Skip to main content

Posts

Showing posts from August, 2024

பளபளப்பின் கீச்சு

“இ ங்க வந்து பாருங்க,  கிளி  கொஞ்சுது” என்றாள் மனைவி. நான்  வீட்டுக்கு வெளியே சென்று வானத்தைப் பார்தேன். மரங்களைப் பார்த்தேன். அவள் வீட்டுக்குள் அழைத்து வந்து பாத்ரூமைக் காட்டினாள் குறும்புக் குழந்தையின் குட்டிக்  காதென  மொழியைத் திருகி விட்டுவிட்டு அடுத்த வேலைக்கு நகரும் இவரா இவரா  இவரா என் மனைவி?!

இன்னொரு பிஸ்கட் எடுத்துக் கொள்

  அ லுவலக நுழைவாயிலில் நின்று கொண்டு தன் குழந்தைக்கு “ bye” சொல்கிறாள் அம்மா. அம்மா மட்டுமே சொல்லும் அந்த “ bye” அதைத்தான் அவள் சொன்னாள் அவள் அலுவலகத்துள் மறைந்து விட்டாள். குழந்தை அப்பாவோடு கிளம்பி விட்டது வாயிலில்  தனியே நின்று கொண்டிருந்த “ bye” -  யிடம் “என் வீட்டுக்கு வருகிறாயா? ” என்று கேட்டேன். இப்போது  நாங்கள் தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறோம்.

இன்னொருவர்

  அ வர்தான் அந்த இன்னொருவர் அவரை  எனக்கு முன் பின் தெரியாது ஆனால் இன்னொருவரென்றால் அவர் மகிழ்ச்சியானவர் அது தெரியும். நீ அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டுமா? நீ தனவானாக இருக்க வேண்டுமா? நீ பரிபூரணனாக இருக்க வேண்டுமா? வெற்றி! வெற்றி!  என்று ஓயாது கூவும்  ஒருவனாக  நீ  இருக்க வேண்டுமா? எல்லாம் எளிது ஒருவனின் எண்ணத்தில் இன்னொருவனாக இரு!

CCTV யின் தலையில் ஒரு CCTV

“நீ ங்கள் CCTV யால் கண்காணிக்கப்படுகிறீர்கள் “ இந்த வாசகம்  இப்போது  பரவலாகக் காணக்கிடைக்கிறது. பெரு நகர வீதி முதல் சிறு வணிகக் கூடம் வரை இதற்கென்று ஒரு இடம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. CCTV-  க்கு முன்பே கண்காணிப்பு பிறந்து விட்டது கண்காணிப்பே! நீ இந்த பூமியில் பிறந்த  இரண்டாவது மனிதனின் உடன் பிறப்பு தானே? அறிவியல் ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர்ந்து  இங்கு வந்து சேர இவ்வளவு கோடி ஆண்டுகள் ஆகி விட்டன. போலீஷ் என்கிற  CCTV முதலாளி என்கிற  CCTV நீதியிலிருந்து மனிதன் தப்பிவிட  முடியுமா என்ன? எல்லாவற்றையும் பார்த்துக்  கொண்டிருக்கிறார் கடவுள் CCTV - யைப் போல  ஒருவனுக்கு  இன்னொருவன் CCTV அவனை அவனே உற்று நோக்கும் தருணத்தில் அங்கு தோன்றுகிறது ஒரு  CCTV பேரன்பு எனில் அது பெரிய  CCTV யா என்ன? வீடு வீதி வரை வந்து  வழியனுப்பி வைத்துவிடுவதாக   எண்ணிக் கொண்டிருப்பது நமது கற்பிதங்களில் ஒன்று நமது வீடுகளின் உச்சியில்  கழுத்தை நீட்டிக் கொண்டு ஒரு பலஹீனமான உபகரணம் ஈசனின் தலையில் உடைந்த பிறை போல.