அது அழுக்கும் காற்றோட்டமற்றதுமான வகுப்பறை.அதன் பின்னால் மனோகரமான பள்ளத்தாக்குகள் இல்லை. அதை ஒட்டி ஓடைகள் சலசலப்பதில்லை. ஆனாலும் அதனுள்ளிருந்து ஒரு கிறங்கடிக்கும் நறுமணம் கசிந்து வரும். அது இதயத்தின் தசைநார்களை இன்பத்தின் வலியால் துடிதுடிக்கச் செய்யும்.வினோதம் என்னவெனில், இப்படி ஒரு அறை இருப்பதே முக்கால்வாசி மனித குலத்திற்குத் தெரியாது. சிலருக்கு தெரிந்திருந்த போதிலும் அவர்களது நாசிகளுக்கும் அந்த நறுமணத்திற்குமிடையே ஊடுருவமுடியாத தடை இருந்தது. என்ன வண்ணம் ? என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாத, பொத்தானுக்குப் பதிலாக பின்னூசி குத்தப்பட்ட சட்டையும், பொத்தல்களால் “ தபால் பெட்டி “ என்று கேலி செய்யப்பட்ட டவுசரும் அணிந்திருந்த எங்களால் அந்த நறுமணத்தை உணர முடிந்தது. நாங்கள் பரவசம் கொப்பளிக்க வகுப்பறைக்குள் நுழைய முற்பட்டோம். அப்போது கருணையற்ற கண்களை தடித்த கண்ணாடியால் மூடியிருந்த , கடுத்த முகமும் , கொண்டைப் பிரம்பும் கொண்ட ஒ...