Skip to main content

திருடன் மணியன்பிள்ளையும் திருடர் சத்தியமூர்த்தியும்

 
                     
                 

                                   
                                                                                                               இந்தப் புத்தகத்தைப் படிக்கவும் , இது குறித்து எழுதவும் அடிப்படை தகுதியொன்று அவசியம் என்று நினைக்கிறேன். அது தானும் ஒரு வகையில் திருடன்தான் என்கிற புரிந்துணர்வே. சமூக கட்டுப்பாட்டை குலைக்கும் திருட்டு என்கிற குற்றம் தண்டனைக்குரியதாகிறது. இது போலவே சமூகம் உருவாக்கி வைத்திருக்கிற ஒழுங்குகளை குலைக்கிற பலவும் தண்டனைக்குரிய குற்றங்களே என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். திருடர்கள் “ க்ளவுஸ் “ அணிந்து கொள்ளும் போதும் எங்கேனும் ஓரிடத்தில் தன் கைரேகையை தவற விட்டுவிடுகிறார்கள்.ஆனால் வெடிகுண்டை சத்தமில்லாமல் வெடிக்க வைப்பதில் சமத்தர்களான நாம் வெகு நிதானமாக, வெகு நுட்பமாக , தேர்ந்த கைகளால் குற்றங்களைச் செய்கிறோம். தனிமையில் நம் சிந்தை அடிக்கிற கூத்துக்களை நாமே அறிவோம் என்கிற படியால் நாம் மணியன்பிள்ளைக்கு சற்றும் சளைத்தவர்களில்லை.

     இந்தப்புத்தகமெங்கும் விரவிக்கிடக்கும்  துர்சாகசங்களும், கேடுகெட்ட செயல்களும் நம்மை விட்டு  எங்கோ தூரத்தில் இல்லை. நாம் கொஞ்சம் துணிந்திருந்தால் செய்திருக்க கூடிய அற்பத்தனங்கள் தான் இவை. மணியன்பிள்ளை நினைத்ததை முடித்தவர்...  நாம் நினைத்து நினைத்து ஏங்குபவர்கள். ஒரு வகையில் திருடர்கள் அப்பாவிகள் தான்.  பிள்ளை சொல்கிறார்...

 “ வக்கிரமான அறிவுள்ளவர்கள் வேறு வழிகளில் பணம் சம்பாதிக்கிறார்கள். திருடன் நேரடியாக திருடுவதன் மூலம் தன் அறியாமையை காட்டுகிறான். இருட்டில் வீட்டுக்குள் நுழைந்து பணத்தை திருடிக்கொண்டு ஓடும் முட்டாள்தனம் அறியாமை தானே ?     (பக் : 125)

எண்ணற்ற திருட்டுகளில் ஈடுபட்ட , பல முறை சிறைசென்று திரும்பிய ஒருவரின் வரலாறு என்பதால் இது மிகவும் சுவாரஸ்யமானது. சாகசங்களால் நிறைக்கப்பட்டது. ஜனரஞ்சகமானது என்று கூட சொல்லலாம். ஆனால் இதன் ஜனரஞ்சகத் தன்மையையும் மீறி இதை ஒரு இலக்கியப் பிரதியாக்குவது, ஓயாது திருடிக்கொண்டிருந்த போதும் அவரை விடாது துன்புறுத்திக் கொண்டிருந்த குற்றவுணர்ச்சியும் , அபூர்வமான சில தருணங்களில் குலையாத மனஉறுதியுடன் அவர் நீதியின் பக்கம் நின்றதும் தான். கும்மிருட்டின் பாதையில் திடீரென மின்னி மறையும் ஒரு சின்ன ஒளிக்கீற்று நம்மை ரொம்பவும் வசீகரித்து விடுகிறது.

 இந்த வரலாற்றை எழுத்தாக்கியிருப்பவர் இந்துகோபன். என்னளவில் இது மணியன்பிள்ளையும் ,இந்துகோபனும் சேர்ந்து எழுதியிருக்கும் “ சற்றே மேம்படுத்தப்பட்ட “ மணியன்பிள்ளையின்  தன் வரலாறு. பிள்ளை சொல்லும்  சம்பவங்களுக்கு பின்னிருக்கும் வாழ்வியல் உண்மைகளை நோக்கி _ நாம் அறியாத அல்லது அறியாதது போல் பாசாங்கிக்கும் உண்மைகள் – தன் எழுத்தை நகர்த்திச் செல்கிறார் இந்துகோபன். கச்சிதமும், கலாநேர்த்தியும் , நுட்பமான பார்வையும் கூடிய இவரது எழுத்து முறை ஒரு புனைவின் மயக்கத்துடன் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. வரலாறு கூட நேர்வரிசையில் அல்லாமல் கலைத்தே அடுக்கப்பட்டிருக்கிறது.

   ஜனித்த இடத்திலேயே மொத்த வாழ்வையும் வாழ்ந்து தீர்த்து, அங்கேயே ஒரு ஆறடி நிலத்தைக் கேட்டு வாங்கி உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு சாமனியனின் வாழ்வல்ல பிள்ளையின் வாழ்வென்பதால், இதில் வெவ்வேறு மனிதர்களுடைய வரலாறும், வெவ்வேறு காலத்தினுடைய வரலாறும் இயல்பாகவே கலந்திருக்கிறது.  மிடுக்காக உடுத்தியிருக்கும் இச்சமூகத்தின் சொறிப்புண்களை பார்வைக்கு வைக்கிறது இந்தப் புத்தகம். ஜெயில் வாழ்க்கையை குறித்து எழுதிச்செல்லும் மணியன் பிள்ளை எழுதுகிறார்...

   பிரபல நச்சலைட் ஓமனக்குட்டிப்பிள்ளை எங்கள் ஊர்க்காரர்தான். நல்ல அறிவும் அரசியல் தெளிவும் உள்ளவர். நான் கொல்லம் சப் ஜெயிலில் இருக்கும் போது “ அவசர நிலை கைதிகள் பலரைக்கொண்டு வந்து அவமானப்படுத்தும் நோக்கத்துடன் நிர்வாணமாக அடைத்து வைத்தார்கள். அவர்கள் கோஷம் முழக்கிய படியே அவமானத்தை மறந்தார்கள். வெளியே தரையில்  சாக்குத்துணியை விரித்துப் படுத்திருந்த நான் சாக்கையும் துணியையும் எறிந்து கொடுத்தேன். நாடே கொந்தளித்துக் கிடக்கும் போது ஒருவர் மட்டும் அதை உடுத்துவாரா என்ன ? “

                     பக் : 545

கைதிகளிடம் வெளிப்படும் பாலியல் ஆர்வம் சிலரிடம் தீவிரமாக செயலாற்றும்.  ஜெயிலில் ஏதோ தேவைக்காக வந்த ஒரு அழகான இளம்பெண்ணின் பாதம் பட்ட மண்ணெடுத்து ஒரு நேர சுய இன்பத்துக்கு தூண்டுதலாக வைத்துக் கொண்ட ஒரு கைதியும் உண்டு.

                               பக் : 447


திருடப்போன இடத்தில் தன்னைப் பார்த்து பயத்தில் உறைந்துபோய் நிற்கும் மூதாட்டியிடம் “ பயப்படாதீர்கள் அம்மா.. நான் போய்விடுகிறேன் “ என்று சொல்லிவிட்டு வந்த வழியே திரும்பி,  மதில்சுவரில் சாய்ந்து கொண்டு அழும் மணியன்பிள்ளையில் துவங்கி , உறக்கத்தில் இருக்கும்  தங்கவர்ண அழகியின் அழகில் மயங்கி அவள் கழுத்தில் கத்தியை வைத்துப் புணரும் மணியன்பிள்ளை வரை பெண்களுடனான பிள்ளையின் உறவு புதிரானதாகவே இருக்கிறது. அவர் சில பெண்களை வஞ்சித்திருக்கிறார். சில வாய்ப்புகளை உறுதியாக நிராகரித்திருக்கிறார். குடும்பம் என்கிற அமைப்பில் வதையுறும் பெண்களின் மீதான அவரின் கரிசனம் விந்தையானதாக இருக்கிறது. சொல்ல தனக்கு தகுதியில்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டாலும் சொல்லிய சொல்லில் குற்றமொன்றுலில்லை.

     “ இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கேரளத்தில் வீடுகளுக்குள் புகுந்து திருடுவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. இரவுகளை வேதனையில் கழிக்கும் ஏராளமான பெண்களைக் கொண்ட ஒரு நாடு இது. நான் புரிந்து கொண்டிருக்கிற வரையில் உடல் தேவையை நிறைவு செய்தபின் இயல்பாகவே எதையோ இழந்துவிட்டதான ஒரு உணர்வு தோன்றுகிறது. இதன் பிரதிபலிப்பு பல்வேறு விதமாக வெளிப்படுகிறது.சில மனங்கள் தன் இணையை மனோரீதியாக துன்புறுத்த நினைக்கின்றன. சிலர் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். பாலியல் தாக்குதலுக்குப் பிந்தைய வன்முறை தான் இம்மனோபாவத்தின் உச்சநிலை. முத்தத்தில் துவங்கி முத்தத்தில் முடியும் உறவு மிகவும் அபூர்வமாகவே வாய்க்கிறது.

            பக் : 412


   ஆமாம்...  பாலியல் தாக்குதல்” ... பாலியல் உறவல்ல .. அவன் எதோ ஒரு நடிகையின் மார்பை பிசைந்து கொண்டிருக்க, அவள் பருவத்தில் தான் தவற விட்ட, எங்கோ இருக்கும்  தன் காதலனுக்கு உடலைக் கொடுத்துப் படுத்திருக்கிறாள். ஒரு முத்தம் கூட தராமல் ஒன்பது பிள்ளைகளை பெற்றுப் போடும் பொன்னான வாழ்வு நம் வாழ்வு.

      
 நல்லவர்களும் , கெட்டவர்களும், சுமாரான நல்லவர்களும் , சுமாரான கெட்டவர்களும் , கொடிய பாவிகளும் , நீதியின் நிமித்தம் துன்பப்படுபவர்களும் காணக்கிடைக்கிடைக்கிற இப்புத்தகத்தில் சில விசித்திரர்களும் தென்படுகிறார்கள்.

     திருட்டு நடந்து விட்டது.. போலீஸ் துப்பு துலக்குகிறது...  திருட்டு நடந்த அன்று பலமான இடியும் , மழையும் என்று தெரிய வந்தால், பிடி... அந்த கார்கால திருடனை “ என்று பிடித்து விடுமாம். கடலுக்குப் போய் மீன் பிடித்து வாழ்கிற அவருக்கு மின்னல் வெட்டி இடி இடித்துவிட்டால் மனதில் சஞ்சலம் பிறந்துவிடுகிறது. அவர் பிள்ளையிடம் சொல்கிறார் ...

               






  “ நான் திருடுவதற்கான காரணம் மீன் கிடைக்காமல் அல்ல. பணம் சம்பாதிக்க வேற  என்னென்னவோ வழிகள் இருக்கு .. இதுக்கான காரணத்தை எப்படி சொல்லி புரிய வைக்கறதுன்னு எனக்கு தெரியல.. அது... அதை ஒரு ரசனைன்னு சொல்லலாம்.. பயங்கரமான இடியும் மின்னலுமுள்ள மழைக்காலத்தில் எந்தக் கவலையுமில்லாம மூடிப் போர்த்திட்டுத் தூங்குறவங்களைப் பார்க்க அழகாக இருக்கும்..மனப்பொருத்தமில்லாத கணவன் மனைவி கூட கட்டிப்பிடிச்சித் தூங்குவாங்க. மழைக்காலமுங்கறது அன்பின் ஒரு மாத காலம். இதையெல்லாம் நான்  உங்கிட்ட சொல்றதுக்கான காரணம், உன்னால இதைப் புரிஞ்சுக்க  முடியுங்குறதுதான்..போலீசுக்கு கலாரசனையே கிடையாது. “

                                     பக் : 503

 இந்தப் புத்தகத்திலிருந்து கலையுடன் தொடர்புடைய வேறொரு கூற்றும் நினைவுக்கு வருகிறது,,

  கலைஞனின் மனவோட்டத்தை முன்னரே கணித்து விடுவதென்பது இயலாத விசயம். அவனது குணம் இயல்புக்கு மாறான , வேறுபட்ட பல நுட்பங்களும் , சிக்கல்களும் முரண்களும் கொண்டதாக இருக்கும். குற்றவாசனைக்கான காரணமும் இது தான். கவிஞனுக்கு கவி மோட்சமில்லாதது போன்ற ஒரு பிணைப்பு இதிலுமிருக்கிறது. இது திருடனிடமும், மோசடிக்காரனிடமும் , பிக்பாக்கெட்காரனிடமும் குற்றவாசனையாகக் கிடக்கிறது.  இது தூண்டுதலடையும் போது அவன்  திருடுகிறான். 

                       பக் : 433

   கவிஞனுக்கு கவிமோட்சமில்லாதது போன்ற .. “ என்கிற வரியை,  கவிதை குறித்தான  எனது சில வரிகளோடு ஒட்டி வைத்துப் பார்க்கையில் வியப்பு மேலிட்டது...

 “ 100 கவிதை எழுத தெரிந்தவனுக்கு 101 கவிதையை எழுதத் தெரிவதில்லை... 

  இதனால் தான் பிரமாதம் என்று நமக்கு நாமே சிலாகித்துக் கொள்ளும் சில கவிதைகளை கொஞ்ச நாள் கழித்து  நாமே கிழித்துப் போட்டு விடுகிறோம். கவிதையுடன் ஆடும்  இந்த பகடையாடத்தில் சமயங்களில் நமக்கு தோல்வி கிடைப்பினும், இந்த மர்மம் தான் கவிதையின் தீரா இளமையை காத்து நிற்கிறது. நாமும் கவிதையும் மாறி மாறி வெட்டிக்கொள்வதில் தான் ஆட்டம் சூடு பிடிக்கிறது. நாம் கவிதையை நோக்கி மேலும் மூர்க்கத்துடன் முன்னேறப் பார்க்கிறோம்

     இந்த மாறி மாறி வெட்டிக்கொள்வதென்பது  திருட்டுக்கும் , கவிதைக்கும் பொதுவோ என்னவோ ?

    சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் கள்வர்கள் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

   “ மந்திரம், தெய்வம், மருந்தே, நிமித்தம்

     தந்திரம், இடனே, காலம், கருவி என்று

     எட்டுடன் அன்றே – இழுக்கு உடை மரபின்

     கட்டு உண் மாக்கள்  துணை எனத் திரிவது ?

  என்கிறது சிலம்பு.

அதாவது மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம், இடம், காலம், கருவி ஆகிய எட்டையும் கள்வரின் துணைகள் என்கிறது அது. இன்று எழுதப்பட்டிருக்கிற இத்திருடனின் சரிதத்திலும் இந்த ‘கள்வரின் துணைகள் “ இயல்பாகவே பயின்று வந்திருப்பதை பார்க்க முடிகிறது.

  மேலும் ஒரு அதிதீர சண்டைக்காட்சியையும் சிலம்பு காட்டுகிறது. திருட்டின் போது திருடனுக்கும் ஒரு இளவரசனுக்கும் இடையே சண்டை மூண்டு விடுகிறது. இளவரசன் தன் உடை வாளை உருவுகிறான். பதிலுக்கு திருடன் வாள் எதையும் எடுக்கவில்லை.  அந்த வாளின் உறையை  மட்டும் இளவரசினிடமிருந்து பறித்துக் கொண்டு,  அவன் வாள் வீசும் போதெல்லாம் உறையை அந்த வாளினுள் திணித்து தப்பி மறைகிறான் திருடன்.

    திருடனின் மேல் அன்று ஏற்றப்பட்ட மாயமும், தீரமும் கலந்த சாகச பாவம் இன்று வரை தொடர்ந்து வருகிறது. நம் வீட்டில் நிகழாத வரை நாமும் அச்சாகசங்களை ரசிப்பவர்களாகவே இருக்கிறோம். நாயகர்கள் கொள்ளைக்காரனாக நடித்த அனேக திரைப்படங்களை நாம் வெள்ளிவிழா கொண்டாட வைத்திருக்கிருக்கிறோம். அவன் அந்தப்பணத்தில் சின்னதாக ஒரு அனாதை விடுதி கட்டயிருக்க வேண்டும் என்பது தான் நமது ஒரே நிபந்தனை.

   சிலர் தன்னுடைய 16 வது வயதில் பேப்பரையும் , பேனாவையும் எடுத்து வைத்துக்கொண்டு தன் வாழ்வை வரையத்துவங்குகிறார்கள். தன் ஆயுளையும் அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். சாவது வரை தன் வாழ்வு எத்திசையில் பயணிக்க வேண்டுமென்பதை அவர்கள் கடவுளுக்கு வரைந்து காட்டுகிறார்கள்.  கடவுளும் மறுபேச்சு பேசாமல் அவர்களது பாதையை செம்மை செய்து வைக்கிறார். ஆனால் வேறு சிலருக்கோ ஒரு துண்டுக்கோடு வரையவும் உரிமையில்லை. அவர்கள் கதறித்துடித்து கடவுளை நோக்கி கையை உயர்த்துகையில், கடவுள் அவரது கைகளை வேறெங்கோ உயர்த்துகிறார். இத்தொகுப்பு முழுக்க பிள்ளை விதி விதியென்று புலம்புகிறார் . அவர் வாயிலிருந்து வருவதால் விதியை நாம் நம்பியாக வேண்டியிருக்கிறது.

 “ கடவுளின் கையில் தான் நம்முடைய ஒவ்வொரு அசைவுமிருக்கிறது. அவனுடைய லீலாவினோதங்களை நாம் வாழ்கையாக வாழ்ந்து தீர்க்கிறோம்

                           பக் : 571

590 பக்கங்கள் கொண்ட இந்த பத்தகத்தில் மகத்தான வரிகள் நிறையவே உள்ளன. கட்டாயம் 365 தேரும். பொன்மொழிகளைக் கோர்த்து ஒரு காலாண்டர் செய்வது போல் இந்த வரிகளைக் கோர்த்து ஒரு காலண்டர் தயாரிக்கலாம்..  ஒரு தாளைக் கூட எளிதில் கிழித்தெரிந்து விட முடியாத காலண்டராக அது இருக்கும். ஆகஸ்ட் 15 , ஜனவரி 26 , டிசம்பர் 6 போன்ற நல்லநாள் கெட்டநாட்களில் அச்சிட பொருத்தமான வரிகள் இதில் உண்டு. அவ்வப்போது கொஞ்சம் “ காற்று வாங்கிக் கொள்வதின் மூலம் பிழைத்துக்கிடக்கிற என் பிறந்தநாளிற்கான பொருத்தமான வாசகத்தை நான் தெரிவு செய்து விட்டேன்...

“ கடவுளுக்கு பூமியில் ஒரு பிரதிபிம்பம் உண்டென்றால் அது காற்று மட்டும் தான் “

       பக் : 138.

    யூசப்  இடறாத இணக்கமானதொரு தேர்ந்த மொழியில் இந்நூலைப் பெயர்த்திருக்கிறார். நூலின் சில வரிகளை வாசிக்கையில் இது மலையாள மூலத்தில் எப்படி இருந்தது என்று கேட்டறியும் ஆவல் எழுந்தது

   அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம். உறுதியாக இதை சம்பிரதாயமான முடிப்பிற்காக சொல்லவில்லை.


                            நன்றி :  காலச்சுவடு – ஜூலை- 2014
    

Comments

Unknown said…
ஒரு முத்தம் கூட தராமல் ஒன்பது பிள்ளைகளை பெற்றுப் போடும் பொன்னான வாழ்வு நம் வாழ்வு.ரு முத்தம் கூட தராமல் ஒன்பது பிள்ளைகளை பெற்றுப் போடும் பொன்னான வாழ்வு நம் வாழ்வு.// நேசிக்க வைக்கும் வரிகள்
செம இன்”ட்ரஸ்ட்” ஆள்.

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான