Skip to main content

Posts

Showing posts from July, 2009
எழுபது கடல் எழுபது மலை எழுபது கடல் எழுபது மலை தாண்டி எங்கோ இருக்கிறது நான் தழுவ வேண்டிய உடல் கடலெங்கும் சுறாக்கள் அலைகின்றன மலையெங்கும் கொடுங்காவல் நிலவுகிறது முதல் கடலின் பாதியில் நிற்கிறது எரிபொருள் தீர்ந்த படகு நான் ரொம்பவே சோர்ந்துவிட்டேன் தாகமாய் தவிக்கிறது எனக்கு இவ்வளவு பெரிய கடலுக்கு நடுவே எனக்கு ஒருவாய் நீரில்லை இன்னும் 69 1/2 கடல்களும் எழுபது மலைகளும் மீதமிருக்க துளியும் எள்ளலின்றி குரல் தழுதழுக்கச் சொல்கிறேன் “யாம் ஷகிலாவின் பாத கமலங்களை வணங்குகிறோம்” - நன்றி: உயிர் எழுத்து
கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறது கர்த்தர் வருகிறார் அவர் நமக்காய் கொண்டு வரும் புளித்த அப்பங்கள் ரொம்பவே புளித்து விட்டன ஆனால், கர்த்தர் வருகிறார் உங்கள் அன்பில் நண்பர்களுக்கு சலிப்பேறி விடலாம் உங்கள் காதலியை புத்திசாலிகள் களவாடிக் கொள்ளலாம் கர்த்தர் வருகிறார் பாதி வழியில் அவர் வாகனம் பழுதாகி நின்று விட, அவர் நடந்து வருகிறார் ஆனாலும் கர்த்தர் வருகிறார் இன்னுமொரு தேர்தல் முடியட்டும் இன்னொரு மக்களாட்சி மலரட்டும் கர்த்தர் வருகிறார் எப்போதும் மிரட்டிக் கொண்டிருப்போர் இன்னும் கொஞ்சம் மிரட்டட்டும் எப்போதும் இறைஞ்சிக் கொண்டிருப்போர் இன்னும் கொஞ்சம் இறைஞ்சட்டும் இரட்சிப்பின் நாயகர் வருகிறார் கர்த்தர் ஒருவரே அவருக்கு உதவியாளர்கள் யாருமில்லை அவரே எல்லா இடங்களுக்கும் வர வேண்டி இருக்கிறது ஆனாலும் அவர் வருகிறார் நீதியின் மீது பசிதாகமுடையோருக்கு இன்னும் கொஞ்சம் பசிக்கட்டும் வெகு காலம் பற்கடிப்பில் உள்ளோர் இன்னும் கொஞ்சம் கடிக்கட்டும் கர்த்தாதி கர்த்தர் வருகிறார் இன்னும் கொஞ்சம் எரிகணைகள் வீழட்டும் இன்னும் கொஞ்சம் ஓலங்கள் கூடட்டும் கர்த்தர் வருகிறார் பயப்படாதே சிறு மந்தையே! கர்த்தர் on the way.
துயரத்தின் கை மலர் இசை கவிதையைப் பற்றிய எந்தவொரு பேச்சும் முழுமையடையாததே. விடுபடல்களைக் கொண்டதே. கவிதை நம் எல்லாப் பேச்சுகளுக்கும் அப்பால் எங்கோ நிகழ்கிறது. அதனாலேயே நாம் கவிதையைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். ஒரு கணத்தில் கவிதையைப் பற்றி எல்லாம் தெரிந்துவிடுகிறது. இன்னொரு கணத்தில் தெரிந்ததெல்லாம் மறந்து போகிறது. இந்த பேச்சும் முழுமையடையாததே. விடுபடல்களைக் கொண்டதே. இது நிச்சயமற்ற பாதைகளின் வழியே பயணித்து கவிதையை தொட்டுவிட முயல்கிறது. இந்தக் கட்டுரையில் பாதியை நான் மாணவர்களை நோக்கியும் மீதியை எனக்கு நானே என்னை நோக்கியும் எழுதியிருக்கிறேன். ------ ------ ----- நீங்கள் கவலை கொள்ளாதிருங்கள். நாம் எல்லோரும் கவிஞர்களாகவே இருக்கிறோம். கவிதை நம் வாழ்விலிருந்து மெல்ல அசைந்து முகம் காட்டுகிறது. இவ்வாழ்க்கை மனம் கசந்து அழவைக்கிறது, மகிழ்ச்சியில் திளைக்கடிக்கிறது. காரணமில்லாமல் தனிமைக்குள் தள்ளுகிறது. பயமுறுத்துகிறது. உற்சாகமூட்டுகிறது. தாங்க இயலாத அளவிற்கு அன்பையும் சகிக்க இயலாத அளவிற்கு துரோகத்தையும் பரிசளிக்கிறது. கொலை செய்ய ஆத்திரமூட்டுகிறது. தற்கொலைக்குத் தூண்டுகிறது. அவமானப்படுத்துகிறது