Skip to main content

விசில் ஒலிக்கும் சமோசா



பொறிஞர் ஆனந்துக்கு
இன்றைய தேநீர் இடைவேளையின் போது
ஒரு சமோசா சாப்பிடவேண்டும் என்று தோன்றியது.
தாளித்த வெங்காயத்தின்
பொரித்த வாடைக்கு நாசி கிரங்கியது.
கண்களை மூடி ஒரு முறை முகர்ந்ததில்
அவர் தன் 22 வருடங்களை
உள்ளிளுத்துக் கொண்டார்.
முக்கோண வடிவ சமோசா
நீள் சதுர வெண் திரையானது.
பொறிஞர், இப்போது
லட்சுமி டாக்கீஸின் மணல் குட்டின் மேல்
அமர்ந்திருக்கும் சிறு பொடியன்.
தங்க மீனை எடுப்பதற்காக
தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறார் கமலஹாசன்.
நினைத்ததை முடித்தாக வேண்டும் தலைவர்.
மூதாட்டிகள் கடவுளைப் பிரார்த்திக்கிறார்கள்.
ஊஞ்சலைப் போல ஆடிக்கொண்டிருக்கிறது கயிறு.
சற்றைக் கெல்லாம்
சடசடவென எழுந்த கரவொலிகளுக்கிடையே
அரங்கைக் கிழிக்கிறது
ஆனந்தின் விசில் சத்தம்.

Comments

paalya ninaivugal eppothume nenjai negila vaippavai..:-))) (sorry for typing in english)
நிகழிலிருந்து தாவித் திரும்புதல் அற்புதமல்லவா? நீங்களுந்தான் அன்றைக்குத் தாவியிருந்தீர்கள்... என்ன சில வார்த்தைகளைத் திரும்பத் திரும்பக் கேட்கவேண்டியிருந்தது:)
எத்தகைய எளிய சொற்களில் அற்புதங்கள் செய்கிறீர்கள் சத்ய மூர்த்தி
இந்தக் கவிதையும் அழகு
வழக்கம் போலத்தான் .......சூப்பர்.

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

பேய் பங்களா

வ சந்த மாளிகை என்பது காதலன் காதலிக்கோ காதலி காதலனுக்கோ கட்டி எழுப்பும் கட்டிடமல்ல காதல்,  மண்ணில் தோன்றுவதில்லை அதன் பிறப்பே வசந்தமாளிகையில்தான் அல்லது காதல் பிறந்த மறுகணமே மாளிகை  வான் அளாவ வளர்ந்துவிடுகிறது எழுப்பப்பட்ட மாளிகைகளில் எந்த மாளிகையும் தரைமட்டமாவதில்லை பூச்சுக்கள் உதிர்கின்றன ஆங்காங்கே புற்றுகள் வளர்கின்றன கோட்டான்கள் அலறுகின்றன எல்லா  இடிபாடுகளுக்கிடையேயும் நினைவுறுப் பேய்கள் அங்குமிங்குமாய் தாவிக் கொண்டிருக்கின்றன வாரத்தில்  ஒரு முறையேனும் நான் என் மாளிகை முன் அமர்ந்து நீண்ட சிகரெட்டைப் புகைப்பேன் ஒரு தீபாராதனை போல அந்தப் பேய்கள் வாழ்க என!

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.