அதிகம் புழங்காத வழியில் ஒரு திமிரான பயணம் ( லிபி ஆரண்யாவின் “ உபரிவடைகளின் நகரம் ” தொகுப்பை முன் வைத்து ) - இசை- மாட்டை வெளியே மேயவிடும் முன் கயிற்றின் மறுமுனையை ஒரு தடித்த மரத்தில் கட்டிவிடுவது நமது வழக்கம். லிபி அந்தக் கயிற்றையும் அறுத்தெரிந்து விடுவதின் மூலம், கயிற்றின் நீளமே மாட்டின் சுதந்திரம் என்கிற கட்டுப்பாட்டை மீற முயற்சித்திருக்கிறான்.இத்தொகுப்பில் வரும் கவிதைகளுக்கு ஒரு திடமான மையப்புள்ளி இல்லை.அது நிலையற்று ஒன்றைத் தொட்டு ஒன்று, அதைத் தொட்டு இன்னொன்று என்று தாவித்தாவி பறந்தபடியே இருக்கிறது. ஆனாலும் ‘ ஒன்றைத் தொட்டு ஒன்று “ என்பதால் எல்லாவற்றிற்குமிடையே மங்கலாக ஏதோ ஒன்று தொட்டுக்கொண்டு தான் இருக்கிறது. புனைவின் கட்டற்ற சுதந்திரத்தை துய்கும் வேட்கை என்று இதைச் சொல்ல்லாம். சில கவிதைகளில் இந்த தாவல் “ போதை வேளைப் பேச்சு “ என்கிற சாக்கில் நிகழ்கிறது. சில சமயம் நிதானத்தில் நிகழ்கிறது. ” போதை வேளைப் பேச்சு ” சற்று அதிகம் தாண்டுகிறது என்பதில் வியக...