Skip to main content
எழுத வந்த கதை





எழுத வந்த கதையை எழுதும் படி தமிழ் கேட்டிருந்தார். இப்படி எழுதும் அளவுக்கு நான் வலையில் பெரிதாக எதையும் எழுதவில்லை. எழுத வந்த கதை, கடந்து வந்த காட்டாறு என்றெல்லாம் உண்மையில் என்னிடம் எதுவும் இல்லை.தழிழ் எழுதி இருப்பது போல வலையில் எழுத வந்ததற்க்கான வலுவான காரணம் எதுவும் என்னிடம் இல்லை.அதனால் உண்மை எதுவென்று யோசித்து எழுத முயன்றிருக்கிறேன்.


முதல் சந்திப்பிலேயே உங்கள் கவிதைகள் சிலதை மனப்பாடமாக சொல்லி உங்களை
ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வாசகன் ஒருவன் உங்களுக்கு கிடைத்திருக்கிறானா? உங்கள் பெயர் சபைகளில் உச்சரிக்கப்படும் போது தன்னையும் சுற்றத்தையும் மறந்து கைதட்டிக் குதூகலித்து, சிறு பிள்ளை கோலம் கொள்ளும் நண்பன் ஒருவன் உங்களுக்கு இருக்கிறானா? எனக்கு அப்படி ஒருவன் உண்டு. அவன் நரன். அவன் தான் சில மாதங்களுக்கு முன் “உன் கவிதைகளை ப்ளாக் கில் போடலாமா” என்று கேட்டான். நான் “அப்படீனா என்ன” என்று கேட்டேன்,

பொதுவாக நவீன உலகின் மூளைச்சாவரியில் கலந்து கொள்ளாமல் ஓரமாக ஒதுங்கி நடப்பதே என் சுபாவம். அறிவியல் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற புதிய வாய்ப்புகளை அவசர அவசரமாக கற்றுத்தேர்வதில் எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை.மனம் வேறு விசயங்களில் லயித்துக்கிடக்கிறது என்று சொன்னால் அது பொய்யில்லை. சோம்பேறித்தனம் என்று சொன்னால் அதுவும் பொய்யில்லை. இன்னும் எனக்கு ஒழுங்காக மெயில் அனுப்ப தெரியாது என்பதே உண்மை.ஆக நரன் தான் எனது
சில கவிதைகளை முதலில் post செய்தான்.அதை நானே ஒரு முறை தான் பார்த்தேன்.நம் கவிதைளை அச்சில் பார்க்கும் சந்தோசம், திரையில் அதுவும் வண்ணத்தில் பர்ர்ப்பதில் இன்னும் கூடுதலாகத் தான் இருந்தது. ஒரு தமிழ் இளைஞனுக்கு திரை மேல் இருக்கும் மோகம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஆனால் அதை தொடர முடியவில்லை. நரனின் சந்தோசம் என்ற அளவில் அது நின்று போனது. சில காலங்களுக்கு பிறகு
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து வணிகவரித் துறை online செய்யப்பட்டது.எனவே நண்பன் இளங்கோ தன் கணினியில் தவிர்க்க இயலாமல் இணைய இணைப்பை சேர்க்க வேண்டி வந்தது. அவன் அலுவலகம் தான் தற்போதைய கோவை இலக்கிய நண்பர்களின்
குவி மையமாக இருந்து வருகிறது. இணைய இணைப்பு இருக்கிறத,வாரத்தின் 2, 3 நாட்களை அங்கே தான் செலவழிக்கிறோம் என்கிற போது மீண்டும் எழுத துவங்கினேன். கடைசியாக நான் இட்டிருக்கிற ” கண் கொள்ளா காட்சி “ என்கிற சிறிய கவிதையை தவிர மற்ற எல்லா படைப்புகளையும் இள்ங்கோ தான் type செய்து இடுகை இட்டது. இந்த நீளமான கட்டுரையை, கோடான கோடி ரசிகப்பெருமக்களின் வேண்டுகோளை தவிர்க்க இயலாமல் எவ்வளவு சிரமப்பட்டு எழுதுகிறேன் என்று இதைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்.முதலில் விளையாட்டாகத் தான் சில கவிதைகளை இடுகை இட்டேன்.ஆனால் இணையம் வழி வந்து சேர்ந்த நண்பர்களின் அன்பும் அக்க்கறையும் உருப்படியாக ஏதாவது செய்ய நிர்ப்பந்திக்கிக்கிறது. கவிதைகள் குறித்த கட்டுரைகள் இரண்டை இடுகை இட்டது நான் வலை எழுத வந்த பயனால் நிகழ்ந்தது என்று சொல்லலாம். இல்லையென்றால் அந்தக் காகிதங்கள் இன்னேரம் மக்கி அழிந்திருக்கும். மற்றபடி என் விருப்பத்துக் குரிய சிவாஜிகணேசன்,shakeela,அனுராதா ஸ்ரீராம் போன்றவர்களின் புகைப்படங்கள் என் வலையை அலங்கரிப்பது குரித்து எனக்கு மகிழ்சியே.
கவிதைகள் பற்றிய என் கட்டுரைகளின் சில பகுதிகளைக் கொண்டு எழுத்தை பற்றிய இப்பத்தியை நிறைவு செய்வது எனக்கு சுலபமானதாக இருக்கும்.

எழுத்து.... அதற்கு இன்னொரு “நன்றியில் தோய்த்தெடுத்த முத்தங்கள்”

கவிதையைப் பற்றிய எந்தவொரு பேச்சும் முழுமையடையாததே. விடுபடல்களைக் கொண்டதே. கவிதை நம் எல்லாப் பேச்சுகளுக்கும் அப்பால் எங்கோ நிகழ்கிறது. அதனாலேயே நாம் கவிதையைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். ஒரு கணத்தில் கவிதையைப் பற்றி எல்லாம் தெரிந்துவிடுகிறது. இன்னொரு கணத்தில் தெரிந்ததெல்லாம் மறந்து போகிறது. இந்த பேச்சும் முழுமையடையாததே. விடுபடல்களைக் கொண்டதே. இது நிச்சயமற்ற பாதைகளின் வழியே பயணித்து கவிதையை தொட்டுவிட முயல்கிறது


நீங்கள் கவலை கொள்ளாதிருங்கள். நாம் எல்லோரும் கவிஞர்களாகவே இருக்கிறோம். கவிதை நம் வாழ்விலிருந்து மெல்ல அசைந்து முகம் காட்டுகிறது. இவ்வாழ்க்கை மனம் கசந்து அழவைக்கிறது, மகிழ்ச்சியில் திளைக்கடிக்கிறது. காரணமில்லாமல் தனிமைக்குள் தள்ளுகிறது. பயமுறுத்துகிறது. உற்சாகமூட்டுகிறது. தாங்க இயலாத அளவிற்கு அன்பையும் சகிக்க இயலாத அளவிற்கு துரோகத்தையும் பரிசளிக்கிறது. கொலை செய்ய ஆத்திரமூட்டுகிறது. தற்கொலைக்குத் தூண்டுகிறது. அவமானப்படுத்துகிறது. மன்றாட வைக்கிறது. தீராத விசித்திரங்களையும் எண்ணற்ற புதிர்களையும் நமக்கு விரித்துக் காட்டுகிறது. இவை எல்லா மனிதனுக்குள்ளும் பரவலாக நிகழ்பவை. ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், இது போன்ற கணங்களை மொழியின் மூலமாக கடத்தத் தெரிந்தவனை நாம் கவிஞன் என்கிறோம். இப்படியாக கவிதையில் மொழி என்பது ஆகப் பிரதான இடம் வகிக்கிறது. இந்தக் கவிதை மொழி நமக்கு தொடர்ந்த வாசிப்பினாலும் பயிற்சியினாலும் கைவரக் கூடிய ஒன்றே.எனக்கு எழுத்து என்பது எப்போதும் மகிழ்ச்சியான விஷயமாக இருந்ததில்லை. அது ஒரு சிதறடிக்கப்பட்ட மனதின் தவிப்பும் வேதனையுமாகும். ஒரு பெரும் களிப்பை எழுதிக் கொண்டிருக்கும்போதும் எழுதுதல் என்பது ஒரு வேதனையே. இதை தலைகீழாகத் திருப்பி இப்படியும் சொல்லலாம். எவ்வளவு பெரிய துயரத்தை எழுதும்போதும் எழுதுதல் என்பது சந்தோஷமளிக்கக் கூடியதே. எழுத்து ஏன் வேதனையாக இருக்கிறது என்றால் கவிதை யாருக்கும் கைகட்டி சேவகம் செய்வதில்லை. ‘திறந்திடு சீசே’ என்று சொன்ன மாத்திரத்தில் அது திறந்துவிடுவதில்லை. அது நம்மை அலைக்கழிக்கிறது. வேதனை கொள்ளவைக்கிறது. சோர்வை உண்டு பண்ணுகிறது. நம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. கவிஞர் தேவதச்சனுடனான தொலைபேசி உரையாடலின்போது அவர் சொன்னார்,“நாம் 100 கவிதைகள் எழுதியிருக்கலாம். ஆனால் 101வது கவிதைக்கு 100 கவிதைகள் எழுதிய அனுபவம் உதவுவதில்லை.”இது என்னளவிலும் உண்மையாகவே இருக்கிறது. எழுத்து ஏன் சந்தோஷமளிக்கக் கூடியதாக இருக்கிறதென்றால், அது அன்பு செலுத்துவதாக இருக்கிறது. அது எழுதுபவனை நேசிப்பதாகவும் கொண்டாடுவதாகவும் இருக்கிறது, முதலில். பிறகு அது எழுத்தாளனின் காதல்களை கொண்டாடவும் முத்தமிடவும் நன்றி செலுத்தவும் உதவுகிறது. எழுத்து ஏன் சந்தோஷமளிக்கக் கூடியதாக இருக்கிறதென்றால், அது நம் உள்ளுயிரின் வேட்கைக்கு உணவிடுவதாக இருக்கிறது. எதையெதையோ தேடியலையும் மனத்தை அவ்வப்போது ஆற்றுப்படுத்துவதாக இருக்கிறது. எழுத்து என்பது எனக்கு ஒரு வெளியேற்றம். எனது சில கவிதைகள் என்னை பைத்தியமாவதிலிருந்து தப்பிவித்திருக்கின்றன என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். நான் என் எழுத்தின் வழியாக என்னை வதைத்தெடுக்கும் துயரங்களிலிருந்து, தவிப்புகளிலிருந்து, காதலிலிருந்து, காமத்திலிருந்து, வெறுமையிலிருந்து வெளியேறுபவனாக இருக்கிறேன்.------ ------ ----கவிதை சட்டென்று உடைத்துக் கொண்டு என்னுடையதா என்று தெரியாத சொற்களையெல்லாம் திரட்டி தன்னை எழுதிக்கொள்ள முயற்சிக்கிறது. பிறகு நானும் கவிதையும் அமர்ந்து பேசி, சில சொற்களை சேர்த்து, சில சொற்களை நீக்குகிறோம். எப்படியாயினும் எல்லா அமர்விலும் கவிதையே என்னை ஆளுமை செலுத்துகிறது. சில சமயங்களில் எழுதுவதற்கான உந்தம் இருந்தும் எழுத முடியவில்லை. எழுதுவதற்கான பெரிய அவசம் ஏதும் இல்லாத போதும் ஒரு கவிதை நிகழ்ந்துவிடுவதும் உண்டு. இதுபோன்ற கவிதையின் புதிர்களை ஒருக்காலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதனாலேயே கவிதை இன்னும் இளமையின் வசீகரத்தோடு இருக்கிறது''...

Comments

thodarnthu ezhuthungkal sir.

romba nalla irukku.

naangka ungkal ezhuththukkaaka kaaththirukkiroom.
//கவிதையைப் பற்றிய எந்தவொரு பேச்சும் முழுமையடையாததே. விடுபடல்களைக் கொண்டதே. கவிதை நம் எல்லாப் பேச்சுகளுக்கும் அப்பால் எங்கோ நிகழ்கிறது. அதனாலேயே நாம் கவிதையைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். ஒரு கணத்தில் கவிதையைப் பற்றி எல்லாம் தெரிந்துவிடுகிறது. இன்னொரு கணத்தில் தெரிந்ததெல்லாம் மறந்து போகிறது. இந்த பேச்சும் முழுமையடையாததே. விடுபடல்களைக் கொண்டதே. இது நிச்சயமற்ற பாதைகளின் வழியே பயணித்து கவிதையை தொட்டுவிட முயல்கிறது.//
இசை,
உங்கள் உரைநடையும் கவிதையாகவே இருக்கிறது. நீங்கள் இணையத்தில் எழுதுவதன் மூலம் அதற்கென்று இருக்கும் தனிப்பட்ட வாசகர்களை சென்றடைய முடியும்.நிறைய எழுதுங்கள் ,படித்து மகிழக் காத்திருக்கிறோம்.
ஆழமான வார்த்தைகள்.. தெளிவான கருத்துகள்..
அன்புள்ள இசை, பதிவெழுத வந்த கதையை விட கவிதையின் மூலமும் ஆழமும் பற்றி எழுதியிருக்கிறீர்கள். அது பிடித்திருந்தது. இந்தப் பதிவைப் படித்தபிறகு உங்கள் மீதான மதிப்புக் கூடியிருக்கிறது. அந்த உணர்வுகளெல்லாம் எனக்குள்ளும் ஓடுபவையே. ஆனால், அவற்றை வார்த்தைகளில் கொண்டுவர எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

"கவிதை சட்டென்று உடைத்துக்கொண்டு என்னுடையதா என்று தெரியாத சொற்களையெல்லாம் திரட்டித் தன்னை எழுதிக்கொள்ள முயற்சிக்கிறது" போன்ற தருணங்களை நானும் அனுபவித்திருக்கிறேன். ஆம் அன்றிரவு நானும் நீங்களும் சரவணனும் வால்பாறையில் பேசிக்கொண்டிருந்தபோது நானும் நீங்களும் பல ஒத்திசைவுகளை எழுத்தில் கொண்டிருக்கிறோம் என்று சொன்ன வார்த்தைகளை இப்போது மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். அல்லது எழுதும் எல்லோருமே இப்படித்தானோ... இந்த அதிசய அனந்தானந்தங்கள் எல்லோருக்கும் பொதுவானதோ... கவிதைக்கடவுளொன்றே அறிவார்:)

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம