இந்த கட்டுரை சார்ந்து உங்களின் பொருட்படுத்தலுக்காக முதலிலேயே சில விஷயங்களை சொல்லி விடுவது உத்தமம். நான் கவிதைகள் எழுதி வருகிறேன். ஆனால் கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள் பத்தைத் தாண்டாது. நான் சிறுகதைகள் எழுதுவதில்லை. உலகின் தலைசிறந்த பத்துகதைகளுள் ஒன்று என்கிற நினைப்பில் என்னால் எழுதப்பட்ட இரண்டு சிறுகதைகள் பிரசுர வாய்ப்பை பெறவில்லை.தவிர கொலைக்களத்திலிருந்து எழுதப்பட்டிருக்கும் இக்கதைகளை தின்று கொழுத்து, ஊதிப்பெருத்திருக்கும் சுகவாசியான நான் விமர்ச்சிக்கப் போகிறேன்.மேலும் இது என் முதல் சிறுகதை விமர்சனம். இக்கதைகள் தொகுப்பாக்கப் பட்ட ஆண்டு 2004. இதில் இருக்கும் சில கதைகள் 2000 ல் எழுதப்பட்ட்வை. ஆக சுமார் 10 வருட இடைவெளியில் நமது மண்டையை கொஞ்சம் பெரிதாக்கிக் கொண்டு 2012 இக்கதைகளை விமர்சிக்கப் போகிறோம். திசேராவின் கதை சொல்லல் முறை ரொம்பவும் நிதானமானது.உணர்வெழுச்சியால் பீடிக்கப்பட்டு பீறிட்டெழும் மொழிதல் அனேகமாக எந்தக் கதைகளிலும் இல்லை. ”குண்டுகள் எங்காகிலும் வெடித்துக் கொண்டே இருக்கின்றது” என்று துவங்கும் கதையிலும் கூட. இந்த நிதானமான மொழிதலோடு ஒரு மென் அங்கதம் தொகுப்பின் எல்லா கதைக...