வீணாகி வழியும் தெருக்குழாய் நீரை பொறுப்பேற்று அடைப்பதற்காக... பள்ளி வாகனத்திலிருந்து கையசைக்கும் சின்னஞ் சிறு கரங்கள் ஏமாந்து போகாதிருப்பதற்காக... மலர்கள் சொல்லும் காலை வணக்கத்தை செவி மடுத்துப் புன்னகைப்பதற்காக... நீண்ட க்யூவில் கட்டக் கடைசி ஆளாய் சாந்தமாக நிற்பதற்காக... துப்புரவு வண்டியின் மணியோசையிலிருந்து ஒரு புதிய பாடலைத் துவக்குவதற்காக... ஒவ்வொரு மகளையும் என் மகள் பெயர் சொல்லி அழைப்பதற்காக... நறுமணத் தைலத்தால் என்னை அலங்கரிக்கும் பகட்டிலிருந்து விடுபட்டு நானே ஒரு நறுமணப் புட்டியாகி மணமூட்டுவதற்காகத்தான் அன்பே! நான் உன்னை என் காதலி என்று கற்பனை செய்து கொள்கிறேன். நான் உன்னை என் காதலி என்று கற்பனை செய்து கொள்ளும் காலங்களில் அன்பே! இந்த பூமியின் இதயத்துள் கண்ணி வெடிகளைப் புதைத்து வைக்கும் திட்டத்திற்கு சற்றே ஓய்வளிக்கிறேன். |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments