Skip to main content

Posts

Showing posts from July, 2024

இசை கவிதைகள் - அகழ்

ந ல்லதங்கா கழிவறைக் கதவை இழுத்துச் சாத்திக் கொள்வது வசதியானது தண்ணீர் குழாயை திறந்து விடுவது மேலும் வசதியானது ஆனால் வெட்ட வெளியின் மத்தியில் அமர்ந்திருக்கிறாள் ஒருத்தி பெண்களின் கண்ணீர் என்பது ஒரு தனியூத்து இங்கு நான் காண்பது அதன் சில துளிகள் ஒருத்தி அழத்துவங்கியவுடன் அபலை ஆகிவிடுகிறாள் அங்கு அப்போதே முளைத்து விடுகிறது ஒரு கிணறு “ தொப்” சத்தமே அப்பாலே போ! கா தலரே… காய்பவரே… முறுக்கிப் பிழியப்பட்டு பலகாரக் கடையில் அடுக்கப்பட்டுள்ள ஜிலேபித் துண்டு போல் ஆகிவிட்டேன் திடீரென்று யாரும் எடுத்து விண்டு விழுங்கலாம் எந்தத் தொண்டையிலும் நழுவி விழுவேன் குளு குளுவென ம்… சீக்கிரம்… இந்தச் சலுகை எத்தனை மணித்துளிகளுக்கென்று எனக்கே தெரியாது ஆகட்டும்.. சீக்கிரம்.. சீக்கிரம்… ப ணி செய்து கிடத்தல் துப்புரவுப் பணியாளர்கள் பணி முடித்து ஓய்வில் இருக்கிறார்கள் ஒருவர் கடைவாய் ஒழுக வெற்றிலை மென்று கொண்டிருக்கிறார் ஒருவர் போனில் சத்தமாகச் சிரித்த படியிருக்கிறார் அணைத்துக் கொள்வதற்குப் பதிலாக ஒருவரையொருவர் துரத்தி விளையாடுகிறார்கள் இளம் பெண்கள் இதை ஓய்வென்று நம்பவில்லை நான் இப்போது உலகின் ஏதோ ஒரு மூலை துப்புரவாகி

களிநெல்லிக்கனி- ஏற்புரை

நவீனக் கவிதை வாசகர்கள் பலருக்கும் நமது பழந்தமிழ் கவிதைகள் குறித்த வாசிப்பு குறைவுதான். அதற்கு ‘பழையது பயனற்றது ‘என்கிற மேலோட்டமான எண்ணம் முதன்மையான காரணம். நவீன மனிதனின் சிக்கல்களுக்கும் பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் தொடர்பில்லை என்று நினைக்கிறோம். புதிய மனிதனின் புதிய சிக்கல்கள் என்று ஒவ்வொரு காலத்திலும் சில இருந்து வந்துள்ளன. அவை அந்தந்தக் காலத்து கவிதைகளில் பிரதிபலித்தும் வந்துள்ளன. இந்த ஆண்ட்ராய்டு காலத்து மனிதனின் கவிதைகளில் வீடியோ காலும், வாய்ஸ் மேசேஜும் வர வேண்டும். கட்டாயம் வந்தாக வேண்டும். ஒரு புரட்சி போல அல்ல, இயல்பாகவே அவை வந்தாக வேண்டுமல்லவா? புதிய மனிதனுக்கு சில புதிய சிக்கல்கள் இருப்பது போலவே, ஒரு மனிதனுக்கு என்றென்றைக்குமான சிக்கல்கள் என்று சில உண்டு. பசி, காமம், அச்சம், பொறாமை இப்படி சில. நெருப்பைக் கண்டு பயந்து, வியந்து வணக்கத் தொடங்கிய மனிதன் இன்றுவரை எத்தனையோ விதவிதமான கடவுள்களை வணங்கிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு மீறிய ஒன்றுக்கு அஞ்சுபனாகவும், அதை வணங்கிப் பணிபவனாகவும், அதற்கு நன்றி சொல்பவனாகவும் அவன் எப்போதும் இருந்து வந்துள்ளான். நமது பழந்தமிழ்க் கவிதைகளில் நாம் கா

இசையின்‌ "உடைந்து எழும்‌ நறுமணம்‌" - சாம்சன்

சங்கப்பாடல்களின்‌ வயது இரண்டாயிரத்து சொச்சம்‌. அபூர்வ சொற்சித்திரங்களோடும்‌ ஆழ்ந்த படிமங்களோடும்‌ வார்க்கப்பட்ட விழுமிய ஆபரணம்‌. கவித்துவத்தால்‌ செதுக்கப்பட்ட அந்த தேரை வடம்‌ பிடித்து நவீனகாலம்‌ வரை கொண்டு வந்து சேர்த்திருப்பது ஒரு வகையில்‌ நமக்கு வாய்த்த பேறு. மரபை உடைத்து நா.பிச்சமூர்த்தியின்‌ 'பெட்டிக்கடை நாராயணன்‌’ கவிதை நவீனகவிதைக்கு அச்சாரமானது. எழுபதுகளில்‌ அதன்‌ உக்கிரம்‌ வலுப்பெற்றது. நவீன கவிதைகள்‌ வெவ்வேறு பரிமாணங்களில்‌ கச்சிதமான உத்திகளோடு புதிய தரிசனங்களை இன்று அசலாக பெற்றிருக்கின்றன. அழகியல்‌ மற்றும்‌ எதிர்‌ அழகியல்‌ தன்மைகளோடு சுண்டக்காய்ச்சிய கவிதைகளை எழுதிவரும்‌ கவிகளுள்‌ கவிஞர்‌ இசை முக்கியமானவர்‌. கடந்தகாலத்தில்‌ பகடி ஆட்டத்தை நிகழ்த்தியவர்‌ இந்த முறை அதிலிருந்து சற்று விலகி தன்னை குவியாடியாக்கி அக தரிசனங்களில்‌ மெளனித்துக்‌ கிடக்கிறார்‌. காலந்தோரும்‌ தன்‌ ஆத்மாவை கூர்‌ செய்து கொண்டே இருப்பவன்தான்‌ உன்னதக்‌ கலைஞனாக உருமாற்றமும்‌ கொள்கிறான்‌. நவீன கவிதைகள்‌ படிமம்‌, உவமை மற்றும்‌ உருவகத்தால்‌ திளைத்தவை. இசையின்‌ கவிதைகள்‌ காட்சி படிமத்தால்‌ விரிபவை. பெரும்பான்மைய

நெஞ்சின் மீது போனை அணைத்துக் கொண்டு

  நீ விட்டுவிட்டுச் சென்ற பிறகு என்னோடே தங்கிவிட்டன  உன் குரல்கள் எல்லாவற்றையும் அப்படி ஒருசேர  மூட்டை  கட்டிவிட முடியாது நெஞ்சின் மீது போனை அணைத்துக் கொண்டு உன் குரல்களை ஒலிக்க விடுகிறேன் அவை உன்னை விடவும்  அதிகமான நீ  நீ இல்லையென்றான பிறகு உன் பேச்சு  பாதி பாட்டாகி விட்டது நினைவென்றாலே அது கண்ணீர் தானே? இந்த இரவில் கன்னங்களில் வழிந்திறங்கும் கண்ணீர் மீதிப் பேச்சையும்  கரைத்துக் கொண்டு ஓடுகிறது இப்போது நீ ஒரு முழுப்பாடல் இந்த உலகில்  சங்கீதங்கள்  இப்படியா, இப்படியா உருவாகின்றன அன்பே