Skip to main content

நாம்

எனக்கு காலையிலும் மாலையிலும்
தன்னையே பிழிந்து சூஸ் போட்டு கொடுக்கும் ஒரு அம்மா..
வட்டவட்ட சிப்ஸ் துண்டுகளாக தன் சதை அரிந்து தரும் ஒரு அப்பா..
இரண்டு இரத்தத்தின் இரத்தங்கள்..
என்றாலும் அவர்களின் வயிற்றுக் கடுப்பின் போது
நான் கழிவறைக்கு உடன் போவதில்லை.
என் மழைக்காலத்து ஆஸ்துமா இரவுகளில்
அவர்கள் குறட்டை விட்டு தூங்குகிறார்கள்


" அங்க இருக்க முடியல.. வீட்டுக்குள் புகுந்து
பெட்டைகள சிதைக்கிறாங்க.."
என்று அகதியொருத்தி பேட்டி தருகையில்
நான் பாயசம் அருந்திக் கொண்டிருந்தேன்
விழிக்கடை நீரை உதறி எறிந்து விட்டு
மீதி பாயசத்தை உண்டேன்



நண்பனை சிமெண்னெய் ஊற்றி எரித்து விட்டு வந்த இரவு
கால முறைப்படி மனைவியை புணர்ந்தாக வேண்டிய நாளாக இருக்கிறது
"தம்பி.... ! எழந்திரு...."



நாமுக்குள் எட்டிப் பார்த்தால்
நானும், நீயும் தனித்தனியாக தெரிகிறது.



இந்த "ஓருடல் ஈருயிரை '
சுடுவதென்றால் எத்தனை முறை சுட வேண்டும்
குத்துவதென்றால் எத்தனை முறை குத்தவேண்டும்..

Comments

Bibiliobibuli said…
ஈழத்தின் அவலத்தை கண்முன் நிறுத்துகிறது கவிதை!
க ரா said…
உங்களது பல கவிதைகள் மெல்லிய புன்னகையை தோற்றுவிக்கும். ஆனால்
மனதை ரணமாக்குகிறது இந்த கவிதை.
Unknown said…
இத்தனைக்கும் நடுவில் நல்லவனாக காட்டிக்கொள்ளும் நிர்பந்தம் வேறு....

நிஜம் சுடுகிறது
Unknown said…
இத்தனைக்கும் நடுவில் நல்லவனாக காட்டிக்கொள்ளூம் நிர்பந்தம் வேறு எனக்கு..நிஜம் சுடுகிறது

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...