Skip to main content

பன்னிருவிழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்..



   தேங்காய்மூடி கச்சேரியின் முன்
  ஒற்றை ஆளாய் அமர்ந்திருக்கிறேன்.
  ஸ்ருதி சேரவில்லை...
  தாளம் தட்டுகிறது....
  வெள்ளி அடிக்கிறது...

  என் அமர்ந்தகோலம் மாறவில்லை

  ஒரு மகாவித்வான் எப்படி சொக்குவாரோ
  அப்படியே தான் இவரும் சொக்குகிறார்
  எங்கெங்கு சொக்க வேண்டுமோ அங்கங்கு.

  அந்தப் பாடல் எழுந்து பறக்கும் இடத்தில்
  சரியாக, மிகச்சரியாக 
  பெட்டி போடுபவரும் சேர்ந்து கொள்கிறார்
  இரண்டு வெள்ளியும் சேர்ந்தடிக்கையில்
  என் மடி நனைந்து விடுகிறது

 கண்களை மூடிக்கொண்டு தலையை உருட்டும்
 இந்த தபெலாக்காரருக்கு என்ன தெரிகிறதென்று 
 எனக்குத் தெரிகிறது

 உள்ளதிலேயே பொடித்தேங்காய்ளாகப் பொறுக்கி
 கேரிபேக்கில் போட்டு முடிச்சிடப்பட்டுக் கொண்டிருக்கும்
 இந்தக் கோவிலின்
 கோபுரகலசத்தின் உச்சியில்
 தீடீரென, எங்கிருந்து வந்ததென்றே  தெரியாமல்
 ஒரு மயில் வந்து குந்துகிறது.

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை