Skip to main content

இரு கவிதைகளைப்பற்றி - சாம்ராஜ்










 சமகாலத்தில் நவீன தமிழ்க் கவிஞர்கள் பெரும்பாலும் சூதுகவ்வும் திரைப்படத்தின் நாயகனைப்போலவே இருக்கின்றனர் மானசீகமாக இல்லாத ஒரு பெண்ணை கற்பனை செய்துகொண்டு, அவளோடு வாழ்வதாக, காதலிப்பதாக, புணர்வதாக, பினங்குவதாக, பின்பு மரிப்பதாக பாவனை செய்கின்றனர்.

     சாத்தான், கிழக்கடவுள், புணர்தல் இன்;னும் சில உடல் உறுப்புக்களை குறிக்கும் சொற்களுக்கு தமிழ்க் கவிதைகளில் தடை விதிக்கப் படுமேயானால் ஒரு பெருந்திரள் கவிஞர்கள் கவிதைப் பரப்பிலிருந்து விலகி விடுவார்கள் என்றே தோன்றுகிறது.

நல்ல கவிதையை வாசிப்பதென்பது மதுரைப் பகுதியில் நடக்கும் திருவிழாக்களில் நிகழ்த்தப்படும் மூன்று சீட்டு விளையாட்டு போல ஆகிப்போனது. நிகழ்த்துபவர்களே எப்பொழுதும் ஜெயிக்க, மிக அரிதாகவே நாம் வெல்கிறோம். வினையத்துடன் சுருட்டப்படுகிறது. விரிக்கப்பட்ட சாக்கு இத்தனை சோதனைகளையும் தாண்டி (உண்மையாகவே அது சத்திய சோதனைதான்) பயணப்படும் பொழுது அரிதான, அசலான குரல்களை கேட்கிறோம். அப்படியான அசலான குரல்களில் ஒன்றாகவே நான் லிபி ஆரண்யாவையும், இசையையும் கருதுகிறேன்.

          உள்ளே வைத்து உடைப்பவர்கள் –    லிபி ஆரண்யா

பொதுவாக இடதுசாரி கவிஞர்கள் பிரகடனங்களை மாத்திரமே எழுதக் கூடியவர்கள். அவர்களுக்கு கோசங்கள் மாத்திரமே வரும். அவர்களின் கொள்கை அறிக்கை மறு வடிவமே கவிதை என கடும் குற்றச்சாட்டு எப்பொழுதும் உண்டு. அந்த விருதை வாங்குவதற்கு தாங்களும் முழு தகுதி வாய்ந்தவர்கள் என்று விடாது நிரூபிப்பார்கள் இடதுசாரி கவிஞர்கள். அதனிலிருந்து வேறுபட்ட ஒரு குரலாக, கூர்மையான பகடியை, சாடலை கவிதைக்கான கலை நியாயங்களை தவற விடாதவையாக லிபியின் கவிதைகள் இருக்கின்றன.
இயற்கை அழித்தல், தண்ணீர் பஞ்சம், சிறுநீரகக்கல், தனியார் மருத்துவமனை, சிண்டெக்ஸ் டேங்க், ஹார்லிக்ஸ், மலைகளை உடைத்து குவாரியாக்குபவர்களே நம் குடலுக்குள் கற்களை கடத்திவிடுகிறார்கள், பின்பு அவர்களே மாறு வேஷத்தில் வந்து அறுவை சிகிச்சையும் நடத்துகிறார்கள் என்பதை கவிதையாக்க முடியுமா என்ன ? லிபியினால் முடிந்திருக்கிறது.

இந்த உலகமயமாக்க சூழலில் எல்லாம் ஒன்றோடொன்றாய் பிரிக்கவே முடியாத அளவுக்கு பின்னிக் கிடக்கிறது, குழம்பிக்கிடக்கிறது. இப்படி குழம்பிக் கிடப்பதாக நம்மை நம்ப வைப்பதில்தான் அவர்களின் “வெற்றியும்” இருக்கிறது. இந்த மாயப்பின்னலை பிரித்து, ஒரு மேசையின் மீது துலக்கமாக பரப்பி வைப்பதில்தான் ஒருஇடதுசாரி கவிஞனின் அல்லது அரசியல் பிரக்ஞை உடையவனின் பணி. அது துல்லியமாக இந்த கவிதையில் நிகழ்ந்தேறியிருக்கிறது. ?


    முன்பொருகாலத்தில் குணசேகரன் என்று ஒருவன் இருந்தான் -  இசை

80களின் நடுப்பகுதியை சேர்ந்தவர்கள் இந்த குணசேகரன்கள். அரசியல் பிரக்ஞையோடு எதோ ஒரு இடது சாரி இயக்கத்தோடு இணைந்து, முழு நேரமாக இயங்கி, பின்பு அதனோடு முரண்பட்டு, விலகி, இந்த சமூகத்தோடும் தங்களை பிணைத்துக் கொள்ள முடியாமல் தவிப்பவர்கள்ஃசரியாக சொன்னால் தவித்தவர்கள் (இன்றைக்கு குணசேகரன்கள் மிகக் குறைவு) அந்தரங்கமாய் நான் பல குணசேகரன்களை அறிவேன். பலவிதமாய் மரித்த, மனம் பிறழ்ந்த குணசேகரன்களை.


                   இந்தக்கவிதை பெரிதும் என்னை துக்கம்கொள்ள வைக்கிறது. இந்த குணசேகரன்கள் இதுவரை தமிழ் இலக்கியத்திற்குள் தென்பட்டதே இல்லை. சேஷய்யா ரவி, புதிய ஜீவா போன்றவர்கள் 90களின் நடுப்பகுதியில் இவர்களைப் பற்றி ஒரு மெலிந்த சித்திரத்தை தீட்ட முயற்சித்தார்கள் “முன்பொரு காலத்தில்” என்று கவிதை துவங்குவதே ஒரு குரூர பகடிதான். படிப்படியாக இந்தக்கவிதை ஒரு வெறுமை ஓவியத்தை சித்தரிக்கிறது


      குணசேகரனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர்
      நண்பர்களுக்கு மனைவிகளும் காதலிகளும்
       செல்லக்குட்டிகளும் புச்சுப் பையன்களும்  இருந்தனர்

   எனும்பொழுது அடர்த்தி கூடுகிறது

நிலா உதிக்கத் துவங்கிய பொழுதில்
நண்பர்கள் ஒவ்வொருவராக வற்றத்தொடங்கினர்
அருகிருக்கிற நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் மணி
தனியனின் செவிகளில் ஓலித்தது
பல்லாண்டுகள் கழித்து கடவுளுக்கு
காட்சியளிப்பது குறித்து அவன் யோசித்தான்

எனும்பொழுது துயரத்தில் ஆழ்ந்து...

ரயில் கடக்கட்டும் என்று காத்திருந்தவன்
கடைசிப் பெட்டிக்கும் முந்தைய
பெட்டிக்குமிடையே ரயிலைக் கடந்தான்

என முடிகையில் கவிதை அதன் உச்சத்தை அடைகிறது.

ஒரு நல்ல கவிதைக்கான எல்லா சாத்தியங்களையும் படிப்படியாக திரட்டிக்கொண்டு பயணிக்கிறது இக்கவிதை.
மனிதர்களின் மகா பெரிய துயரமே தனிமைதான். நீங்களும் நானும் எப்பொழுதேனும் புசித்து பார்த்ததே அத்தனிமை அந்தரங்கமாய் ஏதோ ஒரு கணத்தில் நம்மை நாம் இந்த வாழ்வில் குணசேகரன்களாக உணர்ந்திருக்கிறோம். நமது வழியிலும் ஆளில்லா லெவல் கிராஸிங் வந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக அல்லது அகத்திலிருந்து சொன்னோமேயானால் துரதிர்ஷ்டவசமாக ஒரு பாசஞ்சர் இரயில் கூட அந்த நேரத்தில் வரவில்லை.

நன்றி

[ஏற்காட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை ]



Comments

Popular posts from this blog

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

கோயில் கோயிலுக்குள் நுழையும் வேடிக்கை

உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும்  அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில்  மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி  முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு  வேறொரு காதல்  இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு  கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

இரண்டு உறுதிகள்

“ஒ ன்பது மணிக்கு சடோன்னு தண்ணி ஏத்தறவங்க  ஏத்திக்கோங்க..” வீதியில் கூவிய படி செல்கிறாள் பரிமளா மூன்று குழந்தைகளுடன் மல்லுக்கட்டும் தனிக் கல்யாணி மில்லுக்குக்  கிளம்பும் பரபரப்பிற்கிடையே மோட்டர் ஸ்விட்ச்சின் மீது பாய்கிறாள் பரிமளாவிற்கும் கல்யாணிக்கும் தீராத பகை மனத்தாங்கல் அல்ல , கை கலப்பு அதுவும்  நாலு முக்கில் வைத்து  பரிமளாவிற்கு கல்யாணியுடன் ராசி ஆக வேண்டும் என்று ஒரு அவசியமுமில்லை சாகிற வரைக்கும் சங்காத்தம் கிடையாது இது உறுதி. மொத்த வீதிக்குமான கூவலே எனினும் அதைக்  கல்யாணி வீட்டு முன்தான் கூவினாள் இதுவும் உறுதி.