Skip to main content

சொப்ன சஞ்சாரம்

                       
                                                 



  இணையம் கணினிக்குள் புகுந்து உலகை கோலோச்சியதற்கு முந்தைய பருவம் ... அவன் இளமை “ டும்” என்ற சத்தத்துடன் வெடித்துத் திறந்து சில வருடங்கள் ஆகியிருந்தன. காமத்தின் கடுவளிக்கு எதிர்நிற்க மாட்டாது தள்ளாடிக் கொண்டிருந்தான். அவன் தினவிற்கு கையளவிளல்ல, கவளங்களில் வேண்டியிருந்தது. ஆனாலும் அவன் பட்டினியால் வாடிக் கொண்டிருந்தான். அவனுக்குச் சொந்த வீடில்லை. நிரந்தர வேலையில்லை. எந்த வங்கியிலும் கணக்கில்லை. ஆனால் அவன் உடல் இதை எதையும் பொருட்படுத்தவில்லை.

      எதிர்காலம் குறித்த பயங்கரமான கற்பனைகளிலிருந்து அவனைத் தடுத்தாட்கொண்டனர் சிலர். அவர்கள் முந்தானையைச் சரிய விடும் வேளையில் அவனுக்குக் கவலைகள் என்று இந்த உலகத்தில் ஒன்றுமே இருக்கவில்லை.ஏனெனில் இப்படி ஒரு உலகமே அக்கணங்களில் இருக்கவில்லை. பரவசத்தின் புதிர்நிரம்பிய பழங்காலக் கோட்டைக்குள் நுழைவதைப் போலே, அவன் அந்த போஸ்டர்களுக்குள் நுழைந்து பார்த்தான்.அதன் ஒரு மூலையில் A  என்கிற எழுத்து வட்டமிட்டுக் காட்டப் பட்டிருந்தது .கருப்பு நிறத்தால் ஜொலிக்க முடியும் என்பதையே அப்போதுதான் அவன் முதன்முதலாக உணர்ந்தான்.
 
  ஏனோ அவன் முழுநிர்வாணத்தால் ஈர்க்கப் படவில்லை. அவன் இன்பப் புஸ்தகத்தின் முதல்  சுவிசேஷ வசனம்  “காமத்தின் அருருசி வெளிக்காட்டுவதிலில்லை ; ஒளித்துக் கொள்வதிலேயே உள்ளதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் ”  என்பதாக இருந்தது. எனவே ஆங்கிலப் படங்களால் அவனை அசைக்க இயலவில்லை. மாறாக ஒளித்துக் கொள்வதின் வழியே காமத்தின் தேனைத் ததும்பச் செய்யும் மலையாளப் படங்கள் அவன் தேர்வாக இருந்தன.
   
                அந்தத் தியேட்டர் முகமறியாத ஊரில்தான் இருந்தது. என்றாலும் அவமானமும், திகிலும் அவனை விட்டுவிடவில்லை. காட்சி துவங்கும் நேரத்தையொட்டி அந்தப் பகுதியே மர்மப் பிரதேசம் போல் மாறிவிடும். தியேட்டரை ஒட்டியிருக்கும் பேக்கரியில் திடீரென பெருந்திரள் கூடி விடும். எதிரில் இருக்கும் பெட்டிக்கடையில், நாட்டிற்கு என்ன ஆனதோ ? ஏது ஆனதோ? என்கிற பதைபதைப்போடு தினசரிகளைப் புரட்டிக் கொண்டிருந்தவர்கள் திடீரென நாட்டிலிருந்து மாயமாகி விடுவார்கள். அவன் முதலில் தியேட்டரை ஒட்டியிருக்கும் பேக்கரிக்குச் செல்வான்.  அங்கு கொஞ்ச நேரம் சமோசாவிற்குள் பதுங்கி இருந்துவிட்டு, டிக்கெட் குடுக்கத் துவங்கியவுடன் குனிந்தபடியே வேகமாக நடந்து இருளுக்குள் கரைந்துவிடுவான். தன் வம்சத்திலேயே யாருமே செய்திராத அருவருக்கத்தக்க காரியமல்லவா இது என்று ஆரம்பத்தில் வெதும்பி வந்தான். பிறகு, இவ்வாறான காட்சிகளின் வழியேதான் தன் வம்சமே தழைத்து வளர்ந்திருக்கிறது என்கிற சிந்தனை அவன் அச்சத்தைப் போக்கித் தெம்பூட்டின.எனினும் நீதியுணர்ச்சி அவனைத் தொடர்ந்து வதைக்கவே செய்தது.கற்பழிப்புக் காட்சிகளின் போது அதைத் தடுக்க ஓடிவரும் நாயகனை எல்லா ரசிகர்களும் திட்டித் தீர்த்தார்கள். முன் பெஞ்சிலிருந்து சத்தமாகவே கெட்ட வார்த்தைகளில் வசவு எழும். அப்போதெல்லாம் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல தன் சேருக்குள் பதுங்கிக் கொள்வான். மனமுவந்து அருளி மனமுவந்து ஏற்கும் காமத்திலேயே அவனால் திளைத்திருக்க முடிந்தது. ஒரு முறை பாலில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து ஒருவன் ஒருத்தியை சாமர்த்தியமாகக் கட்டிலில் வீழ்த்திய போது, அவனுக்குப் பதற்றம்  கூடிவிட்டது. அரங்கே பரவசத்தின் விளிம்பில் இருக்க, அவன் எழுந்து கழிப்பறைக்கு ஓடி விட்டான். ஓடியவன் அடுத்த வினாடியே அரங்கிற்குத் திரும்பி வந்தான். “ எல்லாமே சினிமாதான்.. எல்லாமே செட்டப்தான்...” என்று தன் நெஞ்சை ஆற்றுவித்து அமைதியாக்கினான். பிறகும் அவன் கற்பழிப்புகளிலிருந்து பெண்கள் தப்பித்துவிட வேண்டுமென்றே மனதார விரும்பினான். ஆயினும் தூக்கமாத்திரைகளால் பிழையொன்றுமில்லை என்கிற தெளிவிற்கு வந்துவிட்டான்.
 
       அப்படங்களில் ஆண்களும், பெண்களும் அவ்வளவு இணக்கமாக இருந்தனர். பெண்கள் தாலியைக் கண்டு அஞ்சவோ, செருப்பைக் காட்டி அச்சுறுத்தவோ இல்லை.  வேலைக்காரப் பெண்ணொருத்தி நள்ளிரவில் எழுந்து, புனை போல நடந்து வந்து, சின்ன முதலாளியின் அறைக்குள் நுழைந்து,  மஞ்சத்தில் ஏறி, அவர் மார்பின் மேல் சரிந்ததைக் கண்ட இராத்திரியில், அவன்  சும்மாணாச்சிக்கு அறைக்கதவைச் சாத்திவிட்டு தாள்பாள்களை பூட்டாமல் விட்டுவைத்தான். ஆனால் அவன் வீட்டில் மாத்திரமல்ல, அவன் வீதியிலேயே வேலைக்காரப் பெண் என்று யாருமில்லை.  ‘ துணிந்தவனுக்குத் துக்கமில்லை ’  என்பதையே அப்படங்கள் அவனுக்குத் தொடர்ந்து போதித்து வந்தன. ஆனாலும் அவனால் ஏனோ துணியவே முடியவில்லை. அச்சமும், கண்ணியமும் ஆளுக்கொரு காலைப் பற்றி அவனை நன்னெறியில் நடைபயிலச் செய்தன. எனவே அவன் பொம்மைகளின் உலகத்தில் வாழத் துவங்கினான். அது அவனது அத்தியவாசியங்களின் பட்டியலில் சேர்ந்து கொண்டது. உண்டு களிக்க ப்ராப்தமில்லை என்பது உறுதியான பின், கண்டுகளிப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை அவனுக்கு. மண்டைக்குள் என்ன இருக்கிறதென்று யாரும் எட்டிப் பார்க்கப் போவதில்லை. அப்படியே பார்த்தாலும்எதுவும் தெரியப் போவதில்லை.

  வீடு அவனிடம் சில கேள்விகளை முன்வைத்தது. அச்சமுட்டும் குழப்பமான கேள்விகள் அவை.  அவனிடம் ஒரு பதிலும் இல்லை. அவை எப்போதாவதுதான் கேட்கப்பட்டன. ஆனால் அவன் எப்போதும் அதையே எதிர்பார்த்தபடி இருந்ததால், திகிலூட்டும் ஒன்றாக மாறிப்போனது வீடு. எனவே தியேட்டர் சொர்க்கபரி ஆகிவிட்டது. இரண்டு உடல்கள் தொட்டுத் துவங்கும் புள்ளி ஏற்கனவே தெரிந்து விடுவதில் கிளுகிளுப்பு பன்மடங்கு குறைவுதானென்றாலும், வீடடையும் நேரத்தை நீட்டிக்க வேண்டி ஒரே படத்தையே கூட  அடுத்தடுத்த நாட்களில் கண்டுவந்தான்.

 சமயங்களில் அடுத்ததடுத்து அதிரடி ஆக்க்ஷன் படங்களாக திரையிடுவார்கள். தியேட்டர் ஓனர் திடீரென உள்ளம் திருந்திவிட்டாரோ என்கிற பயம் அவனை பீடித்துக் கொள்ளும். வாழ்வே  மங்கலடித்து விடும். பால் கசந்து, படுக்கை நொந்து , நாலு வையித்தனும் இனி நம்புவதற்கில்லையென்று கை விட்ட பின், பாலத்து ஜோசியனையாவது பார்த்து வரலாமா என்றவன் வீட்டார் யோசித்துக் கொண்டிருக்கையில்  ஒரு வெள்ளிக்கிழமை வரும்... அவ்வளவு நம்பிக்கையோடு, பேருந்து ஜன்னலின் வழியே பாதி உடலை வெளியே விட்டு வழக்கமாக சுவரொட்டி மாற்றும் அரசு மருத்துவமனை காம்பவுண்டு சுவரை பார்ப்பான். அவனது அபிமான நாயகி ரேஷ்மா டைட்டான டீ –சர்ட்டில் காமத்தின் காளியென சிரித்துக் கொண்டிருப்பாள்.   அந்த நொடியே அவன் புத்தம் புதிதாகிவிடுவான். திடீரென கோவில் கோபுரத்தை காண நேர்ந்துவிட்ட பக்தன் அனிச்சையாக கன்னத்தில் போட்டுக் கொள்ளும் பரவசத்தால் ஆட்கொள்ளப் படுவான். “ இனி எல்லாம் சுகமே” என்று தன்  நெஞ்சிற்குச் சொல்லிக் கொள்வான்.

  இன்று காமம் கைக்குள் வந்துவிட்டது. கைக்குள் வந்துவிட்டதாலேயே அது தன் எல்லா மதுரங்களையும் இழந்து  சப்பென்றாகி விட்டது. ஒரு பேருந்துப் பயணத்தில் ஜன்னலோரத்து இளைஞனொருவன் தன் ஆண்ட்ராய்டின் வழியே சன்னிலியோனில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான் அவன். தேடாமல் கிடைப்பது எப்படிப் புதையலாகும்? என்றெண்ணிச் சிரித்துக் கொண்டான்.

      நன்றி : காலச்சுவடு- ஜூலை: 2018

















Comments

Unknown said…
நண்பா,உன் கட்டுரை நடையில் நீ வர வர தமிழ் புலவன் ஆகிக் கொண்டிருக்கிறாய்.

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம