Skip to main content

அம்மையுடன் ஓர் உரையாடல்

             
           



ஒளிப்புள்ளிகள் ஒன்றிணைந்து
         அம்மை எழுந்தருளல்


"மகனே ! என்னதான் உன் வேதனை?"

"தனியன்.."

"பொய்"

"நிஜமாகத்தான்.."

" உன்னோடு யாருமே இல்லையா?"

 " இருக்கிறார்கள்"

பிறகு?

" இருப்பதுபோல் இருக்கிறார்கள்"

 "உறுதியாக இருக்க வை.."

"போய்விடுவார்கள்.."

" கலங்காதிரு மகனே! "

" இதற்கு இது பதிலில்லை."

 "வண்டிச்சக்கரம்.. மன்னிக்க ..   காலச்சக்கரம்...  அது சுழலத்தான் செய்யும்"

" பரவாயில்லை.. வண்டிச்சக்கரமே புதிதாக உள்ளது"

" நன்றி !"

"அது ஏன் சுற்றிக் கொண்டேயிருக்கிறது?"

"சுழன்றால்தானே அது சக்கரம்?"

"நன்றாகச் சுழலட்டும்....ஆனால் அது ஏன் எப்போதும் என் வீட்டு முன்பாகவே சுற்றுகிறது?"

" மகனே ! அது மொத்த உலகிற்கும்தான் சுழல்கிறது... அப்படியே உன் வீட்டுப் பக்கமும் வருகிறது"

"இருக்கலாம்.  ஆனால் என் வாயிலில் மட்டும் கொஞ்சம் வேகமாகச் சுற்றுகிறது"

" அது உன் மாயை..'

" கடைசி ஆயுதத்தை இவ்வளவு சீக்கிரமாகவே எறிந்து விட்டாயே?"

"மாயையை உண்மையென்றும் சொல்லலாம்.."

"எனில், உண்மையாகவே போய் விடுவார்கள்... அப்படித்தானே?"

"என் மடிக்கு வா!"

" மாட்டேன்.. போர் அடிக்கிறது"

"ஒவ்வொரு முறையும் இந்த ஆறுதலை புதிது போலவே நிகழ்த்த  எனக்கும்தான் போர் அடிக்கிறது.."

அப்படியெனில்,  உறுதியாகப் போய் விடுவார்கள்.. இல்லையா?

"மகனே ! தனிமை நல்லது!"

" ஆம்"

" பிறகென்ன? "

" நல்லதெல்லாம் நல்லதா என்ன?"


       அம்மை புகையாகி மறைதல்



















Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...