சாலையின் நடுவே நின்று ஓர் ஆட்டோக்காரர் போக்குவரத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார் தூரத்தில் இருந்து பார்க்கையில் ஏதோ விபத்து போல் தெரிந்தது கிட்ட நெருங்க நெருங்க சாக்கடை உடைசல் என்று சந்தேகித்தேன் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது இரண்டு கல்வி நிறுவனங்களும் ஒரு வங்கியும் நிறுத்தி வைக்கபட்டிருந்தன. கூடவே சில வீடுகளும் எனக்கும் கைகாட்டி ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை நிறுத்தி வைத்தார். அரியவகை பச்சோந்தி ஒன்று தேக்கித் தேக்கி சாலையைக் கடந்து கொண்டிருந்தது அது சென்று மறைந்ததும் "யாவும் இயங்குக!" என்று அறிவித்துவிட்டு ஆட்டோவில் ஏறிப்பறந்தது ஓர் அரிய உயிர். |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments