அவள் ஜாதகத்தில் ஏதோ பிசகு பிறந்ததிலிருந்தே அவளுக்கு ஒன்றும் கிடைத்ததில்லை ஒழுகாத வீடு கிடைத்ததில்லை ஒழுங்கான கல்வி கிடைத்ததில்லை தகப்பனைக் காணவில்லை சரியான காலத்தில் ருதுவாகவில்லை சரியான காலத்தில் மணமாகவில்லை புருஷன் வீடு தங்குவதில்லை வயிற்றில் கருத் தங்குவதில்லை எனவே புத்தி ஒரு ஒழுங்கில் இல்லை எந்த அசதியாலும் அவளை தூங்க வைக்க இயலவில்லை எத்தனை அடி உயரத்திலிருந்து விழுகின்ற போதிலும் எந்தக் கோமாளியாலும் அவளைச் சிரிக்க வைக்கக் கூடவில்லை அவள் முறை வருகையில் வெறுங் கையை நீட்டுவதுதான் இவ்வுலகத்து வரிசைகளின் இயல்பு. ஆனால் அதிசயமாக அவளுக்கு ஒரு புது 500 ரூபாய் கிடைத்துவிட்டது “ சக்சஸ்....” என்றவள் கத்திய கத்திற்கு கடவுளின் இமைகளில் நீர் கோர்த்து விட்டது அவர் அதைச் சுண்டியெறிய, நேற்று வெளுத்துக் கட்டிய மழை அது...