Skip to main content

அப்போது அந்தமுகத்தில் ஒரு சிரிப்பிருந்தது.விழிக்கடையில் கொஞ்சம் நீர் சேர்ந்திருந்தது

ராமகிருஷ்ணன் தான் பிறப்பதற்கு முன்பே
அவர் தாயை
ஆயிரம் முறைக்கும் அதிகமாக
அரசமரத்தை சுற்ற வைத்தார்.
அம்மன் சன்னிதிகளில் அவள் உருண்டு உருண்டு மண்ணானாள்.
நாளெல்லாம் விரதமிருந்தாள்.
இப்படி வாராது வந்த மாணிக்கத்திற்கு
பேச்சு வரவில்லை சரியாக.
அவள் மீண்டும் அலகு குத்தி
காவடி சுமந்து
தீக்குண்டம் இறங்கியேற
அவர் தன் எட்டாம் வயதில் திருவாய்மலர்ந்தார்.
அவர் விண்ணப்பித்த எல்லா பணியிடங்களும்
அதற்கு முந்தைய நாளில் நிரப்பப்பட்டிருந்தன.
"பத்துநாட்களுக்கு முன்னால் சொல்லியிருக்ககூடாதா" என்று
அவர் காதலி அழுது வடிந்தாள்.
அவர் அத்தனை நாளும்
அவளைப் பற்றிய ஒரு காவிய முயற்சியில் மூழ்கியிருந்தார்.
33 மூன்றாம் வயதில் திருமணம் முடிந்த அவருக்கு
5 வருடங்கள் கழித்து
அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இப்போது நரை முற்றி உடல் உளுத்து
துள்ளிதுள்ளி இருமும் அவருக்கு
ஒரு சாவுவந்து தொலையமாட்டேன் என்கிறது.
இந்த நகரத்தின் எல்லா மருத்துவமனைகளிலும்
அவர் உடல் பரிசோதுக்கப்பட்டு குறிப்பெழுதப்பட்டு விட்டது.
இந்த புதிய மருத்துவமனியின் புதிய மருத்துவர்
புதியதொருகுறிப்பிற்காய் பெயரை வினவிய போது
அவர் சொன்னார்
"லேட் ராமகிருஷ்ணன்"

Comments

முகத்தில் சிரிப்பும், விழிக்கோடியில் நீரும்தான் வருகிறது. ரசித்தேன்.
க ரா said…
என்னன்னு சொல்ல இந்த கவிதைய பத்தி. சொல்லாமல் சொல்லும் சோகமாக படுகிறதுதெனக்கு...
:)
இந்த கருப்பு நகைச்சுவை என்ற சுவை இருக்கிறதே :)
இதுக்கு தான் ராமகிருஷ்ணன் பிறக்காமயே இருக்க முயற்சி பண்ணியிருக்கார், அவர் அம்மா சும்மா விட்டாங்களா :)
அல்லது இந்தக்கவிதை இப்படி எழுதப்பட்டு ராமகிருஷ்ணன் இப்படி அல்லலுற வேண்டும் என்பது உங்களையும் மீறிய முன்னமே எழுதப்பட்ட விதியா :)
வாழ்வில் விளையாடும் மதியால் வெல்ல முடியாத விதியை என்னவென்று சொல்வது :(
எல்லாம் எல்லாம் யோசிக்கும் வேளையில்,,,,,,,,,
எல்லாம் எல்லாம் முடிந்து விடுகிறது

நல்ல கவிதை நண்பா

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.