிய நீரில்
முத்தின் நகரும் மரணத்தின் நகரும்
நாவாய்க் கூட்டமும் நெய்தல் தோட்டமும்
நீரில் உப்பாய் கரைந்ததம்மே

மாணிக்க நிலவே மாணிக்க நிலவே
மாடத்தி முகம் போல் அரும்பிய சுடரே
வேறொரு காலம் காற்று கடுத்ததில்
கடவுளர் முகமும் சமணர் அறமும்
எலுமிச்சை பழிக்கும் புத்தனின் தலையும்
சூறைக்காற்றில் பறந்ததம்மே

பித்தொளி நிலவே பித்தொளி நிலவே
பிடாரி கூந்தலில் சூடிய மலரே
பிறிதொரு காலம் மண்டிய நெருப்பில்
கருவியும் கலையும் பேசிடும் மொழியும்
கோயிலும் மதமும் கூடிடும் இனமும்
அமிழ்தினும் இனிய அருசுவைக் கள்ளும்
செங்கால் தீயில் சேர்ந்ததம்மே

சந்தன நிலவே சந்தன நிலவே
சாமுண்டியவள் உந்திச் சுழியே....


ஹிட்லர்

ஒரு நாள் காலை தன் நிலைகண்ணாடியில்
சாப்ளினின் முகம் தெரிவதைக்கண்டு
அதிர்ச்சியில் உறைந்தான் ஹிட்லர்
விரைத்து நின்றபடி முகமன்கூறும்
அவன் சகாக்கள் யாவரிடமும்
ஒரு ரகசியப் புன்னகையின் கீற்று
நெளிந்து கொண்டிருப்பதாக சந்தேகப்பட்டவன்
அரண்மனையில் இருந்த தன்னுடைய படங்கள்
அனைத்தையும் அகற்றிவிட உத்தரவிட்டான்
அன்று மாலை நடந்த
மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றில்
உணர்வுப்பூர்வமான எழுச்சியுரையாற்றி கொண்டிருக்க
கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுவதை
கவனித்தபோதுதான் உணர்ந்தான்
மெல்லத் தன் குரல்
சாப்ளின் குரல் போல்மாறியிருந்ததை
ஒரு சிறுவன் சாப்ளின் எனக் கத்திய போது
வெடித்து எழுந்தது சிரிப்பலை ஆத்திரம் தாளாது
உக்கிரத்தோடு மேடையில் இருப்பவர்களை பார்த்தான்
அவன் தளபதிகளில் ஒருவனுக்கு
தவறு செய்துவிட்டு விழிக்கும்
சாப்ளினின் அப்பாவி தோற்றம் அந்த முகத்தில் தெரிய
பெருங்குரலெடுத்து சிரித்துவிட்டானவன்
திடீரென...
நான் சாப்ளின் இல்லை ஹிட்லர்... அடால்ப் ஹிட்லர்
எனத் திரும்ப திரும்ப கத்தியவாறு
மேடையைவிட்டு ஒடத்துவங்கினான்
சாப்ளின்...சாப்ளின்... என குழந்தைகள் துரத்த
பெர்லின் நகர வீதிகளில்
பைத்தியம் போல் ஒடிக் கொண்டிருந்தான்
அப்போது அவன் நடையும் ஒட்டமும்
உண்மையாகவே சாப்ளினைப் போல் இருந்தது

Comments

Popular posts from this blog

தெய்வாம்சம்

தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.

  வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிமை. தனிமையிலேயே நம்மை நாம் அதிகம் உணர்கிறோம். படத்தில் வாத்தியக் கலப்பற்று ஒலிக்க வ…

“ என்ன அப்பிடி பாக்காதீங்க சத்யன் ... “

இளங்கோ தான் ஒரு முறை சொன்னான்..
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில  மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “  “சின்ன “ என்பதை அவ்வளவு அழகாக அழுத்திச் சொன்னான். கல்யாண்ஜியை பார்த்துவிட்டு வந்து பிறகு அவனிடன் சொன்னேன். “ நண்பா அந்தாளுகிட்ட கொஞ்சம் ஜாக்கிரையாத்தான் இருக்கனும் போல.. அவர் என்னை சத்யன் ன்னு கூப்டறார்டா.. “ ஏதோ ஒரு மந்திரவாதியைப் பற்றிய கதைகளைப் போல அவரைப் பற்றிப் பேசிக்கொண்டோம். என் அம்மா, அப்பா இருவரைத் தவிர  வேறு யாரும் என்னை சத்யன் என்று  அழைத்ததில்லை. இப்படியாக முதல் சந்திப்பிலேயே அவர் என்னை ’’திட்டமிட்டு உருக்கிவிட்டார்.   என்னை நானே உற்சாகமாக்கிக் கொள்வதற்காக வெளியிட்ட என் முதல் தொகுப்பை யாரும் அதிகமாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. இளங்கோ, சுகுமாரன் இருவர் வீட்டில் மட்டும் அது இன்னமும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு வேளை கல்யாண்ஜி வீட்டிலும் அது இருக்கலாம். அப்போது அவரது நிலா பார்த்தல், வண்ணதாசன் கடிதங்கள் ஆகிய புத்தகங்களால் வசீகரிக்கப்ட்டிருந்தேன். புத்தகத்தோடு ஒரு கடிதமும் எழுதி இருந்தேன். அது அவரது மொழியிலேயே இருக்க வேண்…

ஊடுருவல்

சோமனூர் பஸ்  ஸ்டாண்டில்
கொய்யாப் பழம் விற்கும்
சமூக விரோதியிடம்
கிலோவுக்கு ஒன்று குறைவதாக
சண்டையிட்டுக் கொண்டிருந்தான்
நக்சல்.
தன் உடலெங்கும் அரியவகை மூலிகைகளால் ஆன தைல டப்பாக்களை தொங்க விட்டிருக்கும்
தேசவிரோத  சக்தி
நக்சலின் தோளைத் தொட்டு
வத்திப்பெட்டி கடன் கேட்டான்.
பெட்டி இருந்தது ஆனால் அதில் குச்சி இல்லை.
இருவருமாய்ச் சேர்ந்து
கடப்பாரை, மண் வெட்டி சகிதம்
14 பி க்கு காத்திருக்கும் தீவிரவாதியை அணுகினர்.
அவன் தானும் தீயின்றித்தான் தவிப்பதாகச் சொன்னான்.
 கழிப்பறை வாசலில்  அமர்ந்து கொண்டு
" ஆச்சா... சீக்கிரம் வா..."     "ஆச்சா...சீக்கிரம் வா"  என்று கத்திக் கொண்டிருந்தான்  விஷமி
அவனிடம் ஒரெயொரு குச்சி இருந்தது.
அந்த உரிமையில்
அவன் ஒரு பீடி  ஓசி கேட்டான்.
இப்படியாக
ஒரு நக்சல், ஒரு தேச விரோத சக்தி,  ஒரு தீவிரவாதி, ஒரு விஷமி
ஆகிய நால்வரும்
ஒரேயொரு குச்சியில்
4 பீடிகளைக் கொளுத்திக் கொண்டனர்.
அப்போது
இமயம் முதல் குமரி வரை
எங்கெங்கும் பற்றியெரிந்தது.