Friday, July 2, 2010

இரண்டு கவிதைகள்


இந்த முறை சுவர்ணலதா சரியாகப் பாடவில்லை.

அவன் வேண்டுவது ஒரு பிரதி.

15/01/2009 ன் பிரதி.

அதாவது 15/01/2010 என்கிற வெள்ளைத்தாளில்

15/01/2009 ன் பிரதி.


அந்த நாளின் அதே ஆடையை

முன்பே தாயார் செய்து வைத்திருந்தான்.

அன்று போலவே லேசான தாடியை உருவாக்கியிருந்தான்.

அறுந்து போன அந்த செருப்புக்கு பதிலாக

அதே ரகத்தின் புதிய செருப்பை அணிந்திருந்தான்.

அதே பேருந்தில் ஏறி

அதே எண் கொண்ட இருக்கையில் அமர்ந்து

அப்படியே தலை சாய்த்து

அதே பாடலைக் கேட்டான்.


முன்னிருக்கையில் ஒரு சிறுமி அழுதுகொண்டிருந்தாள்.

அவள் தகப்பன் அவளிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

அவள் அன்றைப் போலவே ஒரு நீல நிற பலூனைக் கேட்டாள்.

அவனும் அதையே தான் வாங்கித்தந்தான்.

ஆனால் இதில்லை என்று அவள் மறுத்துக்கொண்டிருந்தாள்.

அவன்

அதான் பாப்பா இது

அதான் பாப்பா இது என்று தேற்றிக்கொண்டிருக்க

அவள் அதில்லை அதில்லை என்று அழுது கொண்டிருக்கிறாள்

  • .

அது பசுவனத்துள் தொங்கும் ஒரு வெள்ளருவி

குரங்குகள் குவிந்திருக்கும் மலைவெளி.

மரங்களின் முடியேறி, அடிசறுக்கியாடுகின்றன அவைகள்

களிப்பின் மது குடித்து.

களித்து களித்து

மரத்தை களிப்பு மரமாக்கி

மலையை களிப்பு மலையாக்குகின்றன.

இப்படியாக களிப்பை ஒரு குரங்கென்று கொண்டால்

அன்று மூன்று குரங்குகள் குதியாளமிட்டன அங்கு.

ஒரு குரங்கு இவன்.

இன்னொன்று இவன் தோழி.

மற்றொன்று இவன் தோழன்.

ஒரு யோசனையும் மூடிக்கொள்ளாது

நாள் முழுக்க திறந்துகிடந்தன அந்த முகங்கள்.

அவர்கள் அன்றைய வெள்ளருவிக்கு

மகிழ்வருவி என்று பெயர்சூட்டினர்.

மகிழ்வருவி மூவரையும் ஒன்றாக அணைத்துக் கொண்டது.


இன்று கொள்ளை யோசனைகளால்

மூடிக்கிடக்கும் இவன் முகம்

யோசனைகளற்ற அந்த கணத்தை நோக்கி ஓடுகிறது.

மகிழ்வருவிக்குத்தான் போகிறது இப்பேருந்து.

அதாவது 15/01/2009 ன் மகிழ்வருவிக்கு.


அவனுக்கு தான் அன்று அணிந்திருந்தது

இந்த ஆடையா என்று சந்தேகம் வந்துவிட்டது

அன்றைய வெயில் இப்படி முறைத்துக் கொண்டிருக்க வில்லை.

அதற்கு அழகான சின்னஞ்சிறு கண்கள்.

இன்றைக்கு வழித்தடங்களில் ஒரு சிறுவனும் கைஅசைக்கவில்லை.

பக்கத்து இருக்கை காலியாயில்லை.

இந்த முறை சுவர்ணலதா சரியாகப் பாடவில்லை.

'' கேட்டு கேட்டு கிறங்க இயலவில்லை".

"கடல் தெரியவேயில்லை."

அந்த மரத்தடியில் ஒருவரும் காத்திருக்க வில்லை.

அவளை அவன் காதலன் அனுமதித்திருக்கவில்லை.

தோழனின் குழந்தைக்கு திடீரென உடல் நலமில்லை.


இருவராகவும் நானே இருப்பேன் என்று சொல்லிவிட்டு

ஒரு கோப நடை நடந்து போனான் அருவி நோக்கி.

அருவிக்கு அடியில் நின்று குளிப்பவன் போல் அல்ல

அருவிக்குள் குதிப்பவன் போல் இருந்தது அவன் முகம்

அம்முகத்தில் திடீரென ஒரு பெருஞ்சலனம்

பிறகு நிச்சலனம்

அங்கு நின்று கொண்டிருந்த

எச்சரிக்கைப்பலகை ஒன்று சொன்னது

“இவ்வருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது... “


15.01.2010 இன் வெள்ளைத்தாள் வெளியே வந்தது

எரிக்கப்பட்டது போல் அது கருத்திருந்தது.

கைக்கிளை, பெருந்திணை, இன்ன பிற

V}

வள்ளுவன் ஒரு நல்ல கவி

என்று அடிக்கடி சொல்லும் தலைவன் தான்

நேற்றவரை

கெட்ட வார்த்தையால் திட்டியது.

1}

தலைவனுக்கு சித்தம் கலங்கி

சீர் அழியும் முன்

எழுதப்பட்டது இக்கவிதை.

அல்லது

இதை எழுதி

சீரழிந்து போனான்.

111}

தலைவியைப் பற்றிய தலைவனின் கூற்றுகள் சில ...

இதமான குளிர், கொத்துமலர் கருங்குழல்,அதிகாலை புள்ளொலி, செந்தழல் கங்கு, ஒட்டுவாரொட்டி,காணாக்கடி,பல்வலி,

நல்மேய்பள், ஊக்கமருந்து, உடனுறைவிடம், இள ரவிக்கதிர், அதிரஸக் கலை,

கலாமயில் ரூபினி, நயவஞ்சகி, அகங்காரி, சொற்களின் நர்த்தகி,

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தரு, வானளந்து நிற்கும் ஐந்தடி,

இன்னொரு கபாலம் கேட்கும் கங்காளி ...

11}

தூக்கம் வருகிறது.

ஆனால் தூங்க இயலவில்லை

பசிக்கிறது

ஆனால் உண்ணமுடியவில்லை

என்கிற குறுஞ்செய்தியை

நள்ளிரவு 2;40 க்கு

தன் நண்பர்களுக்கு அனுப்பினான் தலைவன்

காலையில் அதைக் கண்ட நண்பர்கள்

சத்தமிட்டு சிரித்தனர்.

தலைவன் அழுதான்.

1V}

மனம் ஒரு உறுப்பாக மட்டும் இருந்திருந்தால்

இன்னேரம் அதை வெட்டி

தூர ஏறிந்திருப்பான் தலைவன்.
நன்றி: உயிரெழுத்து- ஜீலை 20101 comment:

ராம்ஜி_யாஹூ said...

i thought post relating to playback singer swarnalathaa ( poraale ponnu thaayi, en veetu totatthil, tirumana malargal..)