என் கவிதைத் தொகுப்பு குறித்தான ஒரு விமர்சனம் நன்றி; விஷால்ராஜா கவிதையைக் கொலை செய்த பைத்தியக்காரன் நவீன தமிழ்க் கவிதை என்றாலே ஏதோ பேய் பிசாசு என்பதுப்போல் பயந்து ஓடும் நிலை இன்றைக்கு ரொம்பவே சகஜமாகிவிட்டிருக்கிறது . கவிதைகளை ஒரு பொது வாசகன் சீண்டியாவது பார்க்கிறானா என்று கேட்டால் அதற்கு தீர்மானமாக எந்த பதிலும் சொல்ல முடியாது என்பதே நிதர்சனம் . புனைக்கதைகளின் மீது பெரும் ஈடுபாடுடைய பலரும்கூட கவிதைகள் பக்கம் மழைக்கும் ஒதுங்காதிருப்பதை நான் நிறைய தடவை கவனித்திருக்கிறேன் . வாசக பரப்பு மிகக் குறைவாக இருப்பது நவீனக் கவிதையுலகின் முன்னிருக்கும் ஒரு முக்கியமான சவால் . இதனோடு சேர்த்து கவிதைகள் குறித்த குழப்பங்கள் வேறு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கின்றன . உண்மையான கவிதைக்கும் அதுபோன்ற பாவனைக்குமான வேறுபாட்டை கலைந்தகற்றுவதே பெரிய சிக்க...