நீ  ஒன்றை விரும்பினாய் மனிதன் மின்னலை விரும்புவதைப் போல நீ ஒன்றை ஆழமாக மோகித்து விட்டாய் அதுவோ  தூர தூரத்தில் உச்சியின் உச்சியில் வீற்றிருக்கிறது. அம்மா நிலவைக் காட்டி சோறூட்டுவதில் ஒரு போதனை உள்ளது துயரம் என்னவெனில் அதை நாம் கற்பதில்லை ஆசை அழிக்க முடியாத ஒரு மலர் அது பிறக்கிறது அழிவதென்னவோ நீ  அழிகையில்தான். நீ  ஒன்றில் பித்தாகிவிடுகிறாய் அதுவோ  ஆகப் பெரியது ஆகவே நீ அதற்குப் பதிலாக அது போல் ஒன்றை  காதலிக்கத் துவங்குகிறாய் உன் பெரியது சிறிதளவே உள்ள சிறியது நீ அதனுடன்  சிரிக்கப் பழகுகிறாய் இளையராஜவைத்தான் காதலிக்கிறோம்  என்பதறியாமல் ராஜாவைப் போல் பாடும் பையன்களை சிநேகித்த அக்காக்கள் கூடவே ரஹ்மானைக் காதலிப்பதற்குப்  பதிலாக சடை வளர்த்த பையன் பால் மையல் பூத்து மணமுடித்த தோழியர்கள் யாவரும்  நலம்தானே இப்போது?