ராமகிருஷ்ணன் தான் பிறப்பதற்கு முன்பே அவர் தாயை ஆயிரம் முறைக்கும் அதிகமாக அரசமரத்தை சுற்ற வைத்தார். அம்மன் சன்னிதிகளில் அவள் உருண்டு உருண்டு மண்ணானாள். நாளெல்லாம் விரதமிருந்தாள். இப்படி வாராது வந்த மாணிக்கத்திற்கு பேச்சு வரவில்லை சரியாக. அவள் மீண்டும் அலகு குத்தி காவடி சுமந்து தீக்குண்டம் இறங்கியேற அவர் தன் எட்டாம் வயதில் திருவாய்மலர்ந்தார். அவர் விண்ணப்பித்த எல்லா பணியிடங்களும் அதற்கு முந்தைய நாளில் நிரப்பப்பட்டிருந்தன. "பத்துநாட்களுக்கு முன்னால் சொல்லியிருக்ககூடாதா" என்று அவர் காதலி அழுது வடிந்தாள். அவர் அத்தனை நாளும் அவளைப் பற்றிய ஒரு காவிய முயற்சியில் மூழ்கியிருந்தார். 33 மூன்றாம் வயதில் திருமணம் முடிந்த அவருக்கு 5 வருடங்கள் கழித்து அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இப்போது நரை முற்றி உடல் உளுத்து துள்ளிதுள்ளி இருமும் அவருக்கு ஒரு சாவுவந்து தொலையமாட்டேன் என்கிறது. இந்த நகரத்தின் எல்லா மருத்துவமனைகளிலும் அவர் உடல் பரிசோதுக்கப்பட்டு குறிப்பெழுதப்பட்டு விட்டது. இந்த புதிய மருத்துவமனியின் புதிய மருத்துவர் புதியதொருகுறிப்பிற்காய் பெயரை வினவிய போது அவர...