Monday, October 17, 2016

ஆண்பால் – பெண்பால் – அன்பால்

                                 

        

            
 “ குடும்பம் எனும் வலிய தாம்புக்கயிற்றால்  இழுத்துக் கட்டபட்டிருக்கும் 72 கிலோ எடையுள்ள நாய் நான்..”  இது என்னுடைய வரி தான். இந்தக் கட்டுரையை துவங்கும் முன் அந்த நாயிடம் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் “ எவ்வளவு புரட்சிக்குறைவாக தோன்றினாலும் உண்மையையே குரை “ ”என்பதையே.

     “ அந்திக்கருக்கலில் ஒரு மனிதன் நடந்து வந்துகொண்டிருந்தான் ” என்கிற வரியை ஒருவர் வாசிப்பதாகக் கொள்வோம். அவர் மனதில் விரியும் “மனிதன் “ நிச்சயம் ஒரு ஆண்தான். நமது மொழி ஆண் மையப்படுத்தப்பட்டது  என்பதை ஒரு எழுத்தாளனாக என்னால் அடிக்கடி உணர முடிந்திருக்கிறது. பள்ளிப்பருவத்தில் ஒரு மிஸ் ஏதோ ஒரு பொருளைக் கொடுத்து , டீச்சர்ஸ் ரூமில் இருக்கும் இன்னொரு மிஸ்ஸிடம் கொடுத்து வரச்சொன்னார். நான் பள்ளி முழுக்க தேடியலைந்து விட்டு திரும்ப வந்து அதை அவரிடமே கொடுத்து விட்டேன். ஏனெனில் பள்ளியில் “ ஆசிரியர் அறை “ தான் இருந்தது. “ ஆசிரியைகள் அறை “ யை எங்கு தேடியும் காண வில்லை. “ ஆசிரியர் அறை “ என்றால் அங்கு மாஸ்டர்கள் மட்டும் தான் இருப்பார்கள் என்று என் புத்தியில் யார் வந்து புகட்டியது ? “ ர் “ விகுதி ஆண்களுக்கானது என்பதை அந்தச் சிறுவனுக்கு யார் தான் கற்பித்தது ?

    மனிதனுக்கு பதிலாக இன்று “ மனிதி “ எனும் சொல் புழக்கத்தில் வரத்துவங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  வரவேற்போம்... பயன்படுத்துவோம். சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல புத்திஜீவிகள், அரசியல் விமர்சகர்கள் என யாராலும் “ கற்பழிப்பு “ என்கிற சொல்லிலிருந்து இன்னும் முழுமையாக விடுபட முடியவில்லை. அவ்வப்போது வாய் தவறி விடுகிறது. நான் இரண்டு மாதங்களுக்கு முன் எழுதிய ஒரு கவிதையிலும் “ கற்பழிப்பு”வந்துவிட்டது. பிறகு புத்தி பதறி விழித்தே அதை “ வல்லாங்கு “ என்று மாற்றினேன்.

   இன்று சில ஆண்கள் பெருமையாகப் சொல்லிக்கொள்ளும் விஷயம் ஒன்று உண்டு ...
“ நான் என் ஒய்ஃபுக்கு துணியெல்லாங் கூட துவச்சு குடுப்பேன்க..” “
துணி துவைப்பது வரை சரி தான்...  “ துவைத்துக் கொடுப்பேன்... “ என்றால்.... அதாவது துணி துவைப்பது பெண்களின் கடமை. அதில் இவர் பங்கெடுப்பது இவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று பொருள். நான் இன்னும் “துணி துவைத்து கொடுப்பவனாகத்தான் “” இருக்கிறேன். சீக்கிரம் “ துணி துவைக்க வேண்டும்””. ஆமாம்.. இரண்டாயிரம் வருஷத்துப் பழக்கம். இரண்டு புத்தகங்களால் அப்படி சட்டென மாறிவிடாது. ஒரு ஆண் தனக்குள் இருக்கும் “ ஆணை “ ” துறப்பது அவ்வளவு எளிதானதல்ல. எழுத்தாளன் ஆன உடனே ஒருவன் “ சமதர்மன் “ ” ஆகி விடுவான் என்று  நம்ப நான் தயாராக இல்லை.

  எல்லோரையும் போலவே எனது உலகின் முதல் பெண்ணும் என் அம்மா தான். எல்லா அம்மாக்களையும் போலவே “தியாகஜோதி “ . எட்டாம் வகுப்பு படிக்கையில் படிப்பை நிறுத்தி விட்டு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். என் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய அம்மாவின் ஆசிரியர் இப்படி பேசினார்...

 “ நாகரத்தினம் ரொம்ப நல்லா படிக்கிற புள்ளையாச்சே... இப்படி பாதியில நிறுத்தறாங்களே ... என்று எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு...அந்தக் குறை இன்று அவள் மகனின்  மூலமாக தீர்ந்து விட்டது ... “
உண்மையில் அந்தக்குறை அப்படி தீர்ந்து விடுகிற குறையா என்ன ?

  குடும்ப வண்டியை ஒரு மாட்டைப் போல் அவள்தான் இழுத்தாள். வீட்டு வேலை என்று அவள் எனக்குத் தந்தது தண்ணீர் எடுப்பது மட்டும் தான். அதுவும் “ வேறு வழியே இல்லை என்பதால். என் அப்பா ஒரு நாடக நடிகர்.. சமயங்களில்  நாயகன்.. இயக்குனர் வேறு... கவிஞரும் கூட.. எனவே அவர் சைக்கிளில் ரண்டு குடம் போட்டு தண்ணி எடுத்தால் பார்க்க அவ்வளவு பாந்தமாக இருக்காதல்லவா ? எனவே அம்மா என்னைத்தான் குழாயடிகளுக்கு அழைத்துப் போவாள்.  நீண்ட.. மிக நீண்ட வரிசைகளில் நான் நின்றிருக்கிறேன். அது ஒரு ஆக்ரோஷக் களம். களமாடுதல்தான் அது. களம் காண்பதில் எழுபது சதவீதம் பெண்களே . அந்தக் காட்சிகளை இப்போது திரும்ப எண்ணிப் பார்க்கவே திகிலாக இருக்கிறது. பல நூறு காளிகளை ஒரே திடலில் வைத்து பல மணி நேரங்கள் பார்த்துக் கொண்டே இருப்பதென்றால்... ஆமாம் சினிமாவில் வருவதைப் போன்றே எழுதக்கூசும் வசைகளால் அவர்கள் திட்டிக்கொள்வார்கள். மாறி மாறி குடுமியைப் பிடித்து தாக்கிக் கொள்வதும் உண்டு. தினமும் இது நடக்காதுதான் என்றாலும் எந்த நொடியும் நடந்து விடும் பதட்டம் எல்லா நொடிகளிலும் விரவிக் கிடக்கும்.

     நமது சீமான்களுக்கும், அறிஞர்களுக்கும் அற்பமான விஷயத்திற்கான உதாரணத்தை தேடுகையில் எளிதாக சிக்குவது  “ குழாயடிச்சண்டை “ தான் . ஆனால் ஒரு பெரும் கூட்டத்தை வெறும் தண்ணிக்கு அடித்துக் கொள்ள வைத்திருப்பதைப் பற்றிய “ கேவல உணர்வு “ நமது ஆட்சியாளர்களுக்கோ, அறிஞர் பெருமக்களுக்கோ நிச்சயமாக இருப்பதில்லை. அவர்களின் “ ஷவர்களில் “ எப்போது திருகினாலும் “ மழை மேகம் “ பொழிகிறது. பிறகு கேலி எழத்தானே செய்யும் ? இளிப்பு வரத்தானே செய்யும் ?

     ஒளவை ,  கே.பி. சுந்தராம்பாள் ( கே.பி.எஸ் ), பேச்சியம்மாள் ஆகிய என் பாட்டி மூவரையும் எப்படியோ என் நினைவு ஒரு சேரக் கட்டி வைத்திருக்கிறது. ஒளவையையும், கே.பி. எஸ்ஸையும்  குழப்பிக் கொள்வது இயல்பானதே. இதற்கிடையில் என் பாட்டி எப்படி நுழைந்தாள் என்பது தான் எனக்கு விளங்கவில்லை. என் பாட்டிக்கு கொஞ்சம் கேபிஎஸ் ஜாடை உண்டென்றே  நினைக்கிறேன் அல்லது என் மனம் அப்படி வலிந்து உருவாக்கி வைத்திருக்கிறதா?

  “ உணர்ச்சியில் விளையாடும்
   உன்னதக் கவிச்சிங்கம்
   தளர்ச்சியில் விழலாகுமா ? – மகனே
   சந்தனம் சேராகுமா “ ?
 என்கிற வரிக்கு  “ இந்தச்சிங்கம் “ தலை புதைத்துத் தேம்புவது கேபிஎஸ்ஸின் மடியிலா ?  அல்லது என் பாட்டியில் மடியிலா ?

  தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை– இந்தத்
  தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை – எந்தச்
  சபையிலும் உனக்கு நடுக்கமில்லை ...
  சென்று வா ... மகனே ... சென்று வா ...”

என்று வாழ்த்தி வழியனுப்புவது சர்வ நிச்சயமாக என் பாட்டிதான். கேபிஎஸ் வெறுமனே வாயை மட்டும் தான் அசைக்கிறார்.      

  பெண் உடலாகவும் , மனமாகவும் வலுவற்றவளாகவே தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறாள். என் தங்கையொருத்தி இந்தச் சித்திரங்கள் உண்மையில்லை என்று எனக்குக் காட்டித் தந்தாள். அப்போது அவளுக்கு மீறினால் பத்து வயதிருக்கும்.. விடுமுறைக்கு என் வீட்டுக்கு வந்திருந்தாள். இரவில் தூங்கிக்  கொண்டிருக்கையில் பெரிய தேள் ஒன்று கொட்டி விட்டது. கதறித் துடித்தாள்.. வீறிடலில் வீடு ஒலி வாங்கியது.. அவ்வளவு வலிக்கும், கண்ணீருக்கும் இடையே அவள் சொன்னது எனக்கு இன்றும் வியப்பளிப்பதாகவே இருக்கிறது ...
 “ நல்ல வேளை... எனக்குப் பதிலா சங்குப் பாப்பாவ கொட்டியிருந்தா என்ன ஆயிருக்கும்... “
சங்குப்பாப்பா என்று அவள் சொன்னது அவளை விட இரண்டு வயது குறைந்த என் உடன் பிறந்த தங்கையை. இருவரும் ஒன்றாகத் தான் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

      அதே உறுதியுடன் , அதே தீரத்துடன் பின்னாளில் அவள் சாணிப்பொடியைக் கரைத்துக் குடித்து தன் காதலை நிறைவேற்றிக் கொண்டாள். பார்க்க பூஞ்சையாக , தொட்டால் ஒடிந்து விடும் தேகத்துடன், பூனைபோல் திரியும் அவள்தான் என் உறவுகளிலேயே சாணிப் பொடிக்கு பயப்படாதவள். மற்றவர்களெல்லாம் சாவுக்கு பயந்து செத்தவர்கள். நான் ஒரு முறை அதைத் திறந்து பார்த்திருக்கிறேன். அவ்வளவு பச்சையாக , ஆக்ரோஷமாக மின்னியது.  “ பிறகு பார்த்துக் கொள்ளலாம்... “ என்று மூடி வைத்து விட்டேன்.

        நமது கனவுகள் பெருத்துப் போய்விட்டன. அதைக் கண்டு மகிழ நமக்கு நிறைய காசு வேண்டி இருக்கிறது. அப்பா ஆபிஸ் போய் அம்மா வீடு பெருக்கிய காலம் முடிவடைந்து விட்டது. அழுக்குப் பேக் ஒன்று அம்மாக்கள் தோளிலும் ஏறி விட்டது. தவிர, அம்மா ஆபிஸ் போக அப்பா டாஸ்மாக் போகும் குடும்பங்களையும் நான் நிறையவே பார்த்திருக்கிறேன்.

        அலுவலகத்திலிருந்து வீடு வந்ததும் பேக்கை ஒரு மூலையில் ஏறிந்து விட்டு படுக்கையில் விழுவதோடு ஆணின் கடமை முடிந்து விடுகிறது. ஆனால் ஒரு பெண்ணின் பணி வீட்டிலும் தொடர்கிறது. சமயங்களில் நான் தெருமுனையிலேயே சட்டைப் பொத்தான்களை கழற்றத் துவங்கி விடுவேன். ஒரு பெண் இதற்கு எல்லாக் கதவுகளையும் எல்லா ஜன்னல்களையும் அடைக்க வேண்டி இருக்கிறது.
 
           அலுவலகத்திலிந்து வீடு வந்தததும்  சற்றே தலைசாய்த்திருக்கும் என் மனைவி 
 “ ஒரு பத்து நிமுஷங்க.. எந்திருச்சு சமச்சர்றேன்,,, “ என்று சொல்லும் போது உண்மையில் என் முகத்தை எங்கு வைத்துக் கொள்வதென்று எனக்குத் தெரிவதில்லை.
“ ஒண்ணும் அவசரமில்லை... மெதுவா எந்திரி...”என்று தாராளம் காட்டுவேன் தான் என்றாலும் அடுப்படியை பொறுத்தமட்டிலும் எனக்கு தண்ணீர் சுட வைப்பதைத் தவிர வேறொன்றும் தெரியாது என்பதே உண்மை. மற்றபடி நான் அங்கு அதிகம் புழங்குவதில்லை. கரப்பான்பூச்சி தொந்தரவு அதிகமானால் போய் அடித்து விட்டு வருவேன்..அவ்வளவு தான்..

  “ கரம் மசாலா...சின்ன பாக்கெட்..” எங்க சொல்லுங்க... கரம் மசாலா..” என்று என் மனைவி விளக்கும் போது எனக்கு ஆத்திரம் வரத்தான் செய்கிறது.
“ என்ன இது...பார் போற்றும் ஒரு கவிக்கு மசாலா பாக்கெட் வாங்கத் தெரியாதா என்ன ?
என்றாலும், சமயங்களில் அவள் பயந்தது போலவே வேறு மசாலாவுடன் தான் வீடு போய் சேர்கிறேன்.

  நமது குடும்ப அமைப்பின் மீது , அதன் ஆகச் சிறந்த அங்கத்தினனாக இருக்கும் பட்சத்திலும் எனக்கு நிறைய புகார்கள் உண்டு.  இழுத்துப் பிடித்து சேர்த்துக் கட்டும் நமது திருமண பந்தங்களின் மீது நிறையக் கேள்விகள் உண்டு...

 இந்தச்செருப்பைப் போல்
 எத்தனைப் பேர் தேய்கிறார்களோ
 இந்தக் கைகுட்டையைப் போல்
 எத்தனைப் பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
 இந்தச் சட்டையைப் போல்
 எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ
 அவர்கள் சார்பில்
 உங்களுக்கு நன்றி
 இத்துடனாவது விட்டதற்கு.

   
ஆத்மாநாமின் இந்தக் கவிதையை நமது குடும்ப அமைப்பை நோக்கிச் சத்தமாக சொல்லலாம்.

    பெண் மட்டுமல்ல..ஆணும்தான் அந்த எலிப்பொந்தில் வகையாக மாட்டிக் கொள்கிறான். பிறகு ஆயுள் முழுக்க அதற்குள்ளேயே ஓடிச் சாகிறான். நமது எலிகளுக்கு அதிலிருந்து எப்படி வெளி வருவது என்று தெரிவதில்லை. வெளியே வந்தால்  உயிர் வாழ முடியுமா ? என்கிற அச்சமும் விடுவதில்லை.  எனவே தான் “ அந்தப் பொந்துகள் “ இன்னும் வாழ்வாங்கு வாழ்கின்றன. 

  இவ்வளவு ஊழல்களுக்குப் பிறகும், இவ்வளவு கிட்ணி திருட்டுகளுக்கு பிறகும் “மருத்துவர் “ என்கிற சொல்லின் மீது இன்னும் கொஞ்சம் புனிதம் ஒட்டித்தான் கிடக்கிறது. ஆனால் ஒரு பெண் மருத்துவரானால் என்ன ? ராக்கெட் ஏவினால் என்ன?  பெண் வெறும் பெண்தான் நமது ஆண்களுக்கு.

  ஒரு மருத்துவர்... அதுவும் பொறுப்பு மருத்துவ அலுவலர்.. அவரின் கீழே சுமார் நூறு பேர் பணிபுரிகிறார்கள்.. அந்த மருத்துவர் நோயாளிகளைப் பரிசோதித்துக் கொண்டிருந்த ஒரு காலை வேளையில் அவர் கணவன் உள்ளே நுழைகிறார்... அவரை அத்தனை பேர் மத்தியிலும் அடித்து இழுத்துச சென்றார்.. காதணிகள் அறுந்து ரத்தம் சொட்டியது.. பணியாளர்கள் நூறு பேராலும் கைகட்டி வேடிக்கை தான் பார்க்க முடிந்தது.. ஏனெனில் அடிப்பது அவளின் ஆண். அவன் தாராளாமாக அடிக்கலாம். அது அவர்கள் குடும்ப பிரச்சனை.. போகிற வழியில் தாறுமாறாக வண்டியோட்டி அவள் வண்டியிலிருந்து தவறி கீழே விழுந்து விட , அவன் திரும்பி வந்து இரத்தச் சிராயப்புகளுடன் இருந்தவளை

  “ ஒழுங்காக...உட்கார கூடத் தெரியாதா சனியனே...”? “ என்று திரும்பவும் அடித்தான்.
 நமது தலைவியர் மட்டும் என்ன சாதரணர்களா ? காலையில் தலைவன் குடிக்கும் காபியில் கொஞ்சமாக விஷத்தை கலந்துவிடுகிறார்கள். அவனும் அதை சப்புக் கொட்டிக் குடித்து விடுகிறான்.

  நமது குடும்ப அமைப்பை இன்னும் சற்று தளர்த்த வேண்டுமா ? அல்லது முற்றாக மாற்ற வேண்டுமா  ? அப்படி மாற்றி அமைக்கப்படும் அமைப்பு வெற்றியடைவதற்கான சாத்தியங்கள் எவ்வளவு ? அந்த புதிய அமைப்பு எம் மனிதனின், மனிதியின் முகங்களில் ஒளி மலரை மலர விட்டு விடுமா ? என்பது குறித்தெல்லாம் என்னிடம் தீர்க்கமான பதில்கள் இல்லை. “ வலிக்கிறது “ என்பது மட்டும் தெரிகிறது. மருந்து என்ன ? என்பதை “ மருத்துவர்கள் “ தான் சொல்ல வேண்டும்.

ஒரு முறை அலுவலக சகா ஒருவரிடம் சொன்னேன்..

  “ சார்.. நமது விலாஸ்கள் மட்டும்  இன்னும் கொஞ்சம் அன்போடு, இன்னும்  கொஞ்சம் சுத்தமாக,  இன்னும் கொஞ்சம் முறுவலாக , புளிக்காத மாவில் வயிற்றுக்கு ஊறு செய்யாத தோசைகளை தயாரிக்கத் துவங்கி விட்டால் போதும்..நமது குடும்பங்கள் ஆட்டம் கண்டுவிடும்....
அதற்கு அவர் சொன்னார்...

நல்ல பகடி ... நீங்களே சிரித்துக் கொள்ளுங்கள்... தம்பி, ஒரு புல்டோசரே எங்கிருந்து துவங்குவது என்று தெரியாமல் குழம்பி நிற்கும் இடம் அது ...
வீடு பெறாவண்ணம் யாப்பதை வீடென்பார் “ என்கிறது நமது மகாகவியின் வரியொன்று.

   காம சூத்திரமும், கொக்கோக சாஸ்திரமும் நடம் பயின்ற நாட்டில் இன்று நிலைமை சரியில்லை.வயதிற்கு வந்த பெண்ணை வீட்டில் தனியாக விடுவது எப்படி? “  என்பது முந்தைய தலைமுறையினருக்கான கவலையாக மாறிவிட்டது.  இன்றோ யோனியுடன் ஒரு உயிர் பிறந்து விட்டால் அடுத்த கணத்திலிருந்து அதற்குப் பாதுகாப்பில்லை என்பதே நமது அவலம். இரண்டு வருடச் சிசவை வல்லாங்கு செய்துவிட்டதாக வருகிற செய்திகளை எப்படி ஜீரணித்துக் கொள்வதென்றெ தெரியவில்லை. உறுப்பைச் சிதைப்பது மட்டுமல்ல... ஒரு ஆட்டை துண்டாக்குவது போல் கூறு கூறாக அறுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சாதாரணமாக மூடி வைத்து விடுகிறார்கள்.

  சென்னை புத்தக்காட்சியில் ஒரு  நண்பரைச் சந்தித்தேன். அவர் “ முசுடு “ என்று பேர் எடுத்து வைத்திருக்கும் ஒரு பிரபலம்.. இது மூன்றாவது சந்திப்பு.. முதல் இரண்டு சந்திப்புகள் கூட அவ்வளவு நீண்டதல்ல. அவர் வாசகர்களுக்கு கையொப்பமிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். கிடைத்த இடைவெளியில் கட்டிக்கொண்டோம். அங்கு ஒரு இருக்கை தான் இருந்தது. அதில் அவர் மகள் அமர்ந்திருந்தாள். அவளை எழச் சொல்லி விட்டு என்னை அதில் அமரச் சொல்லி வற்புறுத்தினார்.. நான் மறுத்து மறுத்துப் பார்த்து விட்டு கடைசியாக அமர்ந்து கொண்டேன். பிறகு அவர் தன் மகளிடம் சொன்னார்...

   “ நீ வேணா அங்கிள் மடில உட்கார்ந்துக்கடி..

  அவர் மகள் அநேகமாக பத்தாவதோ, பண்ணிரண்டாவதோ படிப்பவளாக இருக்க வேண்டும். அவ்வளவு அன்பிற்கு , அவ்வளவு நம்பிக்கைக்கு நான் பழக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் எனக்கு வியர்த்துக் கொட்டிவிட்டது. நல்லவேளையாக அம் மகள் அப்படி அமராததின் வழியே என் கண்ணீரைத் தடுத்தாட் கொண்டாள். ஆண்பால் – பெண்பால்- அன்பால் “ பற்றி அவரிடம் தான் – அவனிடம் தான் - கேட்க வேண்டும்.  அவன் “ அன்பால்- அன்பால்- அன்பால் “ என்று சொல்லக்கூடும். “ நல்லார் ஒருவர் உளரேல்.. “ என்பதன்றொ நம் கவி மரபின் பித்து. என்னடி என் பாட்டி... ! பித்தச்சி..! போகிற போக்கில் எப்படியொரு வரியை எழுதித் தொலைத்து விட்டாய் ! எவ்வளவு பெரிய மடமையிலிருந்து விளைந்தெழுந்த செழுங்கனி இவ்வரி.

   “காதல்” ....   இந்த ஒற்றைச் சொல்லை நமது எழுத்தாளர்கள், கவிஞர்கள், தத்துவாசிரியர்கள், ஆன்மீக யோகிகள், மருத்துவ வல்லுநர்கள் ... எனப் பலரும் வேறு வேறாக விதவிதமாக விளக்கி விட்டார்கள். ஆயினும் அது ஒற்றைச் சட்டகத்திற்குள் ஒழுங்காக ஒடுங்கி அமர மாட்டேன் என்கிறது. நாம் என்ன பெயரிட்டு அழைத்தாலும் அது விஷமமாக புன்னகைக்கிறது. விலக்க விலக்க அதன் திரைகள் விழுந்து கொண்டே இருக்கின்றன.

 “ வெறும் காமம்.. நாம் பயப்படும் படி வேறொன்றுமில்லை...என்பது காதலில் இருந்து தப்ப முயல்பவர்கள் கைக்கொள்ளும் எளிய வழிமுறை. இரயில் முன் பாய்ந்து இரண்டு துண்டாகப் போவதை வெறும் காமம் என்று எப்படி சுருக்குவது ? இச்சை தான் பிரதானமெனில்  கள்ளக்காதல் ஜோடிகள் ஏன் கட்டியணைத்த படியே விடுதி அறைகளில் விஷமருந்தி மடிகிறார்கள் ?

     நமது சங்கப்பாடல்களில் கண்ணீர் கொட்டிக் கிடக்கிறது..அதிகமும் தலைவியின் கண்ணீர். தலைவன் பொருட்வயின் பிரிந்து விடுகிறான். தலைவி அவன் போன திசை பார்த்து யுகயுகமாய் காத்திருக்கிறாள். கார் வருகிறது... காதலன் வர மாட்டேன் என்கிறான். நார் இல் மாலை “... அதாவது அன்பற்ற மாலை என்று மாலைப் பொழுதை தூற்றுகிறாள்.  பிரிவுடை இராத்திரி நீண்டு கொண்டே போக “ நெருப்பு வட்டமான நிலா “ உச்சியில் நின்று எரிக்கிறது. ஏக்கம் தாளாது அவள் மேனியில் பசலை ஏறுகிறது.  “ நிலம் புடை பெயரினும், நீர் திரிந்து பிறழினும்..நாடனொடு கொண்ட நட்பு மாறவே மாறாதென்று உறுதி காத்திருக்கிறாள்.

  அன்று தொடங்கிய “ ஊடல் “ இன்றும் நம் காதல்களை அழகாக்கிய படியே தொடர்கிறது. தன் காதலை ஏற்றுக்கொள்ள மன்றாடிய படி , காதலியின் வீதி வழியே பனங்கருக்குக் குதிரையில் “ மடலேறி“ வந்து ,  தன்னைத் தானே வதைத்துக் கொண்டான் தலைவன். இன்று அவன் “ அமிலப்புட்டிகளுடன் “ அலைவது தான் ஆகக் கொடூரமானது.


   ஒரு கவிஞனின் எல்லாப் பித்தலாட்டங்களையும் பொறுத்துக் கொண்டு  எப்போதும் அவனை ஏந்திப்பிடிக்க எல்லாப் பருவத்திலும் ஒருத்தி இருக்கிறாள். அவள் பொருட்டே அவன் காணி மும்மாரி காண்கிறது.


 கட்டுரைக்கு இடையே பயன்படுத்தப்பட்டுள்ள மூன்று பழந்தமிழ்ப் பாடல்கள்...


  1. “ நிலம் தொட்டுப் புகாஅர் ; வானம் ஏறார்;
    விலங்குஇரு முந்நீர் காலின் செல்லார்;
    நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
    குடிமுறை குடிமுறை தேரின்
    கெடுநரும் உளரோ ? நம் காதலோரே. ”
              ( முந்நீர்- கடல் )
                         ( வெள்ளி வீதியார்- குறுந்தொகை )
நம் காதலர் நிலத்தை தோண்டி அதனுள்ளே புகுந்து விட மாட்டார். வானத்தில் ஏறி விடவும் மாட்டார். பெருங்கடலை காலால் தாண்டியிருக்கவும் மாட்டார். நாடுகள் தோறும் அதிலுள்ள ஊர்கள் தோறும் அதிலுள்ள வீடுகள் தோறும் தேடிச்சலித்தால் அவர் சிக்காது போய் விடுவாரா என்ன ?

2.              கபிலர் - கலித்தொகை

          நீயும் தவறில்லை , நின்னை புறங்கடைப்
          போதர விட்ட நுமரும் தவறிலர்
          நிரைஅழி கொல்யானை நீர்க்கு விட்டாங்குப்
          “பறையறைந் தல்லது செல்லற்க” என்னா
          இறையே தவறுடையான்.
                    

   உன் மீதும் தவறில்லை. உன்னை வெளியே விட்ட உன் வீட்டார் மீதும் தவறில்லை. மதம் கொண்ட யானையை நீராட அனுப்பும் முன் அது வரும் செய்தியை பறையறைந்து எச்சரிப்பது போல,  நீ வரும் செய்தியை முன் கூட்டியே அறிவிக்காத மன்னனே தவறுடையவன்.

3.   
      கச்சுஇருக்கும் போது கரும்பானேன்: கைக்குழந்தை
  வச்சுஇருக்கும் போது மருந்தானேன்: நச்சுஇருக்கும்
  கண்ணார் கரும்பானார்: காணவும் நான் வேம்பானேன்
  அண்ணாமலை அரசுக்கு.
                 (  நச்சுஇருக்கும்கண்ணார்- பரத்தை )
                            
                    ( சுப்ரதீபக் கவிராயர் – தனிப்பாடல் திரட்டு ) 

அண்ணாமலை எனும் அரசனை நோக்கி அவன்தலைவி பாடியது போல் பாடப்பட்டது....
செழித்த மார்பை கச்சிட்டுக் கட்டிய இளம்பருவத்தில்  நான் கரும்பை போல் இனித்தேன். ஒரு குழந்தையை பெற்று என் உடற்கட்டு சற்றே தளர்ந்திருக்கும் தற்போதோ மருந்தைப் போல் கசக்கிறேன். நஞ்சை விழிகளில் தேக்கித் திரியும் பரத்தையர் தற்போது கரும்பாகிவிட்டார்கள். காணவும் நான் வேம்பாகி விட்டேன்.
                         
                       நன்றி : ஆனந்தவிகடன்


2 comments:

இரா.பூபாலன் said...

அட்டகாசமான கட்டுரை இசை. இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி. மனதை பல்வேறு நினைவுகளின் பக்கம் திசை திருப்புகிறது. குற்றவுணர்ச்சியைத் தூண்டியவாறு. இக்கட்டுரையின் நாயகன் நாமுமன்றோ

இப்னு ஹம்துன் said...

அருமையான கட்டுரை.நன்றி