நடுச்சாமத்தில் கொஞ்சம் துணிகளோடு வீட்டை விட்டு வெளியேறிய அன்று மேலே வானம் இருந்தது ஊசிக் கப்பலும் புறாக்களின் குட்டிகரணமும் பார்த்த அந்த வானம் அன்று அது வேறு வேடிக்கைகள் விடைபெற்ற பிறகு முதன் முதலாக எப்போது அண்ணாந்து பார்த்தேன் என்பது நினைவில்லை ஆனால் அப்போது அழுது கொண்டிருந்தேன் அது நினைவில் இருக்கிறது. சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஒரு உயிரை சட்டெனச் சரித்து விட்டு எழுந்து போகிறது இன்னொரு உயிர் கீழே விழுவது வானத்தில் விழுகிறது 'புற்று ' உறுதியாகிவிட்ட நாளில் மருத்துவமனையிலிருந்து ஏன் வானிற்கு நடந்து போகிறாள் ஒருத்தி? அந்தி என்பது வண்ணக் கலவைகளின் கும்மாளம் என்று நம்பும் ஒருவன் தன்னை ஓவியன் என்றும் நம்பிக் கொள்கிறான் அம்மாவை எரித்துவிட்டு வந்த நாளில் தெரிந்ததொரு வானம் வானம் என்றால் என்னவென்று சொல்லும் ஒரு வானம் |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments