1.அவனைக் கொண்டு போய் நீ அருவிக்கு பக்கத்தில் நிறுத்தினாய். பிறகு அருவிக்குள் கொண்டு நிறுத்தினாய். அவன் இது வரை பார்தேயிராத அருவி அது. தண்நீர் அவன் தலையில் விழுந்து தேகமெங்கும் வழிந்தது. மெல்லிய விசும்பல்களை, ஒரு கனத்த அழுகையை அது கரைத்துக் கொண்டோடியது. அவன் அப்போதே அங்கிருந்து ஓடி விடத் துடித்தான். நீ தான் விடவில்லை. இன்று துரத்தியடிக்கப்பட்டிருக்கிறான். 2. நீ அவனுக்கென மதுரமான உணவுகளைச் சமைத்தாய். அழகான விரிப்புகள் போர்த்தப்பட்ட மேசையில் இருத்தினாய். பளிங்கு போன்ற குடுவையில் நீர் வைத்தாய். அவன் பசியறியாதவள் நீ. அவன் முகம் முழுக்க சாப்பிட்டான். நெஞ்செங்கும் நீர் குடித்தான். காணச் சகியாத நீ கண்களைத் திருப்பிக் கொண்டாய். 3. நாம் கதைகளில் மட்டும் படித்திருக்கிற பொன் நிறப் பறவையொன்று அவன் வீடு தேடி வந்தது. கண் கூசி முகம் ஜொலித்தது அவனுக்கு. 100 முறை ஸ்பரிசித்து விட்டால் ஓடி விடும் பறவை அது. அவன் முதல் நாளே 74 முறை தடவிக் கொடுத்தான். பிறகு விவரம் அறிந்து பதறியவன் இனி தொடவே மாட்டேன் என்று சொல்வதற்காக நூறாவது முறை தொட்ட...