Skip to main content

கவிதை







டம்மி இசை



வீட்டிலிருந்து 15 நாட்கள்
விடுப்புவேண்டி இருப்பதால்
அமானுஷ்யத்தின் துணைகொண்டு
ஒரு “டம்மிஇசையை” உருவாக்கினேன்.
அதற்கு என் நடை உடை பாவனைகளை கற்பித்தேன்.
ஒரு அலைபேசியை கையளித்தேன்.
மனமுருக அதன் கரங்களைப் பற்றுதலால்
நன்றி பகன்று விடைபெற்றேன்.
மறுநாளே அழைத்த அது
என் மகனின் வீட்டுப்பாடங்கள்
ரொம்பவும் கடினமாக இருப்பதாக சொன்னது.
நாளுக்கு நாள் அதன் புகார்கள்
அதிகரித்துக் கொண்டே வந்தன.
புதிததாய் தனக்கு மூச்சுமுட்டும் வியாதி கண்டிருப்பதாகவும்
சீக்கிரம் வந்துவிடும் படியும்
அது நச்சரிக்கத்துவங்கியபோது
நானதனை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டினேன்.
அமானுஷ்யக்காரரிடம் சொல்லி விடுவதாக மிரட்டினேன்.
பிறகு அதன் அழைப்புகள் நின்று விட்டன.
விடுமுறையின் ஏகாந்தம் முடியும் கடைசி நாளில்
என் வருகையைத் தெரிவிக்க
நான் அதை அழைக்க ,


ஒரு பெண் குரல் சொன்னது
“நீங்கள் தொடர்புகொள்ளும்
வாடிக்கையாளர்
பிரபஞ்சத்திற்கு வெளியே இருக்கிறார்”


நன்றி; கல்குதிரை
.

Comments

ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு... நான் ரசிக்கும் இசையின் அருமையான கவிதை..
நடைமுறை வாழ்க்கையில் மனிதர்கள் படும்பாட்டை மிக யதார்த்தமாக கவிதையாக... வாழ்த்துகள் சகோ...
Thendral said…
Can't replace original Isai 😇. Literally laughed out loud