Skip to main content

பழமுதிர்சோலையார்


அன்று முழுக்க கடும் மனச்சோர்வில் இருந்தேன். கட்டிலை விட்டு எழக்கூட விரும்பாத  மனச்சோர்வு. வாழ்வு அப்படி அடித்து மூலையில் கிடத்துவது அவ்வப்பொழுது நடப்பதுதான். அடுத்த நாள் அதையும் இதையும் பற்றி கொண்டு மெல்ல எழுந்து நின்றேன். கட்டாயம் போயாக வேண்டிய உறவினரின் சுபகாரியம் ஒன்று இருந்தது. முதல் நாளுக்கும் அடுத்த நாளிற்கும் வாழ்வில் எதுவுமே மாறியிருக்கவில்லை  ஆனால் திடீரென எங்கிருந்தோ ஒரு பாட்டு வந்து நாவில் அமர்ந்தது. ...

"தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்னில் இதைவிட சொர்க்கம் எங்கே

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனமொரு  மகிழ்ச்சியில் திளைத்திட.." 

அந்த அழுகிய நான் எங்கு ஓடி ஒளிந்ததோ   தெரியவில்லை.  பாட்டில் ஏறிப்  பறந்து கொண்டிருந்தேன். 

திடீரென ஒரு மொட்டை உருவம் என் தோள் தொட்டுத் திருப்பி  " நேற்று நீ எப்படி இருந்தாய்... நினைவிருக்கிறதா..?"  என்று சிரித்துக் கொண்டே  கேட்பது போல ஒரு பிரமை  தோன்றி மறைந்தது.  நடு ரோட்டில் கண்ணீர் தாரைகள் வழிந்து இறங்கி மழை நீரில் விழுந்தன். அவசர அவசரமாக ஹெல்மெட் கண்ணாடியை இறக்கிவிட்டேன். மறுபடியும் அந்தப் பாடலை பாட முயன்றேன். வெறும் அழகையாக ஒலித்தது. களிப்பின் கண்ணீர்! 

சிங்காநல்லூர் சிக்னலை பழமுதிர்சோலை ஆக்க உன்னைத் தவிர வேறு ஒரு தேவனாலும் ஆகாது அய்யனே!

Comments

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

நடக்கக் கூடாதவை நடப்பதில்லை

பெருந்திரள் கூட்டத்தில் தன் பிள்ளையின்  சுண்டுவிரலை நைசாகக் கழற்றிவிட்டுவிட்டு விறுவிறு  வென நடந்து மறைந்துவிடும் அன்னையர் சிலர் உண்டு அவர்களை நாம் அறிவோம் அந்தக் குழந்தையின் விழிகள் பிதுங்கி வாய் கோணுவதை ஒளிந்திருந்து நோக்கும் அன்னை ஒருத்தியும்  உண்டு    சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்! நம்ப விரும்ப மாட்டீர்!

கண் கண்ட தெய்வம்

  “பங்கமர் குயில்”  என்று   சக்தியைப் புகழ்கிறான் ஒரு புலவன் வாசிக்க வாசிக்கவே வாசலில் கேட்டது  ஒரு கூவல் உச்சிக் கிளையில் அமர்ந்துளதா? இலைப்புதரில் மறைந்துளதா? மண்ணில் அமுது செய் மாயம் அது எங்குளது? இனிது தவிர  இன்னொன்றறியாய் ! எங்குளாய் நீ? பங்கமர் குயிலே …! பங்கமர் குயிலே …! இம்மரத்திலிருந்து அம்மரத்திற்கு  மாறி அமர்கையில் கண்டேன் உமையை கண் கண்ட தெய்வத்தை.